பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

கடந்த 2014 
மார்ச் மாத அகநாழிகை இதழில் மபொசியாரின் பேத்தி,
தி.பரமேஸ்வரி அவர்கள் பெரியாரைக் கொச்சைப்படுத்தி
எழுதிய ஒரு கட்டுரையை வெளியாகியுள்ளது.
    “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு,
ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும்
மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை
தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள் எண்ணங்களை
அந்த பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிகொள்கிறாரகளோ? என்று
தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை பிம்பங்களைத்
தோற்றுவிக்கும் எழுத்துக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது”
எனத் துவங்குகிறது அக்கட்டுரை!.
    சமகாலத் தலைவர்கள் என்று இவர் குறிப்பிடுவது யாரை?
அம்பேத்கரும், காந்தியும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வமும், கப்பலோட்டியத்தமிழன்
வ.உ.சியும் தான் அவரது சமகாலத்தலைவர்கள்! சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்,
கப்பலோட்டியத்தமிழன் வ.உ.சி போன்றவர்கள் பெரியாரை தனது தலைவராக
ஏற்றுகொண்டவர்கள் அல்லவா? தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின்
காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார்படத்திற்கு
இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கி அழகுபார்த்தவர் அல்லவா
திரு.பன்னீர் செல்வம்?
    பெரியார் தன் 84வது பிறந்தநாள் மலரில் எழுதிய ஒரு கட்டுரையில்
தாசி என்ற சொல்லை பயன்படுத்தியதை கண்டுபிடித்த கட்டுரையாளர்
இப்படி பல இடங்களில் பெரியார் பேசிவந்ததாக குறிப்பிட்டு
“பெண்களின் நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு மனிதர்,
பெண்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல்களை எப்படி ஒரு
கேள்வியுமின்றி மிக இயல்பாக தன் பேச்சுகளில் பயன்படுத்தியிருக்க
முடியும்? என்று கேட்கிறார்.
    பெரியார் வாழ்ந்த காலத்தில் தாசி என்கிற சொல்தானே புழக்கத்தில்
இருந்தது! அன்றைக்கு தேவதாசிமுறை ஒழிப்பு சட்டத்தை தமிழகத்திலே
கொண்டுவர காரணமாக விளங்கியவரே தந்தை பெரியார்தானே!
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் கூட தாசிகளைப்பற்றி
தான் எழுதிய நூலுக்கு “தாசிகளின் மோசவலை” என்று தான் பெயரிட்டார்.
அந்த பெயரை பயன்படுத்தியதால் அம்மையார் அவரையும்
பெண்ணியத்திற்கு எதிரானவர் என பட்டியலிடுவாரோ?
      1962ல் வெளியான அதே பெரியார் பிறந்தநாள் மலரில், ம.பொ.சி யாரின்
கட்டுரை ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
    “பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மாற்றுக்கட்சியினராலும், போற்றிப்புகழத்தக்க
மான்புடையவர். கட்சி வேறுபாடு காரணமாக மட்டுமல்லாம்ல்,
கொள்கை வேறுபாடு காரணமாகவும், அவருக்கு நெடுந்தொலைவில்
உள்ளவன். எங்கள் இருவருக்கும் நடுவிலுள்ள இடைவெளி எளிதில் கடக்க
முடியாததாகும். ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்துவரும்
நேர்மை, கொள்கையில் காட்டிவரும் உறுதியான மனப்பான்மை
காரணமாக அவரிடம் எனக்கு பெருமதிப்புண்டு” என குறிப்பிட்டிருந்ததை
பரமேஸ்வரி அறியவில்லையா?
    பெண்ணியம் குறித்த தெளிவான தொடர்ந்த சிந்தனை, வாசிப்பு
பெரியாரிடம் இல்லை என்கிறார் பரமேஸ்வரி!
    பெண்கள் மணவிலக்கு பெறவும், விதவைகளுக்கு மறுமண உரிமை
கோரியும் 1929 லேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம்
இயற்றியவர் பெரியார்.
    பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை, வாரிசுரிமை
ஆண்களைப்போலவே எந்தத் தொழிலையும் செய்வதற்கு சமஉரிமை,
பெண்களை சட்டசபைகளுக்கும், நகர சபைகளுக்கும் தேர்ந்தெடுத்தல்
போன்ற உயரிய தீர்மானங்களை நிறைவேற்றி அதற்காக களம்கண்டவர்
பெரியார்.
    பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் எந்திரமாக
நடத்தி அடிமைப்படுத்துவதை ஒழிக்க நினைத்த பெரியார்தான் பிள்ளை
பெறும் எந்திரமா பெண்கள்? என வினா எழுப்பி, பெண்களே! தேவைப்பட்டால்
கர்ப்பப்பையை அகற்றவும் தயாராகுங்கள் என்று எச்சரித்தார்.அதன்
தத்துவார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ளாதவர் கர்ப்பப்பைக்கு
மருத்துவவிளக்கமளிக்கிறார்!
