கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். தொழிற்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர்!. அதனால் “பச்சைத்தமிழர் காமராஜர்” எனப்பாராட்டி உச்சி முகர்ந்தார் பெரியார்!.
நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விட றான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில் லையா? அதையெல்லாம் செய்யமாட் டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? எனக்கேட்டவர் காமராசர்
இடஒதுக்கீட்டு கொள்கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, “டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம்.டாக்டரும் ஆகலாம்னேன்.” என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.
காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.
தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.
தந்தை பெரியார் அவர்களுக்கு இரங்கற்கூட்டம் இராஜாஜி மாளிகையில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட “காமராஜர் பெரியாரின் வரலாறு தான் தமிழகத்தின் வரலாறுன்னேன். தமிழகத்தின் வரலாறு தான் பெரியாரின் வரலாறுன்னேன்” என்றார்.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தோழர் நீலன் காமராஜருடைய இல்லத்திற்கு செல்கிறார். அவரிடம் பெரியாரின் இறுதி நிகழ்ச்சி பற்றிய விபரங்களை விசாரித்தபடி கண்ணை மூடி அமைதியாகிறார் காமராஜர். காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதிகாக்கிறார் தோழர் நீலன். கொஞ்ச நேரத்தில் காமராசரின் கண் இமை ஓரத்தில் சொட்டு சொட்டாக நீர் வடிகிறது. சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டு திடீரென எழுந்து ஆக்ரோஷமாக பேசுகிறார் காமராசர். “யார் இருக்கான்னேன்? இனி எந்த நாதி இருக்குன்னேன்? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே!” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறார்.