இரட்டை அளவுகோல் ஏன்?

ஈழம் தொடர்பில் முகநூலில் திமுக சார்பினர் ஒருசாரார் விடுதலைப்புலிகளையும் அதன் தலைவரையும் விமர்சித்து எழுதியதை நானும் பார்த்தேன்! எத்தனை பேர் புலிகளை விமர்சித்து எழுதினார்களோ அதைவிட அதிகமான திமுகவினர் புலி ஆதரவாளர்கள் என்பதையும் நான் அறிவேன். ஆனால் இந்த முகநூல் எழுத்துகளையே அடிப்படையாக வைத்துக்கொண்டு சிலர் திமுக என்னும் மொத்த அமைப்பே ஈழத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எதிரானது என்பதுபோல் எழுதுகின்றனர்.

திமுகவில் உள்ள சிலர் புலிகளை எதிர்ப்பதாலேயே அது புலி விரோதக் கட்சி என்றால், அதே திமுகவில் உள்ள பலரும் புலி ஆதரவாளர்களாக இருக்கிறார்களே, அதுப்படி திமுகவை புலி ஆதரவு அமைப்பு என்றும் சொல்லலாமே! எது கையில் கிடைத்தாலும் அதை திமுக மீது வீசியெறிய வேண்டும் என்ற உங்களின் முன்முடிவுதான் இதுபோன்ற கருத்துருவாக்கத்துக்கு காரணம்!

மற்றொரு கேள்வியும் இங்கே எழுகிறது. சில வாரங்களுக்கு முன்பு உடுமலையில் ஆணவக் கொலை நடந்தது. முகநூலில் இயங்கும் திமுகவினர் ஏறக்குறைய அத்தனை பேருமே அந்த ஆணவக் கொலையைக் கண்டித்து இங்கே எழுதினர். ஆனால், அப்போது இதே ஒருசிலர் (இப்போது திமுக என்னும் மொத்தக் கட்சியே புலி எதிர்ப்பு கட்சி என்று காட்ட முயலும் சிலர்) என்ன எழுதினார்கள் என்பது இன்னும் கண்ணிலேயே நிற்கிறது! முகநூலில் இயங்கும் திமுகவினர் கண்டித்தால் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம், திமுக தலைமை ஏன் இன்னும் அதை கண்டித்து எழுதவில்லை என்று வியாக்கியானம் பேசினார்கள்.

அப்போது முகநூல் திமுகவினர் சொல்லும் கருத்தை ஏற்க முடியாது, தலைமை அதை சொல்ல வேண்டும் என்று எழுதிய அதே மூளைக்காரர்கள் இப்போது முகநூல் திமுகவினர் சொல்லும் கருத்து மட்டுமே போதும் என்று அதையே அடிப்படையாக கொண்டு திமுக என்னும் கட்சியையே எதிர்க்கிறார்கள். ஏன் இந்த இரட்டை அளவுகோல்? விடுதலைப்புலிகளின் தமிழ்ச்செல்வன் மறைந்தபோது, கலைஞர் இரங்கற்பா இயற்றினார். ஜெயலலிதா அதைக் கண்டித்தார்.

ஆனால் ஒன்றை உறுதிபடச் சொல்லலாம். திமுக தலைமையே விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசினாலும், அப்போதும்கூட இப்போது திமுகவை எதிர்த்துக்கொண்டிருக்கும் அந்த ஒருசிலர்,தொடர்ந்து எதிர்க்கொண்டேதான் இருப்பர். அவர்களின் நோக்கம் வேறெதுவும் இல்லை. ‘திமுக எதிர்ப்பு மட்டுமே’

-வெற்றிகொண்டான்