Monthly Archives: July 2015

வரலாறு திரும்பும்!

“மோடியும் லிபரல்களின் தோல்வியும்” என்கிற ஒரு கட்டுரையை
தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப்
போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள்
என்பதற்காண காரணமாக

“இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட
விமர்சனத்துக்கு உள்ளாயிற்று.அடக்குமுறையாகவே மாறியது”

என்று சொல்லும் கட்டுரையாளர்

“பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின்
மனக்குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார்.மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத்தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்” என எழுதுகிறார்

மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் ஈழத்தமிழர் பிரச்சனை காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை.

நிலைமை இப்படியிருக்க இதை மதசார்பின்மை கொள்கைக்கு
எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின்
ஆழ்மனதையே வெளிக்காட்டுகிறது.

“ஐரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் தபால் அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன.”என புலம்புகிறார் கட்டுரையாளர். அவை மானுட சமூகத்திதின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறையால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால்
இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!

நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா
போலத்தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.
அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லையாமே? அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா?
கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது
எந்த வகை அறிவு?

மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி
முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?
பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெப்பாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே?

ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில்”ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!” னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ?

இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!

-கி.தளபதிராஜ்.

பெண்ணுணர்வை மதிக்காதவரா பெரியார்?

