சிறுத்தையே வெளியில் வா!

பூட்டிய இருப்புக் கூட்டின் கதவு
திறக்கப் பட்டது! சிறுத்தையே வெளியில்வா!
எலிஎன உன்னை இகழ்ந்தவர் நடுங்கப்
புலிஎனச் செயல்செய்யப் புறப்படு வெளியில்!
நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
சிம்புட் பறவையே சிறகைவிரி! எழு!
சிங்க இளைஞனே திருப்புமுகம்! திறவிழி!
இங்குன் நாட்டுக் கிழிகழுதை ஆட்சியா?
கைவிரித் துவந்த கயவர், நம்மிடைப்
பொய்வி ரித்துநம் புலன்கள் மறைத்துத்
தமிழுக்கு விலங்கிட்டுத் தாயகம் பற்றி
நமக்குள உரிமை தமக்கென் பார்எனில்,
வழிவழி வந்தஉன் மறத்தனம் எங்கே?
மொழிப்பற் றெங்கே? விழிப்புற் றெழுக!
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் என்றும்
புகழ்ச்சி யேஎம் பூணாம் என்றும்
வையம் ஆண்ட வண்டமிழ் மரபே
கையி ருப்பைக் காட்ட எழுந்திரு!
குறிக்கும்உன் இளைஞர் கூட்டம் எங்கே?
மறிக்கொணாக் கடல்போல் மாப்பகை மேல்விடு!
நன்மொழிக்கு விடுதலை நல்கிட எழுந்திரு!
பொன்மொ ழிக்குநீ புதுமை ஏற்றுவாய்!
மக்களை ஒன்றுசேர்! வாழ்வை யுயர்த்துக!
கைக்குள திறமை காட்ட எழுந்திரு!
வாழ்க இளைஞனே, வாழ்க நின்கூட்டம்!
வாழ்க திராவிட நாடு!
வாழ்கநின் வையத்து மாப்புகழ் நன்றே!

புரட்சிக் கவிஞரின் இந்தப் பாடல் வரிகள் மிகவும் பிரசித்தமானது. இக்கவிதையை மேற்கோள் காட்டிப் பேசாத திராவிட இயக்க மேடைப் பேச்சாளர்கள் யாரும் இருக்க முடியாது. தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் பலமுறை பல மேடைகளில் இந்த பாட்டுவரிகளை சொல்லிக் காட்டியிருக்கிறார். தலைவர் கலைஞருக்கு மிகவும் பிடித்த கவிதை இது.

பாரதிதாசன் எழுதிய அகவல்பா வடிவிலான இப்பாடல் எப்போது எழுதப்பட்டது யாரால் முதலில் பாடப்பட்டது என்பதை இக்கால இளைஞர்கள் தெரிந்து கொள்வது மிகத்தேவை.

௧௯௪௫ (1945 ) ஆம் ஆண்டு சனவரி திங்கள் அப்போதைய தென்னாற்காடு மாவட்டத்தில் கடலூர் அருகே புதுப்பேட்டை என்னும் ஊரில் திராவிட மாணவர் மாநாடு ஒன்று நடத்தப்பட்டது. அதற்குத் தலைமை வகித்தவர் திரு ஈ. வெ. கி. சம்பத் அவர்கள். இன்டர்மீடியட் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்காமல் அவர் பொதுவாழ்வுக்கு வந்த சமயம். முதல்முதலாக மாநாட்டு தலைமைப் பொறுப்பேற்று முழுநேர அரசியலில் சம்பத் அவர்கள் ஈடுபட காரணமாக அமைந்தது இந்த மாநாடுதான்.

அந்த மாநாடு அமைப்பாளராக இருந்து திறம்பட நடத்திக் காட்டியவர் இன்றைக்கு நாமெல்லாம் அன்புடன் ஆசிரியர் என்றழைக்கும் அய்யா கி.வீரமணி அவர்களுடைய ஆசிரியர் திரு திராவிடமணி அவர்கள். அப்போது ஆசிரியர் வீரமணி அவர்கள் பள்ளி மாணவர். அந்த மாநாட்டில் அவரும் சிறுபிள்ளை பிராயத்தில் பேசியிருக்கிறார்.

ஆசிரியருக்கு ஆசிரியர் திரு திராவிடமணி அவர்களுடன் அன்றைக்கு இணைந்து பணியாற்றிய இருவரில் ஒருவர் கவிஞர் கருணானந்தம் இன்னொருவர் திரு புதுப்பேட்டை இராமலிங்கம் . அவர்தான் பின்னாளில் அனகாபுத்தூர் ராமலிங்கம் என்று அறியப்பட்டவர்.

இந்த மாணவர் மாநாட்டுக்குத்தான் புரட்சிக்கவிஞர் வாழ்த்துப் பாடலாக இப்பாடலை எழுதி அனுப்பிவைத்தார்.

அதை அன்றைக்கு அந்த மாநாட்டில் உணர்ச்சிப்பொங்க படித்து எழுச்சி ஊட்டியவர் யார் தெரியுமா?

இன்றைக்கு நாமெல்லாம் இனமானப் பேராசிரியர் என்று இனிதுடன் அழைக்கும் திராவிடத்தென்றல் திரு க.அன்பழகனார் அவர்கள்தான்.

தகவல் : அருள்பிரகாசம்