    “சேரமாதேவி குருகுல விடுதியில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு
இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகளில் நலிந்து
கொண்டிருக்கும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என யாரோ
எழுதியதாக சுட்டிக்காட்டி இதையே பெரியாரின் பெண்ணியத்துக்கும்
பொறுத்திப் பார்க்கலாம் என்று எழுதுகிறார்.
    பார்ப்பன ராஜாஜி கூட்டத்திற்கு கைத்தடியாக இருந்து தமிழினத்
துரோகியாக வலம் வந்த ம.பொ.சி பரம்பரையில் பிறந்து
பார்ப்பனர்களுக்காக பேனா பிடிக்கும் அடிவருடிகளுக்கு பெரியாரின்
சேரமாதேவி குருகுலப் போராட்டம் எரிச்சலைத் தருவதில் வியப்பில்லை.
    பெரியார் மணியம்மை திருமணம் பற்றி குறிப்பிடுகையில் ” 30 வயதுப்
பெண்ணின் உணர்வையும், மன நிலையையும் சற்றும் சிந்தியாமல் சேர்த்து
வைத்திருந்த பொருளே குறியாக(அதை அவர் இயக்கத்திற்காகவே
செய்திருப்பினும் கூட) பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத
ஈ.வெ.ரா வை எப்படி பெண்ணிய சிந்தனைவாதியாக ஏற்றுகொள்ள முடியும்
எனக் கேட்டு அண்ணாவையும் துணைக்கு அழைத்திருக்கிறார்?
    பேரறிஞர் அண்ணா அவர்களே அதற்கு பதிலளித்து விட்டார். எனக்கு
இன்றைக்கு இருக்கும் உடல் உபாதைகளுக்கு மேலாக அன்று பெரியாருக்கு
இருந்தது. மணியம்மையார் போன்று ஒருவர் கிடைத்திராவிட்டால் பெரியார்
இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்லி வருந்தினார்.
அன்னையார் மீது மிகவும் கரிசனப்பட்டு “பெண்ணுணர்வை ஒரு
பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா வை” என்று  எழுதியிருக்கும் சகோதரியாரே!
இந்தத் திருமணத்தைப்பற்றி அன்னை மணியம்மையார் என்றைக்கேனும்
வருந்தியதற்கான செய்தி உண்டா.மாறாக பொதுவாழ்கைக்காக தன்
வாழ்கையையே அழித்துக்கொண்ட மெழுகுவர்த்தி அல்லவா அவர்?
    ஈ.வெ.ரா வுக்கு பெரியார் பட்டம் எங்கு கொடுக்கப்பட்டது? யாரால்
கொடுக்கப்பட்டது? அப்படியான என்ன கருத்தாக்கங்களை அல்லது
நன்மைகளை அவர் பெண்களுக்கு செய்திருக்கிறார்?என்பது பற்றிய
தகவல்கள் ஏதும் இல்லை.என்கிறது கட்டுரை.
       13.11.1938 ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்களுக்கு
“பெரியார்” என பட்டம் வழங்கிய செய்தி 1938 நவப்ர் 20ம் தேதியிட்ட குடியரசு
இதழில் வெளிவந்துள்ளது.
    “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத்தலைவர்கள், செய்ய
இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி
அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும்,
சமமாகவும்  நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும், அவர் பெயரைச்
சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப்
பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும்
கேட்டுக்கொள்கிறது.” என்கிற தீர்மானமும், கணவனை இழந்த பெண்களின்
துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது
உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும்,
இறுதியில் தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப்பெண்கள் நிலைமையை
விரித்தும் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவாற்றினார் என்றும் குடியரசு
பதிவு செய்துள்ளது.
    இப்படி சரியான வரலாற்று ஆவனங்கள் இருக்கும்பொழுதே ஆதாரம்
ஏதும் இல்லை என முழு பூசனிக்காயை சோற்றில் மூடி மறைக்க
முயற்சித்திருக்கிறார் கட்டுரையாளர்!.
    பெரியார் இயக்கத்தின் கீழே ஒரு அறிஞனோ, எழுத்தாளனோ, கவிஞனோ
உண்டா? உள்ளவர்கள் எல்லாம் நாலாம்தர பேச்சாளர்கள்!.
ஐந்தாம் தர அரசியல்வாதிகள்! என நிதானமிழந்து பேனாவை
நகர்த்தியிருக்கிறார்.பாரதிதாசன் போன்றவர்கள் கூட இவர் கண்களுக்கு
தென்படாமல் போனது ஆச்சரியம்தான்
    அம்மையார் சொல்லும் ஜந்தாம்தர அரசியல்வாதிகளான அண்ணா,
கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரிடத்தில் பதவி சுகம் தேடி அலைந்தவர் யார்
என்பதை நாடு அறியும். ம.பொ.சியார் தன் தலைக்கு மேலே நாற்காலியைத்
தூக்கிக்கொண்டு “அண்ணா தம்பி வந்திருக்கேன்!” “அண்ணா தம்பி
வந்திருக்கேன்!” என இறைஞ்சுவது போல் தமிழக பத்திரிக்கைகள் போட்ட
கார்ட்டூன்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ம.பொ.சியார் மறைந்து
பல ஆண்டுகள் ஆகியும் அவரது துரோகம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது
– கி,தளபதிராஜ்