கடந்த 2014 
மார்ச் மாத அகநாழிகை இதழில் மபொசியாரின் பேத்தி,
தி.பரமேஸ்வரி அவர்கள் பெரியாரைக் கொச்சைப்படுத்தி
எழுதிய ஒரு கட்டுரையை வெளியாகியுள்ளது.
    “அவர்காலத்தில் வாழ்ந்த மற்ற பெரியார்களெல்லாம் ஒதுக்கப்பட்டு,
ஈ.வெ.ரா பெரியார் என்னும் ஒருவருடைய அதிகபட்ச செயல்பாடுகளையும்
மீறிய ஒரு பெரும் பிம்பத்தை கட்டமைத்து, ஆதரவானதோர் அலையை
தொடர்ந்து உருவாக்கி வரும் ஒரு கூட்டத்தார், தங்கள் எண்ணங்களை
அந்த பிம்பத்தின் மீது ஏற்றித் தங்களை ஈடேற்றிகொள்கிறாரகளோ? என்று
தோன்றுமளவு ஈ.வெ.ரா பெரியார் பற்றிய மிகை பிம்பங்களைத்
தோற்றுவிக்கும் எழுத்துக்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு படிக்கக் கிடைக்கிறது”
எனத் துவங்குகிறது அக்கட்டுரை!.
    சமகாலத் தலைவர்கள் என்று இவர் குறிப்பிடுவது யாரை?
அம்பேத்கரும், காந்தியும், சர்.ஏ.டி.பன்னீர் செல்வமும், கப்பலோட்டியத்தமிழன்
வ.உ.சியும் தான் அவரது சமகாலத்தலைவர்கள்! சர்.ஏ.டி.பன்னீர் செல்வம்,
கப்பலோட்டியத்தமிழன் வ.உ.சி போன்றவர்கள் பெரியாரை தனது தலைவராக
ஏற்றுகொண்டவர்கள் அல்லவா? தனது தோளுக்கிட்ட மாலையை பெரியாரின்
காலுக்கிடுகிறேன் என்று சொல்லி, மேடையில் இருந்த பெரியார்படத்திற்கு
இட்டு அவரை நீதிக்கட்சியின் தலைவராக்கி அழகுபார்த்தவர் அல்லவா
திரு.பன்னீர் செல்வம்?
    பெரியார் தன் 84வது பிறந்தநாள் மலரில் எழுதிய ஒரு கட்டுரையில்
தாசி என்ற சொல்லை பயன்படுத்தியதை கண்டுபிடித்த கட்டுரையாளர்
இப்படி பல இடங்களில் பெரியார் பேசிவந்ததாக குறிப்பிட்டு
“பெண்களின் நிலைகுறித்து தீவிரமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு மனிதர்,
பெண்களை இழிவாகக் குறிக்கும் சொல்லாடல்களை எப்படி ஒரு
கேள்வியுமின்றி மிக இயல்பாக தன் பேச்சுகளில் பயன்படுத்தியிருக்க
முடியும்? என்று கேட்கிறார்.
    பெரியார் வாழ்ந்த காலத்தில் தாசி என்கிற சொல்தானே புழக்கத்தில்
இருந்தது! அன்றைக்கு தேவதாசிமுறை ஒழிப்பு சட்டத்தை தமிழகத்திலே
கொண்டுவர காரணமாக விளங்கியவரே தந்தை பெரியார்தானே!
மூவலூர் மூதாட்டி இராமாமிர்தத்தம்மையார் கூட தாசிகளைப்பற்றி
தான் எழுதிய நூலுக்கு “தாசிகளின் மோசவலை” என்று தான் பெயரிட்டார்.
அந்த பெயரை பயன்படுத்தியதால் அம்மையார் அவரையும்
பெண்ணியத்திற்கு எதிரானவர் என பட்டியலிடுவாரோ?
      1962ல் வெளியான அதே பெரியார் பிறந்தநாள் மலரில், ம.பொ.சி யாரின்
கட்டுரை ஒன்றும் வெளிவந்திருக்கிறது.
    “பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மாற்றுக்கட்சியினராலும், போற்றிப்புகழத்தக்க
மான்புடையவர். கட்சி வேறுபாடு காரணமாக மட்டுமல்லாம்ல்,
கொள்கை வேறுபாடு காரணமாகவும், அவருக்கு நெடுந்தொலைவில்
உள்ளவன். எங்கள் இருவருக்கும் நடுவிலுள்ள இடைவெளி எளிதில் கடக்க
முடியாததாகும். ஆயினும் பொதுவாழ்க்கையில் அவர் கடைபிடித்துவரும்
நேர்மை, கொள்கையில் காட்டிவரும் உறுதியான மனப்பான்மை
காரணமாக அவரிடம் எனக்கு பெருமதிப்புண்டு” என குறிப்பிட்டிருந்ததை
பரமேஸ்வரி அறியவில்லையா?
    பெண்ணியம் குறித்த தெளிவான தொடர்ந்த சிந்தனை, வாசிப்பு
பெரியாரிடம் இல்லை என்கிறார் பரமேஸ்வரி!
    பெண்கள் மணவிலக்கு பெறவும், விதவைகளுக்கு மறுமண உரிமை
கோரியும் 1929 லேயே செங்கற்பட்டு சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம்
இயற்றியவர் பெரியார்.
    பெண்களுக்கு ஆண்களைப்போலவே சொத்துரிமை, வாரிசுரிமை
ஆண்களைப்போலவே எந்தத் தொழிலையும் செய்வதற்கு சமஉரிமை,
பெண்களை சட்டசபைகளுக்கும், நகர சபைகளுக்கும் தேர்ந்தெடுத்தல்
போன்ற உயரிய தீர்மானங்களை நிறைவேற்றி அதற்காக களம்கண்டவர்
பெரியார்.
    பெண்களை போகப்பொருளாக, வெறும் பிள்ளை பெறும் எந்திரமாக
நடத்தி அடிமைப்படுத்துவதை ஒழிக்க நினைத்த பெரியார்தான் பிள்ளை
பெறும் எந்திரமா பெண்கள்? என வினா எழுப்பி, பெண்களே! தேவைப்பட்டால்
கர்ப்பப்பையை அகற்றவும் தயாராகுங்கள் என்று எச்சரித்தார்.அதன்
தத்துவார்த்தத்தைக் கூட புரிந்துகொள்ளாதவர் கர்ப்பப்பைக்கு
மருத்துவவிளக்கமளிக்கிறார்!
    “சேரமாதேவி குருகுல விடுதியில் பிராமணர், பிராமணரல்லாதாருக்கு
இருந்த தீண்டாமையில் தீவிரம் காட்டிய பெரியார், கொடுமைகளில் நலிந்து
கொண்டிருக்கும் மக்களுக்காக எதையும் செய்யவில்லை” என யாரோ
எழுதியதாக சுட்டிக்காட்டி இதையே பெரியாரின் பெண்ணியத்துக்கும்
பொறுத்திப் பார்க்கலாம் என்று எழுதுகிறார்.
    பார்ப்பன ராஜாஜி கூட்டத்திற்கு கைத்தடியாக இருந்து தமிழினத்
துரோகியாக வலம் வந்த ம.பொ.சி பரம்பரையில் பிறந்து
பார்ப்பனர்களுக்காக பேனா பிடிக்கும் அடிவருடிகளுக்கு பெரியாரின்
சேரமாதேவி குருகுலப் போராட்டம் எரிச்சலைத் தருவதில் வியப்பில்லை.
    பெரியார் மணியம்மை திருமணம் பற்றி குறிப்பிடுகையில் ” 30 வயதுப்
பெண்ணின் உணர்வையும், மன நிலையையும் சற்றும் சிந்தியாமல் சேர்த்து
வைத்திருந்த பொருளே குறியாக(அதை அவர் இயக்கத்திற்காகவே
செய்திருப்பினும் கூட) பெண்ணுணர்வை ஒரு பொருட்டாகவே கருதாத
ஈ.வெ.ரா வை எப்படி பெண்ணிய சிந்தனைவாதியாக ஏற்றுகொள்ள முடியும்
எனக் கேட்டு அண்ணாவையும் துணைக்கு அழைத்திருக்கிறார்?
    பேரறிஞர் அண்ணா அவர்களே அதற்கு பதிலளித்து விட்டார். எனக்கு
இன்றைக்கு இருக்கும் உடல் உபாதைகளுக்கு மேலாக அன்று பெரியாருக்கு
இருந்தது. மணியம்மையார் போன்று ஒருவர் கிடைத்திராவிட்டால் பெரியார்
இத்தனை நாட்கள் வாழ்ந்திருக்க முடியாது என்று சொல்லி வருந்தினார்.
அன்னையார் மீது மிகவும் கரிசனப்பட்டு “பெண்ணுணர்வை ஒரு
பொருட்டாகவே கருதாத ஈ.வெ.ரா வை” என்று  எழுதியிருக்கும் சகோதரியாரே!
இந்தத் திருமணத்தைப்பற்றி அன்னை மணியம்மையார் என்றைக்கேனும்
வருந்தியதற்கான செய்தி உண்டா.மாறாக பொதுவாழ்கைக்காக தன்
வாழ்கையையே அழித்துக்கொண்ட மெழுகுவர்த்தி அல்லவா அவர்?
    ஈ.வெ.ரா வுக்கு பெரியார் பட்டம் எங்கு கொடுக்கப்பட்டது? யாரால்
கொடுக்கப்பட்டது? அப்படியான என்ன கருத்தாக்கங்களை அல்லது
நன்மைகளை அவர் பெண்களுக்கு செய்திருக்கிறார்?என்பது பற்றிய
தகவல்கள் ஏதும் இல்லை.என்கிறது கட்டுரை.
       13.11.1938 ல் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ரா அவர்களுக்கு
“பெரியார்” என பட்டம் வழங்கிய செய்தி 1938 நவப்ர் 20ம் தேதியிட்ட குடியரசு
இதழில் வெளிவந்துள்ளது.
    “இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத்தலைவர்கள், செய்ய
இயலாமல் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி
அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும்,
சமமாகவும்  நினைப்பதற்கு வேறொருவருமில்லாமையாலும், அவர் பெயரைச்
சொல்லிலும், எழுத்திலும் வழங்கும் போதெல்லாம் “பெரியார்” என்ற சிறப்புப்
பெயரையே வழங்குதல் வேண்டுமென இம்மாநாடு எல்லோரையும்
கேட்டுக்கொள்கிறது.” என்கிற தீர்மானமும், கணவனை இழந்த பெண்களின்
துயர் நீங்க மாதர் மறுமணத்தை இம்மாநாடு வலியுறுத்துகிறது என்பது
உள்ளிட்ட பல்வேறு புரட்சிகர தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாகவும்,
இறுதியில் தீர்மானங்களை விளக்கியும், தமிழ்ப்பெண்கள் நிலைமையை
விரித்தும் தோழர் ஈ.வெ.ரா சொற்பொழிவாற்றினார் என்றும் குடியரசு
பதிவு செய்துள்ளது.
    இப்படி சரியான வரலாற்று ஆவனங்கள் இருக்கும்பொழுதே ஆதாரம்
ஏதும் இல்லை என முழு பூசனிக்காயை சோற்றில் மூடி மறைக்க
முயற்சித்திருக்கிறார் கட்டுரையாளர்!.
    பெரியார் இயக்கத்தின் கீழே ஒரு அறிஞனோ, எழுத்தாளனோ, கவிஞனோ
உண்டா? உள்ளவர்கள் எல்லாம் நாலாம்தர பேச்சாளர்கள்!.
ஐந்தாம் தர அரசியல்வாதிகள்! என நிதானமிழந்து பேனாவை
நகர்த்தியிருக்கிறார்.பாரதிதாசன் போன்றவர்கள் கூட இவர் கண்களுக்கு
தென்படாமல் போனது ஆச்சரியம்தான்
    அம்மையார் சொல்லும் ஜந்தாம்தர அரசியல்வாதிகளான அண்ணா,
கலைஞர், எம்.ஜி.ஆர் ஆகியோரிடத்தில் பதவி சுகம் தேடி அலைந்தவர் யார்
என்பதை நாடு அறியும். ம.பொ.சியார் தன் தலைக்கு மேலே நாற்காலியைத்
தூக்கிக்கொண்டு “அண்ணா தம்பி வந்திருக்கேன்!” “அண்ணா தம்பி
வந்திருக்கேன்!” என இறைஞ்சுவது போல் தமிழக பத்திரிக்கைகள் போட்ட
கார்ட்டூன்களை மக்கள் இன்னும் மறக்கவில்லை. ம.பொ.சியார் மறைந்து
பல ஆண்டுகள் ஆகியும் அவரது துரோகம் மட்டும் தொடர்கதையாகிவிட்டது
– கி,தளபதிராஜ்

