ஈழ விடுதலைப் போர்

ஈழ விடுதலைப் போரில் தோல்வியைத் தழுவி கூண்டோடு அழிந்து போன புலிகளும் சரி, அவர்களோடு கடைசி வரை இருந்த மக்களும் சரி, ஒரு தீவிர மனநிலையில் இருந்தார்கள், அவர்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படுபவர்கள் அல்ல, அவர்களுடைய வாழ்க்கை முறை போருக்குப் பழகிப் போயிருந்தது, சாவை மிக நெருக்கத்தில் இருந்து பார்த்தவர்கள் அவர்கள்.

பல ஈழ நண்பர்களோடு பேசிப் பார்த்திருக்கிறேன், அவர்கள் மரணம் குறித்த அச்சம் அதிகம் இல்லாத ஒரு போர்ச் சூழலைப் பழகிக் கொண்டிருந்தார்கள், அவர்கள் வாழ்க்கை முறையே போர் என்றாகி ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டிருந்தது, அவர்களுக்கு நன்றாகத் தெரியும் இது இறுதிப் போர், இந்தப் போருக்குப் பின்னே சிங்களவனா? தமிழனா என்கிற கேள்விக்கு விடை தெரிந்து விடும்.

வாழ்வா? சாவா? என்கிற இரண்டே தேர்வுகள் மட்டுமே அவர்களிடம் இருந்தது. வைராக்கியத்தோடு பலர் புலிகளோடு இருந்தார்கள், வெகு சிலர் வேறு வழியில்லாமலும், இன்னும் சிலர் அழுத்தங்களாலும் முள்ளிவாய்க்காலில் அடைந்து இருந்தார்கள்.

வெறியேறிய சிங்களப் படைகளுக்கு முழு சுதந்திரத்தோடு தமிழர்களைப் படுகொலை செய்யும் அதிகாரத்தை உள்நாட்டு இனவெறி ஆட்சியாளர்கள் மட்டுமன்றிப் பன்னாட்டு அதிகார மையங்களும் வழங்கி இருந்தன, ஏனெனில் ஈழம் என்பது பொதுவுடமைச் சித்தாந்தமும் பார்ப்பனீய மனநிலையும் இல்லாத இனக்குழுக்களை எழுச்சி கொள்ள வைக்கும் ஒரு தவறான அரசியல் மாதிரி என்பதை முதலாளித்துவ தேசியங்களும், பார்ப்பனீய ஆற்றல்களும் தெளிவாகத் தெரிந்து வைத்துக் கொண்டு காய் நகர்த்தின.

வைராக்கியமும், சுயமரியாதையும் கொண்ட ஈழ மக்கள் சாவை ஒரு பொருட்டாகக் கருதவில்லை, இறப்பு உறுதி என்று தெரிந்தும் புலிகளோடு இருப்பதில் இருந்து அவர்கள் பின்வாங்கவில்லை. அப்படியே பலர் இறந்தும் போனார்கள்.

இறுதிக் கட்டப் போர் நேரத்திலும் அப்போது முதல்வராய் இருந்த தலைவர் கலைஞரும் சரி, புலிகளோடு இணக்கமாக இருந்த திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களும் சரி, உளப்பூர்வமாக ஈழ மக்களின் மீதும் புலிகளின் மீதும் உண்மையான கரிசனம் கொண்டவர்களாகவே அரசியல் செய்தார்கள், நடுவண் அரசுக்குப் பல வழிகளில் நெருக்கடி கொடுக்கப்பட்டது.

இறுதியாகத் தலைவர் கலைஞர் உண்ணாவிரதம் இருந்தது கூட ஒரு நேர்மையான மானுடனின் அழுகுரலாகவே இருந்தது, அரசியல் செயல்பாடுகளுக்கு நடுவே இந்த முடிவை ஒரு உணர்வு வயப்பட்ட நிலையிலேயே கலைஞர் எடுத்தார், திட்டமிடுதலோ, வேறு எந்த எதிர்பார்ப்புகளோ இல்லாத நிலையில் எதாவது செய்ய வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலேயே கலைஞர் கடற்கரையில் உண்ணா நோன்பைத் துவக்கினார். இது ஈழ மக்களின் மீதும் புலிகளின் மீதும் உண்மையான நேசம் கொண்ட தமிழர்கள் ஒவ்வொருவருக்கும் நன்றாகத் தெரியும்.

