“கருணாநிதி ஒரு துரோகி’ என்பது திட்டமிட்ட சதி – ஓர் ஈழத் தமிழரின் கருத்து

மிழர்கள் உலகில் பத்துக் கோடி என்று சொல்வார்கள். சீமானின் மரபணு சோதனைக் கூடத்தில் பரிசோதனை செய்து, மற்றவர்களை கழித்து விட்டால் கூட, ஒரு ஆறு கோடி வரும்.

எப்படிப் பார்த்தாலும் உலகில் தமிழர்கள் ஒரு பெரிய இனம். பழமை வாய்ந்த மொழிகளில் ஒன்றை பேசுகின்ற இனம். அறிவு வளம் மிக்க பலரைக் கொண்டிருக்கும் ஒரு இனம்.

இந்த இனம் போரில் எப்படித் தோற்றது என்ற கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். போர் முடிந்த 7 ஆண்டுகள் ஆன பிறகும் ஒரு வீரியம் மிக்க போராட்டத்தை நடத்துகின்ற வலிமை இந்த இனத்திற்கு எப்படி இல்லாமல் போனது?
ஆபிரிக்காவில் சில இலட்சங்களைக் கொண்டிருக்கும் இனங்கள் அழிக்கப்பட்டு, அவைகள் மீளவும் எழ முடியாமல் போன ஒரு யதார்த்த நிலையை புரிந்து கொள்ள முடியும். உலகம் முழுவதும் கோடிக் கணக்கில் வாழ்கின்ற தமிழர்களால் ஏன் எழ முடியவில்லை?

இரண்டாம் உலக யுத்தத்தில் பேரழிவை சந்தித்த யூதர்கள், யுத்தம் முடிந்த அடுத்த ஆண்டே தமக்கு என்று ஒரு நாட்டை உருவாக்கிய வரலாறு எல்லாம் எம் கண் முன்னே இருக்கிறது.
யூதர்களோடு தம்மை ஒப்பிடுகின்ற தமிழர்களால் ஒரு பலமான இனமாக இன்றுவரை தம்மை மீளக் கட்டமைத்துக் கொள்ள முடியவில்லை.

உலகெங்கும் வாழும் தமிழர்களுக்குள் திட்டமிட்ட ஏற்படுத்தப்பட்ட பிளவு இதற்கு விடையாக இருக்கிறது.
ஈழத்தில் தமிழர்கள் தம்மை சிறுபான்மை இனமாக கருதாத ஒரு காலம் இருந்தது. அயலில் உள்ள தமிழ்நாட்டின் மக்களையும் சேர்த்து, தம்மை பெரும்பான்மை என்று கருதுகின்ற ஒரு காலம் இருந்தது.

ஆனால் இறுதிப் போரில் ஈழத் தமிழர்களுக்கு உதவியாக தமிழ்நாடு இருக்கவில்லை. அதற்கு காரணம் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஒரு தனிப்பட்ட நபர் அல்ல. தமிழ்நாட்டிற்கு அதிகாரங்கள் எதுவும் இல்லை என்பதுதான் காரணம்.

மாநில அரசுக்கு மத்திய அரசால் கலைக்கப்பட முடியாத அதிகாரம் இருந்திருந்தால் கூட, தமிழ்நாடு இறுதிப் போரில் முக்கிய பங்கை ஆற்றியிருக்க முடியும்.

ஈழத் தமிழர்கள் தமது தோல்வியின் காரணத்தை அரசு, அரசாங்கம், அரசியல், உலக ஒழுங்கு என்பவற்றில் தேடத் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் திட்டமிட்ட முறையில் அவர்கள் தனிநபர்களை நோக்கி திருப்பி விடப்பட்டார்கள்.

போர் முடிந்த பிற்பாடு, எந்த எந்த அதிகாரங்கள் இல்லாததால் தமிழ்நாட்டு அரசினால் ஈழப் படுகொலையை தடுக்க முடியாது போனது என்பதை ஆராய்ந்து, அந்த அதிகாரங்களை பெறுவதற்கான போராட்டங்கள் அல்லவா தமிழ்நாட்டில் ஆரம்பிக்கப்பட்டிருக்க வேண்டும்? அப்படி எங்காவது ஒரு போராட்டம் நடத்தப்பட்டதா? ஆகக் குறைந்தது அது பற்றிய கோரிக்கைகளாவது விடப்பட்டதா? எதுவும் இல்லை.

“தமிழ்நாட்டினால் உதவ முடியாது போனதன் காரணம் கருணாநிதி ஒரு துரோகி” என்று குறுகிய பதில் அளிக்கப்பட்டது. தமிழர்கள் மடையர்கள் ஆக்கப்பட்டார்கள். உள்மோதல்கள் தூண்டி விடப்பட்டன. இதனால்தான் “கருணாநிதி ஒரு துரோகி’ என்கின்ற அரசியலை நான் திட்டமிட்ட சதி என்கிறேன்.இந்த அரசியலால் தமிழர்கள் திசைதிருப்பப்பட்டது மட்டும் நடக்கவில்லை, பெரியளவில் பிளவுபடுத்தப்பட்டார்கள்.

எம்ஜிஆர் விடுதலைப் புலிகளுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார். ஆனால் அவருடைய தொண்டர்கள் மத்தியில் ஈழப் போராட்டம் பற்றி தெளிவு உருவாக்கப்படவில்லை. ஆனால் திமுகவில் அப்படி அல்ல.