உள்ளூரில் போனியாகாத உற்சவப்பெருமாள்! கி.தளபதிராஜ்

திருப்பதி மூலவர் தன் திருநாமத் திலேயே “நித்யகல்யாணப்பெருமாள்” என  பெயரைக் கொண்டுள்ளதால், அவரைத் தரிசிக்கும் பக்தர்களின் திருமணத் தடை நீங்கும் என்பது அய்தீகமாம். சமீப ஆண்டுகளாக திரு மலைக்கு வந்து கல்யாண உற்சவத்தை சேவிக்க இயலாத பக்தர்களின் குறை யைப் போக்கவும, பக்தி மார்க்கம் செழிக்கவும், கல்யாண சிறீநிவாசர் எனும் மூர்த்தியை எல்லா ஊர்களுக்கும் எழுந்தருளச் செய்து, கல்யாண உற்சவம் நடத்தப்படுகிறதாம்.

அப்படி ஒரு வைபோக நிகழ்ச்சி மயிலாடுதுறைக்கு அருகே ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் 24.3.2015 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெருமாள் பெயரில் அர்ச்சகர் தாலியைக் கட்ட வாண வேடிக்கை காட்டப்பட்டது. நிகழ்ச்சியை வர்ணனை செய்பவர் “கோவிந்தா” “கோவிந்தா” என அழைக்கு மாறு ஒலிபெருக்கியில் அறிவித்ததையும் கவனிக்காமல் பக்தர்கள் மெய்மறந்து வாண வெடிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.

“கோவிந்தா” சத்தம் வேகமாக எழாததைக் கண்டு கடுப் பாகிப்போன வர்ணனையாளர் “பத்துபேர் கூட ‘கோவிந்தா’ போட்ட தாக தெரியவில்லை. எல்லோரும் சேர்ந்து சொல்லுங்கோ!

சேர்ந்து சொல் லுங்கோ! ”  என மீண்டும் மீண்டும் அறிவித்ததை பார்க்கும்பொழுது பரிதாபமாக இருந்தது. சிறீதேவியையும், பூதேவியையும் ஒரே நேரத்தில் மணந்த பெருமாளையும், பெருமாளுக்காக தாலிகட்டிய அர்ச்சகரையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந் தவர்களில் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், என அரசுத்துறை அதிகாரிகளும் அடக்கம்.

யார் இந்த பெருமாள்?

மேகநாதன் என்ற அசுர (பார்ப்பனரல்லாத) மன்னனுக்கு பிறந்த பலி  நீதிதவறாமல் ஆட்சி நடத்தி வந்தான். அப்போது மாலி, மால்யவான், சூமாலி என்ற அசுரர்கள், தேவர் களுடன் (பார்ப்பனர்களுடன்) போரிட அவனை அழைக்க, பலி மறுத்து விட்டதால், அவர்கள் மூவரும் சென்று தேவர்களுடன் போரிட்டு தோற்று வந்து பலி யிடம் சரணாகதி அடைந் தனர்.

அவர்களுக்காக பலி தேவர் களுடன் போராடி வெற்றிபெற்றான். தேவர்களுடன் போரிட்ட காரணத் தினால் பலிக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. தேவர்களுடன் யுத்தம் நடத்திய பாவம் நீங்க பலி கடும் தவம் புரிந்ததான். அவனது தவத்தை மெச்சிய பெருமாள் ஆதிவராக மூர்த்தியாக காட்சியளித்து பலிக்கு மோட்சமளித் தாராம்.

ஆக பார்ப்பனரிடம் போரிட்டதற்காக வருந்தி தன் பாவம் நீங்க தவம் புரிந்தற்காக அவன் தவத்தை மெச்சி பெருமாள் அளித்த காட்சிதான் ஆதிவராகமூர்த்தி. புராணப்புழுகிலும் பார்ப்பான் எவ்வளவு தெளிவாக எழுதி வைத்திருக்கிறான் என்பது புரிகிறதா? பார்ப்பனர்களிடம் போரிடுவதே தெய்வக்குற்றமாம்!

நித்யகல்யாண கூத்து!

அப்படி ஆதிவராகமூர்த்தியாக பெருமாள் காட்சி புரிந்த தலத்தில் ஒரு முனிவரும் அவரது மகளும் சொர்க் கத்தை அடைவதற்காக தவம் இருந்தன ராம். சொர்க்கத்தை அடைவதற்கான “கடவுச்சீட்டு” அவரது மகளுக்கு முதலில் கிடைத்தும், அவள் திருமணம் ஆகாதவள் என்ற காரணத்தால் அனுமதி மறுக்கப்பட்டது.

பூலோகத் தில் இருந்த முனிவர்களிடம் நாரதர் அப்பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளுமாறு வேண்ட காலவரிஷி என்ற முனிவர் அவளை மணந்து கொண்டார். அவர்களுக்கு 360 பெண் குழந்தைகள் பிறந்தன. முனிவர் தனக்குப்பிறந்த 360 பெண்களையும் திருமணம் செய்துகொள்ளுமாறு  பெருமாளிடம் வேண்டினார். பெரு மாள் ஒரு அழகிய இளைஞன் வடி வத்தில் பூலோகம் வந்தார்.

அந்த இளைஞன் ஒரு நாளைக்கு ஒரு பெண் வீதம் 360 நாட்களும் பிரம்மசாரியா கவே வந்து அப்பெண்களை மணம் புரிந்தான். கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி என்பது இதுதானோ?. கடைசி நாளன்று அவர்கள் அனை வரையும் ஒன்றாக்கி அப்பெண்ணிற்கு அகிலவல்லி நாச்சியார் என பெயரிட்டு தன் சுய உருவமான வராக (பன்றி) ரூபத்தைக் காட்டினானாம்.

நல்ல வேளை திருமணத்திற்கு முன்னால் பெருமாள் தன் பன்றி உருவத்தை காட்டவில்லை. 360 கன்னியர்களும் சேர்ந்திருந்தால் ஆதிவராகமூர்த்தி கதி அன்றைக்கே அதோகதியாகியிருக்கும்.

பெருமாள் நிலை!

கிபி 15ஆம் நூற்றாண்டிலிருந்து 16ஆம் நூற்றாண்டுவரை விஜயநகர பேரரசர்கள் ஆண்டு கொண்டிருந்த சுமார் நூறு ஆண்டுகள்தான் இந்த திருப்பதி மலை பூஜை, புனஸ்காரம் என்று இருந்திருக்கிறது. பின்னர் பெருமாள் கேட்பாரற்று கிடந்திருக் கிறார்.

18ஆம் நூற்றாண்டில் ஆட்சி யைப்பிடித்த கிழக்கிந்திய கம்பெனிகள் மலேரியா நோயை பரப்பும் கொசுக்கள் அங்கு அதிகம் பரவியிருப்பதைக் சுட்டிக் காட்டி திருமலைக்குச் செல்வதற்கே தடைவிதித்தது. அங்கிருந்த புரோகி தர்களையும் மலையடிவாரத்திற்கு வரும்படி எச்சரிக்க, அவர்களில் பலரும் மூட்டை முடிச்சை கட்டிவிட்டனர்.

மராத்தியர் காலத்திலும் இதே நிலை தான் தொடர்ந்திருக்கிறது. பின்னர் பல ஆண்டு காலம் திரும்பிப்பார்க்கவே ஆளில்லாமல் முட்புதர் மண்டிக்கிடந்த திருப்பதி மலை செப்பனிடப்பட்டு மீண்டும் பக்தர்கள் சென்று வர ஆரம் பித்தனர். இந்த நிலையில் சில ஆண்டு களுக்கு முன்னர் தினமலரில் வந்த ஒரு செய்தி மீண்டும் பெருமாளின் மவுசு குறைந்து வருவதை சுட்டிக்காட்டியது.

தினமலர் செய்தி (17.2.2011) !

“திருப்பதி திருமலையில் உற்சவராக எழுந்தருளும் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரான சீனிவாச பெருமாளுக்கு, தினமும் நித்ய கல்யாண உற்சவம் நடத்தப் படுகிறது. முன்னதாக, வெங்கடேச பெருமாள் கோவில் பிரதான வாயிலில், தினமும் அதிகாலை மாவிலை, வாழை மரம் கட்டி தோரணங்களால் அலங்காரம் செய்வது வழக்கம்.

ஆனால் நேற்று முன் தினம் பிரதான வாயிலில் கட்டப்பட்டிருந்த வாழை மற்றும் மாவிலைகள், உலர்ந்து முற்றிலும் வாடிய நிலையில் இருந்ததைக் கண்டு, பக்தர்கள் அதிருப்தி யடைந்தனர். தினம் காலையில் முறைப்படி புதிதாக தோரணங்கள் கட்டப்பட்டதா என்ற சந்தேகம் ஏற்படுவதாக பக்தர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்” என்று 2011 பிப் 17ஆம் நாள் தினமலர் வெளி யிட்டிருந்த செய்தியை பார்த்தவர் களுக்கு நித்ய கல்யாணத்தைப் பார்க்கும் கூட்டம் குறைந்து தினசரி வரும்படி குறைந்ததால் ஏற்பட்ட விளைவை புரிந்து கொள்ள முடியும்.

உள்ளூரில் சரக்கு போனியாகாததால் மலைய பெருமாளை நம்பாமல் மலேரியா காய்ச் சலுக்கு பயந்து மலையடிவாரத்திற்கு பாய்ந்த பரம்பரை இப்போது பெரு மாளையே ஊர்ஊராக இழுத்துவந்து கல்யாண வேடிக்கை காண்பித்துக் கொண்டிருக்கிறது. இப்படி பெருமாளை கொண்டு வருவதற்கு திருப்பதி தேவஸ் தானத்திற்கு பல லட்சரூபாய்களை கட்டவேண்டும் என்று சொல்லப்படு கிறது.

அதோடு இரவை பகலாக்கிய மின்னொளி, நவீன தொழில் நுட்பத் துடன் பெருமாள் கல்யாணம் பக்தர் களுக்கு டிஸ்பிளே, என செலவு கோடியைத் தாண்டக்கூடும். பொருளா தார விரயத்தோடு காலத்தையும் விரயம் செய்யும் இது போன்ற விழாக்களை நடத்த அனுமதிப்பது சரிதானா? என்பதையும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்தக்கூத்தை காண படித் தவர் முதல் பாமரர் வரை கூடுவதுதான் மிகுந்த வேதனை.

 

நாகையில் பெரியார் கொடுத்த குரல்! -கி.தளபதிராஜ்

குழந்தைத் தொழிலாளர் சட் டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற் கொள்வதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.  இதுகுறித்து, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழில்கள்,

திரைப் படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், விளம்பரங்கள் போன்ற பொழுது போக்கு சார்ந்த பணிகள், சர்க்கஸ் தவிர்த்து பிற விளையாட்டுத் துறை சார்ந்த பணிகள் ஆகியவற்றில் மட்டும் உரிய நிபந்தனைகளுடன் 14 வயதுக்குள் பட்டவர்களை ஈடுபடுத்தவும், வேறெந்தப் பணிகளிலும் அவர்களை அமர்த்துவதைத் தடுக்கும் வகையிலும் குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இதன்படி, விவசாயம், கைவினைத் தொழில் போன்றவற்றை மேற்கொண்டு வரும் பெற்றோருக்கு, அவர்களது குழந்தைகள் பள்ளி நேரத்துக்குப் பிறகோ, விடுமுறை நாள்களிலோ உதவ லாம். தங்களது குடும்பப் பாரம்பரியத் தொழிலின் அடிப்படைகளை குழந் தைகள் அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விலக்கு அளிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது திரைப்படம், தொலைக் காட்சி என தேன் பூசப்பட்டிருந் தாலும் துணி வெளுப்பவன் பிள்ளை துணி வெளுக்கவும், முடி திருத்துபவன் பிள்ளை முடிதிருத்தவும், மலம் அள்ளு பவன் பிள்ளை மலம் அள்ளவும் இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசு வசதி செய்து கொடுக்கிறது.

பள்ளிப்பருவத்தில் இப்படி ஒரு சலுகை வழங்கப்படுமானால் அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் சுகம் கண்டு அந்தப்பிள்ளைதான் மேற்கொண்டு படிக்க முயலுமா? அந்தக் குடும்பங்கள் தான் தங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க முயலுமா? என்பதை சிந்திக்க வேண்டும்.

இதன்மூலம், குழந்தைகளுக் கான கல்வி உரிமை மீறப்படுவதுடன், குழந்தைத் தொழிலாளர் முறையை பகுதி அளவில் சட்டப்பூர்வமாக்க மத்திய அரசு முயற்சித்துள்ளதாகத்தான் கருதவேண்டும்.

1954ல் தமிழ்நாட்டில் இதேபோல் இராஜாஜி ஒரு கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். பள்ளிப் படிப்பை மூன்று மணி நேரமாக குறைத்து மீதி நேரத்தில் அவரவர் பாரம்பரியத் தொழிலை செய்யலாம் என்றார். ஒடுக்கப்பட்ட மக்களை சவக்குழியில் தள்ளும் இந்தத் திட்டத்தின் சூழ்ச்சியை சரியாக புரிந்து கொண்ட பெரியார் ராஜாஜி கொண்டுவந்தது “குலக்கல்வித் திட்டம்” என்று விமர்சித்ததார். 24.1.54 அன்று ஈரோட்டில் “ஆச்சாரியார் கல்வித்திட்ட எதிர்ப்பு ” மாநாட்டை கூட்டினார்.

ஆச்சாரியார் தொடர்ந்து அத்திட்டத்தை கைவிட மறுக்கவே சென்னையில் 31.1.54ல் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை கூட்டி அதில் ஆச்சாரியாருக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்தார். “தோழர்களே! இந்தக்கல்வித்திட்டம் எவ்வளவு யோக்கியமற்றது! இந்தப் பார்ப்பனர்கள் நம்மை எவ்வளவு தூரம் கொடுமை படுத்துகிறார்கள்.

அடக்கி மிதித்து நசுக்குகிறார்கள் என்பதற்கு, இந்தக் கல்வித்திட்டமே போதுமானது என்பது விளங்கும்.எவ்வளவு தைரியம்? இந்தக் காலத்தில் இவ்வளவு தைரிய மாக நம்மைக் கொடுமைப்படுத்து கிறார்களே!

இந்தக்கல்வித் திட்டம் கேடானது; எங்கள் மக்களை நசுக்குவது; நாங்கள் படிக்கக்கூடாது என்பதற்காக கொண்டு வரப்படும் அழிவுத் திட்டம் என்று சொன்னால், இவர்கள் இல்லை இதுதான் நல்ல திட்டம். மக்களை கெடுப்பதற்காக இப்படி பேசுகிறார்கள் என்று நமக்கு சொல்லுகிறார்கள்.

என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங் களுக்குத் தகுதியில்லை திறமையில்லை என்கிறார்கள் படிக்கவும் வசதி செய்து தரமாட்டேன் என்கிறார்கள் கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும்அதற்கும் விடாமல் கல்வித்திட்டம் என்ற பெய ரால் அவனவன் சாதித் தொழிலுக்கு போங்கள் என்று அதற்கும் வெடி வைக்கிறார்கள்.

உள்ளபடி இந்தக் கல்வித்திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமுதாயப் போராட்டமாக, இனவாழ்வுப் போராட் டமாக கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக்கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம். இந்த எதிர்ப்பை போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான உயிர்நிலைப் போராட் டமாக கருதுகிறோம்.

ஆச்சாரியார் இந்தத் திட்டத்தை மாற்றவில்லையானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ இல்லையோ அது வேறு விசயம்) இது அவருடைய இனத்தின் அழிவுக்கே ஒரு காரணமாக இருக்கப்போகிறது.” என்று பேசினார். நாகையிலிருந்து குலக் கல்வித்திட்ட எதிர்ப்புப் படை சென்னையை நோக்கி புறப்பட்டது. பலத்த எதிர்ப்புக்கு பின்னர் அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.

மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் இந்தக்  குழந்தைத் தொழிலாளர் சட்டத்திருத்தத்தால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விளையப்போகும் கேட் டிற்கும், அன்றைக்கு ராஜாஜி கொண்டு வந்த கல்வித் திட்டத்தால் விளைய நேர்ந்த கேட்டிற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. “இந்தக்காலத்தில் இவ் வளவு தைரியமாக நம்மைக் கொடு மைப்படுத்துகிறார்களே!” என்று 1954ல் பெரியார் கேட்டார். அறுபது வருடங் களுக்குப் பிறகும் இதே நிலை தொடர்ந்து கொண்டிருப்பதுதான் வேதனை!

கதர்ச் சட்டைக்குள் கறுப்புச் சட்டை -கி.தளபதிராஜ்

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாள் ஜூலை 15. இவர் ஆண்ட காலம் தமிழகத்தின் பொற்காலம். தொழிற்துறையில் தமிழகம் பெரும் முன்னேற்றம் கண்டது. ஏராளமான கல்விச்சாலைகளை திறந்து மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்திற்கு அதிகாரிகள் போட்ட முட்டுக்கட்டையையும் மீறி புத்துயிர் ஊட்டினார்.