இன்று ஏறத்தாழ 7 ஆண்டுகளுக்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட ஒரு அரசியல் சூழலில் நடக்க இருக்கிற சட்டமன்றத் தேர்தலில் ஈழ அரசியலைப் பேசுகிறவர்கள் யாரென்று ஒரு பட்டியலைப் போட்டீர்களேயானால், அது அதிமுக அல்ல, அது பாட்டாளி மக்கள் கட்சி அல்ல, அது விடுதலைச் சிறுத்தைகள் அல்ல, குறிப்பாக சிலர் வருவார்கள், அரசியல் முக்கியத்துவம் இழந்த, இனித் தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாமல் காணாமல் போகப் போகிற வை.கோ வைப் போன்ற பெரியவர்கள்.

ஏதாவது பேச வேண்டும் என்கிற வெறியில் மக்களற்ற இடங்களில் ஒலிபெருக்கியை முறைத்துக் கொண்டு பேசும் பாரதீய ஜனதாக் கட்சியின் பார்ப்பனீய முலாம் பூசப்பட்ட தேசபக்தாஸ். இது போக, புலம் பெயர்ந்த ஈழ மக்களின் உழைப்பையும் பணத்தையும் உறிஞ்சித் தமிழகத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்கிற நாம் தமிழர் கட்சியின் வாய்ப்புரட்சி வீரர் சீமானால் மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள், மற்றும் தொடர்ந்து பல பொய்களைச் சொல்லியும், உணர்வூட்டியும் புலம் பெயர்ந்த மக்களின் உழைப்பைக் கொள்ளையடிக்கும் மார்கழி 15, பங்குனி 26 போன்ற சில ஒட்டுக் குழுக்கள்.

இவர்களின் அரசியல் வாழ்க்கை மட்டுமன்றி அன்றாட வாழ்க்கையும் ஈழ அரசியலின் கருணையில் தான் ஓடிக் கொண்டிருக்கிறது, தலைவர் கலைஞரைத் திட்டியும், தூற்றியும் வீதியில் திரிந்தால் மட்டுமே தமிழக அரசியல் குறித்த எந்த அரிச்சுவடியும் தெரியாத புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பணம் அனுப்புவார்கள். சீமான் மற்றும் பங்குனி, மார்கழியார்களின் பொருளாதார வளமும், அரசியல் எதிர்காலமும் கலைஞரைத் தூற்றுவதிலும், திமுகவுக்கு எதிரான அரசியல் செய்வதிலும் தான் அடங்கி இருக்கிறது.

ஒவ்வொரு திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டனும், தலைவர்களும் ஈழத்தின் மீது பேரன்பு கொண்டவர்கள், உளப்பூர்வமான ஈடுபாடு கொண்டவர்கள், கைக்காசைச் செலவழித்துக் கூட்டங்கள் நடத்தி ஈழச் சிக்கலை உலகளாவிய அரசியல் மயப்படுத்தியவர்கள், இன்னும் சொல்லப் போனால் ஈழ அரசியலை உங்களுக்கு அறிமுகப் படுத்தியதே ஒரு திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவனாகத் தான் இருப்பான் என்பதை நினைவு கூறுங்கள். சீமான்களே, பங்குனி மார்கழிப் போராளிகளே, உங்கள் ஈழப் புலி வேடம் எதற்கானது என்பதை இப்போது பல புலம் பெயர்ந்த தமிழர்களே உணரத் துவங்கி விட்டார்கள், ஆகவே இது உங்களுக்கான கடைசி வாய்ப்பு, இயன்ற அளவு சுருட்டுங்கள்.

மே 19 க்குப் பிறகு உங்கள் புலி வேடம் களைந்து உண்மையான நரிகளாய் நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள், அதுமட்டுமல்ல, தலைவர் கலைஞர் முதல்வராகப் பதவியேற்று மீண்டும் ஈழச் சிக்கலை தேசிய அரசியலாக்கி இயன்ற அளவு அதிகார ஆற்றலை எமது மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பார். அவர் ஒருவரால் மட்டுமே அது சாத்தியம் என்பதை வாய்ப்புரட்சி சீமான்களும், மார்கழி மற்றும் பங்குனி வீரர்களும் மீண்டும் ஒருமுறை உணர்வார்கள்.

– கை.அறிவழகன்