கலைஞர் கருணாநிதியிடம் விடுதலைப் புலிகள் பற்றி பல கசப்புகள் உள்ளன. ஆனால் அவருடைய தொண்டர்களிடம் ஈழப் போராட்டம் பற்றிய தெளிவு உருவாக்கப்பட்டது. ஈழம் பற்றி பல பயிற்சிப்பட்டறைகள் நடத்தப்பட்டன.

“பிரபாகரன் ஒரு கொலைகாரன்’ என்று ஜெயலலிதாவால் சொல்ல முடியும். அவருடைய தொண்டர்கள் அதை எதிர்க்க மாட்டர்ர்கள். ஆனால் கலைஞரால் அப்படி சொல்ல முடியாது. அவருடைய பெரும்பான்மையான தொண்டர்களிடம் இருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பும்.

ஈழத்திற்கு ஆதரவான போராட்டத்தை யார் நடத்தினாலும், அங்கே போய் நிற்கின்ற தொண்டர்கள் இவர்கள்.
„கருணாநிதி ஒரு துரோகி’ என்று மிகவும் கீழ்த்தரமானதும், மோசமானதுமான பரப்புரைகளின் ஊடாக இத்தகைய திமுக தொண்டர்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் இடையில் ஒரு இடைவெளி உருவாக்கப்பட்டது.

இரண்டாவதாக தமிழ்நாட்டின் அரசியல் காரணமாகவும், சமூகநீதிப் போராட்டங்கள் காரணமாகவும் கலைஞரோடு இணைந்து செயற்படுகின்ற வீரமணி, பேராசிரியர் சுபவீர பாண்டியன் போன்றவர்கள் மீதான தாக்குதல்களும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு, அவர்களும் ஈழத் தமிழர்களிடம் இருந்த தள்ளி வைக்கின்ற வேலை நடந்தது.

இன்று நடப்பதாக சொல்லப்படுகின்ற ராஜதந்திரப் போரில் தமிழ்நாட்டின் அறிஞர்கள் முக்கியமான பங்கை அளித்திருக்க வேண்டும். சுபவீரபாண்டியன் போன்றவர்கள் ஐநா சபைக் கூட்டங்களில் “லொபி” வேலைகளை செய்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லாதபடியான சூழ்நிலை திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.

இப்படி தமிழ்நாட்டின் பெரிய கட்சிகளில் ஒன்றான திமுகவும், அதன் ஆதரவு அமைப்புக்களும் ஈழப் போராட்டத்தில் தள்ளி வைக்கின்ற அரசியல் நடந்தது.

இந்த சதி என்பது திமுக மற்றும் ஆதரவு அமைப்புக்களை மையப்படுத்தி மட்டும் நின்றுவிடவில்லை. அது இன்னும் நீண்டு சென்றது. திமுக எதிர்ப்பைக் கொண்டிருக்கும் கட்சிகள், இயக்கங்களையும் குறி வைத்தது.

திராவிட எதிர்ப்பு, வந்தேறி எதிர்ப்பு என்னும் பெயர்களில் கொளத்தூர் மணி, வைகோ போன்றவர்கள் குறி வைக்கப்பட்டார்கள். இந்த அரசியலும் ஈழத்தின் பெயரிலேயே நடத்தப்படுகின்றது.

இந்த வேலைக்கு சீமான் போன்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இன்றைக்கு ஜெனிவாவில் கொடி பிடித்துக் கொண்டிருக்கின்ற ஒரு ஈழத் தமிழனைக் கேட்டால் “கருணாநிதி, வைகோ, வீரமணி, சுபவீரபாண்டியன், கொளத்தூர் மணி என்று எல்லோருமே துரோகிகள்”என்பான். “சீமான் மட்டுமே ஒரே தலைவர்” என்பான்.

யுத்தம் முடிந்தவுடன் ஈழத்தமிழர் ஆதரவு சார்ந்து உலகத் தமிழர்களிடம் ஒரு பெருந் திரள்வு நடந்திருக்க வேண்டும். திட்டமிட்ட முறையில் அது இல்லாமல் செய்யப்பட்டது. இன்றைக்கு தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு போராட்டத்தை ஒரு சிறய குழுவிடம் ஒப்படைத்து, அதை சிதைத்து விடுகின்ற சதி நடந்து கொண்டிருக்கிறது.

கலைஞர் மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. தமிழ்நாட்டில் எனக்கு பிடித்த அரசியல்வாதிகள் முதலில் வைகோதான் இருக்கிறார்.

ஆனால் பல மாயைகளை உண்மை என்று ஈழத் தமிழர்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள். „திராவிட எதிர்ப்பு, சீமான் தமிழ்நாட்டின் பெரிய சக்தி’ என்கின்ற மாயைகள் உடைந்து போக வேண்டும் என்பதற்காகவாவது கலைஞர் இந்தத் தேர்தலில் வெல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

கலைஞரின் வெற்றி ஈழத் தமிழர்களை தமிழ்நாட்டின் அரசியல் பற்றி சரியாக கற்பதற்கு தூண்டும் என்று நம்புகிறேன்.
முட்டாள்களாக இருந்து கொண்டு எம்மால் எந்த விடுதலையையும் அடைய முடியாது.

வி. சபேசன், புலம் பெயர் ஈழத்தமிழன்