நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள்,

திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறெந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இதன்படி, விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவ லாம். தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழிலின் அடிப்படைகளை குழந் தைகள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது திரைப்படம், தொலைக் காட்சி என தேன் பூசப்பட்டிருந் தாலும் துணி வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்கவும், முடி திருத்துபவன் பிள்ளை முடிதிருத்தவும், மலம் அள்ளு பவன் பிள்ளை மலம் அள்ளவும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசு வசதி செய்து கொடுக்கிறது.

பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு சலுகை வழங்கப்படுமானால் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சுகம் கண்டு அந்தப்பிள்ளைதான் மேற்கொண்டு படிக்க முயலுமா? அந்தக் குடும்பங்கள் தான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முயலுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இதன்மூலம், குழந்தைகளுக் கான கல்வி உரிமை மீறப்படுவதுடன், குழந்தைத் தொழிலாளர் முறையை பகுதி அளவில் சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சித்துள்ளதாகத்தான் கருதவேண்டும்.

1954ல் தமிழ்நாட்டில் இதேபோல் இராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாக குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களை சவக்குழியில் தள்ளும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியை சரியாக புரிந்து கொண்ட பெரியார் ராஜாஜி கொண்டுவந்தது “குலக்கல்வித் திட்டம்” என்று விமர்சித்ததார். 24.1.54 அன்று ஈரோட்டில் “ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு ” மாநாட்டை கூட்டினார்.

ஆச்சாரியார் தொடர்ந்து அத்திட்டத்தை கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.54ல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “தோழர்களே! இந்தக்கல்வித்திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமை படுத்துகிறார்கள்.

அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு, இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும்.எவ்வளவு தைரியம்? இந்தக் காலத்தில் இவ்வளவு தைரிய மாக நம்மைக் கொடுமைப்படுத்து கிறார்களே!

இந்தக்கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்று சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம். மக்களை கெடுப்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று நமக்கு சொல்லுகிறார்கள்.

என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங் களுக்குத் தகுதியில்லை திறமையில்லை என்கிறார்கள் படிக்கவும் வசதி செய்து தரமாட்டேன் என்கிறார்கள் கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும்அதற்கும் விடாமல் கல்வித்திட்டம் என்ற பெய ரால் அவனவன் சாதித் தொழிலுக்கு போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள்.

உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட் டமாக கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக்கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட் டமாக கருதுகிறோம்.

ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப்போகிறது.” என்று பேசினார். நாகையிலிருந்து குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தக்  குழந்தைத் தொழிலாளர் சட்டத்திருத்தத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளையப்போகும் கேட் டிற்கும், அன்றைக்கு ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தால் விளைய நேர்ந்த கேட்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. “இந்தக்காலத்தில் இவ் வளவு தைரியமாக நம்மைக் கொடு மைப்படுத்துகிறார்களே!” என்று 1954ல் பெரியார் கேட்டார். அறுபது வருடங் களுக்குப் பிறகும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை!