திராவிட கட்சிகள் ஒன்றும் செய்யவில்லையா?

தமிழகத்தில் திராவிடர் இயக்கம் சாதித்தது மலையளவு. அவற்றை ஒரே கட்டுரையில் சொல்லிவிட முடியாது என்றாலும் ஒரு குறிப்பிடத்தகுந்த சாதனையை மட்டும் இந்த தேர்தல் நேரத்தில் அவசியம் சொல்லியாக வேண்டும். தமிழகத்துக்கு திராவிடக் கட்சிகள் எதையுமே செய்யவில்லை என்ற சிலரின் கற்பனாவாதத்தை முறியடிக்க வேண்டியது அவசியம்.

கேவலம் ஒரு தேர்தல் வெற்றிக்காக, 50 ஆண்டுகள் தமிழகத்தை திராவிடக் கட்சிகள் சீரழித்துவிட்டன என்று ஒரு பொய் மீண்டும் மீண்டும் பரப்பப்படுகிறது!

மனிதவள மேம்பாடு தொடர்பாக ஐநா சபை கடந்த ஆண்டு வெளியிட்ட பட்டியலில் இந்தியா 130வது இடத்தைப் பிடித்தது. இந்தியாவில் உள்ள மாநிலங்களை வரிசைப்படுத்தும்போது கேரளாவுக்கு முதலிடம், ஹிமாச்சல் பிரதேசத்துக்கு இரண்டாம் இடம், தமிழ்நாட்டுக்கு மூன்றாம் இடம் கிடைத்தது.

தமிழ்நாட்டைப் போலவே பெரிய மாநிலங்களான மகாராஷ்டிராவும் குஜராத்தும் பின்தங்கியுள்ளன என்பதை கவனியுங்கள்!

மனிதவள மேம்பாட்டு குறியீட்டை வருவாய், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றின் அடிப்படையில் கணக்கிடுவார்கள்.

அந்த வகையில் கேரளாவையும் ஹிமாச்சலையும் தமிழ்நாட்டோடு ஒப்பிட முடியாது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறியிருக்கிறார்கள். காரணம், கேரளாவின் வருவாய் பெரும்பகுதி வெளிநாட்டில் இருப்போர் சம்பாதித்து அனுப்பும் வருவாய். ஆகவே கேரளாவில் இருப்பது Money Order Economy என்று பொருளாதார நிபுணர்கள் சொல்கிறார்கள். கேரளாவில் சொல்லிக்கொள்ளும்படி தொழிற்சாலைகளும் கிடையாது.

ஹிமாச்சலைப் பொருத்தவரை, அது மலைப்பகுதி, குறைந்த மக்கள்தொகை உள்ள மாநிலம். அதனால் மக்களுக்கு போதுமான அளவு நிலம் கிடைத்தது. அதோடு, அங்கு caste rigidity இங்கு இருக்கும் அளவுக்கு கிடையாது. எனவே, அந்த வகையில் பார்த்தால் தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் தமிழத்தின் பொருளாதாரத்தைப் பாராட்டியிருக்கிறார். காரணம், தமிழகத்தில் இருப்பது productive economy.

கல்வி, சுகாதாரம் என்ற குறியீட்டில் பார்த்தால் தமிழகம் பிற எல்லாம் மாநிலங்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

கல்வியில் அனைத்து ஜாதி மக்களுக்குமான வாய்ப்பு திராவிடர் இயக்கத்தால்தான் சாத்தியம் ஆனது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தான் 69 சதவிகிதம் வரை மருத்துவக் கல்லூரியிலும் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி வாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது.

ராமதாஸ், தமிழிசை ஆகியோர் படித்து டாக்டரானது இந்த இடஒதுக்கீட்டால்தான்! இந்த சமூகநீதியை வென்றெடுக்க திராவிடர் இயக்கத் தீரர்கள் செய்த தியாகங்கள் சொல்லில் அடங்காதவை!

