உடுமலை சங்கர் கொலை வழக்கு:



தீர்ப்புகளும் விளைவுகளும்


காதல் திருமணம் செய்துகொண்ட உடுமலைப்பேட்டை சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் குறிப்பாக முதல் குற்றவாளி விடுதலையாகி இருப்பதே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இவ்வாறு தீர்ப்புகள் அடியோடு மாற்றப்படுவது நீதிமன்ற வரலாற்றில் புதிதல்ல. பல்வேறு வழக்குகளில் இதுபோல் கீழ் நீதிமன்றங்களுக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும்  தீர்ப்பு வழங்குவதில்  முரண்பாடுகள் இருந்ததுண்டு.

திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை சிசிடிவி காட்சிகளுடன் நிரூபிக்கப்பட்டது. கொலையாளிகள், சங்கரை கொலை செய்ய  எந்தத் தனிப்பட்ட காரணங்களும் இல்லை. அவர்களை  தூண்டிவிட்டவர் சின்னசாமி என்பதால்தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவருக்கு அதிகபட்ச தண்டனை திருப்பூர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது.

அவரது முயற்சியிலேயே கொலையாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டதும் விடுதிகளில் அறைகள் பதிவு செய்யப்பட்டதும் நிரூபிக்கப்பட்டு இருந்தாலும், அவர் கொலையாளிகள் உடன் பலமுறை தொலைபேசியில் பேசி இருந்தாலும் அவை சங்கர் கொலையுடன் தொடர்புடையவை என்று அரசு தரப்பால் நிரூபிக்கப்படாததே இந்த அதிர்ச்சியளிக்கும் தீர்ப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 இந்தத் தீர்ப்பு சமூகத்தில் எந்தவிதமான விளைவை ஏற்படுத்தும் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

கண்டிப்பாக ஆணவக்கொலைகளைத் தூண்டுவதாகவும், அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாக தான் இருக்கும்.

சமூக வலைத்தளங்களில் நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பை காட்டிலும் அதிகமாக   விமர்சிக்கப்பட்டது தோழர் கவுசல்யா அவர்கள் அமைத்துக்கொண்ட மறுவாழ்வு.

ஜாதி வெறியர்கள்  அவரை தரக்குறைவாக   கடுமையாக விமர்சிக்கின்றனர் புதிதாக தெரியவில்லை. ஆனால், கௌசல்யாவின் திருமணத்தை வரவேற்றவர்கள், பாராட்டியவர்கள், வாழ்த்தியவர்கள்  இந்த தீர்ப்புக்குப் பின் கடுமையாக விமர்சிக்கின்றனர். அதுதான் நமது புரிதலில் சிக்கலை ஏற்படுத்துகிறது.

“கௌசல்யாவுக்கு வாழ்க்கை கிடைத்துவிட்டது. அவரை தந்தை விடுதலை செய்யப்பட்டு விட்டார்.  ஆனால் சங்கர் பெற்றோர் தான் சங்கரை இழந்துள்ளனர்”

“கௌசல்யா அப்பா விடுதலையாகி விட்டார். கௌசல்யா புதுவாழ்வு பற்றி ஜாலியாக இருக்கிறார். சங்கர் இறந்ததுதான் மிச்சம். இதற்கு தான் சொல்வது சொந்த சாதியிலேயே திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்கிறோம்.”

மேற்கண்ட இரண்டில் ஒன்று இடதுசாரி சிந்தனை உள்ளவர் கூற்று; மற்றொன்று வலதுசாரி சிந்தனை உள்ளவரின் கூற்று;

முதல் கூற்றைப் பதிவிட்ட தோழர் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். கௌசல்யாவையும் கொலை செய்வது தான் அவர்கள் நோக்கம். அவர் காயங்களுடன் தப்பி விட்டார். இந்த நிலையில் இந்த கருத்தை பதிவு பதிவிடும் தோழர் கவுசல்யாவும் இறந்திருக்க வேண்டும் என்று விரும்புகிறாரா? அல்லது வாழ்நாள் முழுவதும் அவர்  திருமணம் செய்து கொள்ளாமலேயே இருக்கவேண்டும் என்று விரும்புகிறாரா?

இரண்டாவது கூற்றை பதிவிட்டவர் பற்றி நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஏனென்றால்  பார்ப்பனியத்தின் சூழ்ச்சிக்கு பலியாகி நோய்க்கான காரணம் தெரியாமல் நோயுடன் போராடும் சாதிய மனநோயாளி அவர்.

இந்த வழக்கை பொறுத்தவரை வழக்கை நடத்திய அரசு தரப்பு நடவடிக்கை அக்கறையின்மை, நீதிபதிகளின் கண்ணோட்டம் ஆகியவைதான் இந்த தீர்ப்புக்கு காரணிகளே தவிர, தோழர் கவுசல்யாவின் மறுமணம் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

மற்றொன்றையும் நினைவில் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்குவதால் மட்டுமே ஆணவக் கொலைகளை ஒழித்துவிட முடியாது. ஆனாலும் தவறு செய்தவர்களுக்கு தண்டனை கிடைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் என்பதுடன், பெற்றோரில் மிகச்சிலர் தவறுகளை செய்ய முன்வர மாட்டார்கள் அல்லது அஞ்சுவார்கள் என்று நம்பலாம்.

ஆனால், முழுமையாக இதைத் தடுத்து நிறுத்தும் முயற்சி என்பது சட்டரீதியாகவும் சமூக ரீதியாகவும் முழுவீச்சில் நடைபெற்றாக வேண்டும்.

கௌரவக்கொலை, ஆணவக்கொலை இரண்டும் ஒன்று போல் நமக்கு தெரியலாம். ஆணவக்கொலை என்பது நான்  ஜாதியில் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற ஜாதி ஆணவம் மிக்க எண்ணத்திலிருந்து தோன்றி வெளிப்படுவதாகும். இதுகாதல் திருமணங்களுக்கு எதிரானதாக மட்டுமல்ல பல்வேறு காரணங்களுக்காக செய்யப்படலாம்.

கௌரவ கொலை என்பது ஜாதி தமக்கு பெருமை என்று கருதுவதை காப்பாற்ற அல்லது உறவினர்களிடம் தமது பெருமையைக் காப்பாற்ற, தான் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வது. இரண்டுக்குமான மனநிலைகள் வேறுவேறு.

முதல் வகை கொலையாளிகளியிடம் இருந்தே வெளிப்படுகிறது. இரண்டாவது வகை பெரும்பாலும் அவர்களது சுற்றத்தால் உறவுகளால் தூண்டப்படுகிறது. சில இடங்களில் அது கொலைகளாக இல்லாமல் தற்கொலைகளாக மாறுவதும் உண்டு.

இந்த இரண்டாவது வகைக்கு எதிராகச் செயல்பாடுகளை முடுக்கிவிட வேண்டும். ஜாதி சங்கப் பொறுப்பாளர்கள்,  ஜாதியில் கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள், உறவினர்கள் ஆகியோரின் வற்புறுத்தல் களே இதற்குத் தூண்டுதலாக அமைவதால் ஜாதிச் சங்கங்களையும், கட்டப்பஞ்சாயத்துகளையும் அரசு உடனே தடை செய்ய புதிய சட்டங்களை கொண்டு வர வேண்டும். இத்தகைய ஜாதிய ஏற்றத்தாழ்வு நிலைநிறுத்த உதவும் ஆகியவற்றை சம்பிரதாயங்கள் சடங்குகள் ஆகியவற்றை ஒழிக்க பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதே இதற்கு தீர்வாகும்.

– வை.கலையரசன்




Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *