இந்து நாளிதழ் திருமா பேட்டி! -ஒரு விமர்சனம் கி.தளபதிராஜ்

தோழர் திருமா அவர்களுக்கு, வணக்கம்!


இன்றைய ‘இந்து’ தமிழ் நாளி தழில் மூன்றாவது நாளாக உங்கள் பேட்டி வெளிவந்துள்ளது. அரசியல் களத்தில், மாற்றுத் தளத்தில் நின்றாலும், மாறாத கண்ணியத்திற்கு சொந்தக்காரர் என நிரூபித்திருக் கிறீர்கள்.

தமிழகத்தின் பெரிய கட்சிகளான திமுக, அதிமுக இரு கூட்டணி களிலும் இருந்திருக்கிறீர்கள். நெருங்கிப் பழகுவதில் கலைஞர், ஜெயலலிதா இருவரும் எப்படி? ஜாதிய மேலாதிக்கத்தை அங்கு உணர்ந்திருக்கிறீர்களா? என்ற கேள்விக்கு….

‘ஜெயலலிதாவை அடிக்கடி சந்திக்கவோ, நீண்ட நேரம் உரை யாடவோ வாய்ப்பே கிடைத்த தில்லை. ஒரே ஒருமுறைதான் அவரை சந்தித்திருக்கிறேன். ஆனால் கலைஞரை பலமுறை சந்திக்கவும், நெடுநேரம் அவருடன் உரையாட வும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அரசியலைத் தாண்டியும் தனிப்பட்ட முறையில் ஒரு நெருக் கத்தை என்னிடத்தில் காட்டினார். என் உடல்நலம், எதிர்கால வாழ்க்கை தொடர்பாகவெல்லாம் அக்கறையோடு பேசியிருக்கிறார். கலைஞரைப் பொறுத்தவரை வெறும் அரசியல் ஆதாயம் என்றில்லாமல், எங்கள்மீது உண்மையாகவே ஒரு அக்கறையை வெளிப்படுத்துபவராக உணர்ந்திருக்கிறேன்’’ என பதிலளித்திருக்கிறீர்கள்.

நேற்றுவரை ஓரணியில் இருந்து விட்டு இன்று அணி மாறியதும் சகட்டுமேனிக்கு வசைபாடும் அரசியல் தலைவர்களுக்கு மத்தியில் உங்கள் பதில் உங்களை ஒருபடி உயர்த்தி நிறுத்தியிருக்கிறது

2.4.2016 தேதியிட்ட ‘விடுதலை’ ஞாயிறு மலரில் தங்களைப்பற்றிய ஒரு கேள்விக்கு ‘‘அரசியலில் அவர் முடிவு எது என்றாலும், எப்போதும் நம் அன்புக்குரியவரே திருமாவள வன்’’ என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அளித்த பதில் எவ்வளவு சரியானது என்பது இப்போது பலருக்கும் புரிந்திருக்கும்

அதேவேளையில் ‘இந்து’ நாளிதழ் பேட்டியில் மேலும் ஒரு கேள்விக்கு தாங்கள் பதிலளித்தபோது, ‘‘விளிம்புநிலை அரசியலைப் பேசும் கட்சிகளை ஒருங்கிணைத்து, குறைந்தபட்ச பொதுத்திட்டத் தின்கீழ் கூட்டணி அமைத்து, ஒரு கூட்டாட்சிக்கான முயற்சிகளைத் தொடங்குவது எனும் முடிவுக்கு வந்தோம்’’ எனக் கூறியிருக்கிறீர்கள்.

தோழர் திருமா அவர்களே, நீங்கள் கூட்டு சேர்ந்திருக்கும் தேமுதிகவும், தமாகாவும் விளிம்பு நிலை அரசியல் பேசும் கட்சிகளா? அவர்களது அரசியல் வரலாற்றில் விளிம்புநிலை மக்களுக்கான போராட்டமோ, செயல்பாடோ இருந்ததாக உங்களால் விரல் விட முடியுமா?
கம்யூனிஸ்டுகள் மட்டும் என்ன?

தேசிய முன்னணி ஆட்சிக்காலத் தில் மலைவாழ் வகுப்பைச் சார்ந்த ஜி.ஜி.ஸ்வெல் குடியரசுத்தலைவர் பதவிக்கான வேட்பாளராக நிய மிக்கப்பட்டபோது அதே அணியில் அதுவரை அங்கம் வகித்த சிபிஎம் சங்கர்தயாள் சர்மாவைத்தானே ஆதரித்தது?

மேற்கு வங்கத்தில் 1980 இல் நடைபெற்ற சிபிஎம் ஆட்சியில் காபினட் அமைச்சராக ஒரு தாழ்த்தப்பட்டவரையாவது நிய மித்தது உண்டா?

கேரளாவில் 1987 இல் நடை பெற்ற தேர்தலில் மார்க்சிஸ்டுக் கம்யூனிஸ்டுக் கட்சி சார்பில் முதல் அமைச்சருக்கான வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட ஈழவ சமுதா யத்தைச் சேர்ந்த கவுரி அம்மையார் தேர்தல் வெற்றிக்கு பின்னர் முதலமைச்சராக்கப்படாதது ஏன்?

இப்படி எத்தனையோ குற்றச் சாட்டுகளை ‘விடுதலை’யும் அடுக்கியிருக்கிறது. அதற்கான நேர்மையான பதில் காம்ரேடு களிடமிருந்து இதுவரை வந்த துண்டா?

திமுகவைவிட இந்தக் கூட்டணி எந்த வகையில் நீங்கள் எதிர்பார்க் கும் விளிம்பு நிலை அரசியலை முன்னெடுக்கப் போகிறது?

அதிமுக, பாஜகவோடு கூட்டணி இல்லை என்பது தேர்தல் நாடகம். பாஜகவோடு கூட்டணி அமைத் தால் தமிழக தேர்தல் களத்தில் அதிமுகவின் வெற்றியை அது எந்தளவு பாதிக்கும் என்பதை ஜெயலலிதா நன்றாகவே உணர்ந் திருக்கிறார்.

ஒருவேளை அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுமாயின் (அப்படி நடக்க வாய்ப்பில்லை) மதவாத மத்திய பாஜக ஆட்சியோடு கைகோர்த்து ஒடுக்கப்பட்ட, மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிராக அவர்கள் ஏற்படுத்தும் விளைவை சரிப்படுத்த இன்னும் எத்தனை ஆண்டு உழைப்பை நீங்கள் குறிப்பிடும் உண்மையான விளிம்பு நிலை அரசியல் பேசும் இயக்கங்கள் விலை கொடுக்க நேரிடும்? என்பதை ஒருகணம் யோசித்துப் பாருங்கள்.

தந்தை பெரியார் அவர்கள் 1972 ஆம் ஆண்டு தன் பிறந்தநாள் மலரில்… ‘‘நான் சற்று மகிழ்ச்சி, சிறிது உற்சாகம் கொள்ளுகிறேன் என்றால், இன்று நமக்கு வாய்த்திருக்கும் திமுக ஆட்சிப் பணிகளால்தான். காரணம் என்னவென்றால், இதற்கு முன் இருந்த ஆட்சியின் யோக்கி யதைகளை அவைகளால் நாட்டுக்கு, சமுதாயத்திற்கு ஏற்பட்ட கேடுகளை ஒழித்துக்கட்டாததால் சமுதாய விஷயத்தில், ஜாதி அமைப்பு விஷயத்தில், கல்வி விஷயத்தில் எப்படி நடந்து கொண்டார்கள்? என்ன கொள்கை மேற்கொண் டார்கள்?

என்பவைகளை சிந் தித்தால் தெரியவரும். ஏதாவது பொல்லாத வாய்ப்பால் இப் போதைய இந்த திமுக (கலைஞர்) ஆட்சிக்கு ஏதாவது மாறுதல் காலம் ஏற்பட்டால், வேறு எந்த ஆட்சி வரும்? அதன் பலன் என்ன ஆகும்? என்பவைகளை சிந்தித்தால் பெரும் பயம் ஏற்படுகிறது’’ என்று குறிப் பிட்டிருந்தார். அதை நினைத்துப் பார்க்கையில், ஒவ்வொரு சமூக நீதிப் போராளிக்கும் அந்த பயம் இப்போது வந்து போவது இயற்கை.

தோழர் திருமா அவர்களே இவை நீங்கள் அறியாத செய்தி இல்லை. ஒருவேளை எதிர்பாராத முடிவுகள் தமிழக தேர்தலில் ஏற்படுமாயின் உங்கள் மனசாட் சிக்கே உங்களால் பதில் சொல்ல முடியாது என்பது மட்டும் உண்மை!.

‘‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க்கு அணி’’-வள்ளுவர்

குறிப்பு: கொஞ்சம் அதிர்ச்சி! ‘தி இந்து’ (தமிழ்) பேட்டியில் ஓரிடத்தில்கூட தந்தை பெரியாரையோ, திராவிடர் கழகப் பணிகளையோ கண்டு கொள்ளாதது ஆச்சரியமே!

(விடுதலை ஞாயிறு மலர் 17.4.2016)