இன்றைக்கு அனைத்து சமூகத்திலும் ஏராளமான மருத்துவர்கள் உண்டு. ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும்கூட ஒருவர் மருத்துவர் ஆகியிருக்கும் வாய்ப்பு. கடந்த திமுக ஆட்சியில் கலைஞர் அருந்ததியருக்கு இடஒதுக்கீடு வழங்கினார். இதோ, இப்போது அந்த அருந்ததியர் சமூகத்தில் இருந்து ஒரு பெண் முதல் மருத்துவராக வந்திருக்கிறார்.

இதனால், ஏற்பட்ட சமூக மாற்றத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! Health Careல் தமிழகம் ஏன் சிறப்பாகத் திகழ்கிறது? Effective implementation of healthcare schemes இங்கே எப்படி சாத்தியமானது? யோசித்துப் பாருங்கள்.

திராவிடர் இயக்கம் கொடுத்த இடஒதுக்கீட்டின் காரணமாக இன்று எல்லா சமூகத்திலும் மருத்துவர்கள் உருவாகிவிட்டார்கள். ஒரு பெண்ணுக்கு பிரசவம் என்றால்கூட, என்னுடைய சொந்தக்காரப் பெண் பக்கத்து ஊரில் மகப்பேறு மருத்துவராக இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள் என்று யாரேனும் ஒருவர் சொல்வதை நாம் கேட்டிருக்கிறோம்.

இதயச் சிகிச்சை என்றாலும்கூட யாராவது ஒருவர் அவருக்கு தெரிந்த மருத்துவரை நமக்கு பரிந்துரை செய்கிறார்கள். சாதாரண காய்ச்சலுக்குக் கூட நமக்கு தெரிந்த மருத்துவருக்கு போன் செய்து மாத்திரை, மருந்து பெயர் கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறோம்.

நமக்கு தெரிந்த, நம் ஊரைச் சேர்ந்த அல்லது நமக்கு தெரிந்தவருடைய அறிமுகமான மருத்துவர் என்று ஊரில் உள்ள எல்லா பெரிய மருத்துவமனைகளிலும் இருக்கிறார்கள். நாம் அவர்களை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்கிறோம். சுகாதாரத்துறையில் ஒரு Social Access கிடைத்தது எப்படி? இந்த துறை Elite Controlலில் இருந்தால் சாதாரண மக்களுக்கு இது சாத்தியமாகுமா?

இவையெல்லாம் என்ன கனவில் நடந்ததா? அல்லது ஒரே நாளில் நடந்ததா? திராவிடர் இயக்கத்தின் மகத்தான சாதனை அல்லவா இது? எதோ போகிற போக்கில், திராவிடர் இயக்கம் தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யவில்லை என்று சொல்லிவிட்டு போகிறீர்களே, உங்களுக்கு மனசாட்சி உண்டா?

போய் குஜராத்தையும் மகாராஷ்டிராவையும் மேற்கு வங்கத்தையும் பாருங்கள் சுகாதாரத் துறையில் இதுபோன்ற Social Access உண்டா? மேல்தட்டு சமூகத்தின் கையில்தானே சுகாதாரத் துறை இருக்கிறது. மறுக்க முடியுமா? மண்டல் பரிந்துரை அமலாக்கத்துக்கு பிறகுதானே இந்த நிலையில் சிறிய மாற்றம் தென்படத் தொடங்கியிருக்கிறது.

கல்வியில், சுகாதாரத்தில், வருவாயில் என்று தமிழகம் சிறந்து விளங்குவதற்கு காரணம் திராவிடக் கட்சிகள் தானே! இன்றைக்கு மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வை மத்திய அரசு புகுத்தும்போது, அதை வலுகொண்டு திமுகதானே எதிர்க்கிறது?

சிந்தியுங்கள்! திமுக நமது இயக்கம், நம் மக்களுக்கான இயக்கம் என்பதை மறவாதீர்கள்! சிறுபிள்ளைத்தனமான வாதங்களில் ஈடுபட்டு அறிவை இழக்காதீர்! உதயசூரியனுக்கு வாக்களித்து தமிழ்ச் சமூகத்தை மேம்படுத்துவோம்!

– வெற்றிகொண்டான்