ராஜாஜியால் மூடப்பட்ட 6000 பள்ளிகளோடு மேலும் ஆயிரக்கணக்கான பள்ளிகளை திறந்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்விக்கண்ணை திறந்தவர் காமராஜர்!. அதனால் “பச்சைத்தமிழர் காமராஜர்” எனப்பாராட்டி உச்சி முகர்ந்தார் பெரியார்!.
நான் தீமிதி, பால் காவடி, அப்படீன்னு போனதில்ல. மனிதனைச் சிந்திக்க வைக்காத எந்த விஷயமும் சமுதாயத்துக்குத் தேவையில்லை. பெத்த தாய்க்குச் சோறு போடாதவன் மதுரை மீனாட்சிக்குத் தங்கத்தாலி வச்சிப் படைக்கலாமா? ஏழை வீட்டுப் பெண்ணுக்கு ஒரு தோடு, மூக்குத்திக்குக்கூட வழியில்ல. இவன் லட்சக்கணக்கான ரூபாயில வைர ஒட்டியாணம் செஞ்சி காளியாத்தா இடுப்புக்குக் கட்டி விட றான். கறுப்புப் பணம் வச்சிருக்கிறவன் திருப்பதி உண்டியல்ல கொண்டு போய்க் கொட்றான். அந்தக் காசில ரோடு போட்டுக் கொடுக்கலாம். ரெண்டு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுக்கலாமில் லையா? அதையெல்லாம் செய்யமாட் டான். சாமிக்குத்தம் வந்திடும்னு பயந்துகிட்டு செய்வான். மதம் மனிதனை பயமுறுத்தி வைக்குதே தவிர, தன்னம் பிக்கையை வளர்த்திருக்கா? படிச்சவனே அப்படித்தான் இருக்கான்னேன். கடவுள் இருக்கு, இல்லைங்கிறதைப் பத்தி எனக்கு எந்தக் கவலையும் கிடையாதுன்னேன். நாம செய்யறது நல்ல காரியமாக இருந்தா போதும். பக்தனா இருக்கிறதை விட யோக்யனா இருக்கணும். அயோக்கியத்தனம் ஆயிரம் பண்ணிகிட்டு கோயிலுக்குக் கும்பாபிஷேகம் பண்ணிட்டா சரியாப் போச்சா? எனக்கேட்டவர் காமராசர்
இடஒதுக்கீட்டு கொள்கையினால் தகுதி போயிற்று என கூக்குரலிட்டவர்களுக்கு, “டாக்டருக்கு படிச்ச தாழ்த்தப்பட்டவன் ஊசி போட்டு எந்த நோயாளி செத்தான்னேன்? பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த எஞ்சினீயர் கட்டுன எந்தப் பாலம் இடிஞ்சுபோச்சுன்னேன்? யாருக்கு வாய்ப்பு கொடுத்தாலும் இஞ்சினியரும் ஆகலாம்.டாக்டரும் ஆகலாம்னேன்.” என பொட்டிலடித்தார் போல் பதிலளித்தார் காமராசர்.
காரியம் காமராஜர்! காரணம் பெரியார்! என ஆனந்த விகடனே எழுதியது. எதைக் கொடுத்தாலும் சூத்திரனுக்குக் கல்வியை கொடுக்காதே என்கிற ஆரி யத்தின் ஆணி வேர் பிடுங்கப்பட்டது. ஆச்சாரியாருக்கு ஆத்திரம் பீறிட்டது. சென்னை கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ராஜாஜி அந்த கருப்பு காக்கையை கல்லால் அடித்து வீழ்த் துங்கள் என்று பெருந் தலைவர் காமராஜரை விமர்சித்துப் பேசினார்.
தந்தை பெரியார் உடல் ராஜாஜி மன்றத்தின் மேடையில் இருந்தபோது, செய்தியாளர்கள் காமராசரிடம் கேள் விகள் எழுப்பிட முயன்றபோது குடலே அறுந்து கிடக்கிறது. இப்பொழுது என்ன பேட்டி வேண்டியிருக்கு? என்றாரே பார்க்கலாம். தந்தை பெரியார்மீது காமராசர் கொண்டிருந்த மதிப்பு சாதாரணமானதல்ல. பெரியார் போட்டுத் தந்த பாதையில்தான் என் ஆட்சி என்று கூடச் சொன்னவர் காமராசர் ஆயிற்றே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று கல்கி கார்ட்டூன் போட்டது.
தந்தை பெரியார் அவர்களுக்கு இரங்கற்கூட்டம் இராஜாஜி மாளிகையில் நடைபெற்றது.அதில் கலந்துகொண்ட “காமராஜர் பெரியாரின் வரலாறு தான் தமிழகத்தின் வரலாறுன்னேன். தமிழகத்தின் வரலாறு தான் பெரியாரின் வரலாறுன்னேன்” என்றார்.
தந்தை பெரியார் அவர்கள் மறைந்த இரண்டு நாட்களுக்கு பிறகு தோழர் நீலன் காமராஜருடைய இல்லத்திற்கு செல்கிறார். அவரிடம் பெரியாரின் இறுதி நிகழ்ச்சி பற்றிய விபரங்களை விசாரித்தபடி கண்ணை மூடி அமைதியாகிறார் காமராஜர். காமராசர். தூங்குகிறார் என நினைத்து அருகில் அமைதிகாக்கிறார் தோழர் நீலன். கொஞ்ச நேரத்தில் காமராசரின் கண் இமை ஓரத்தில் சொட்டு சொட்டாக நீர் வடிகிறது. சில நிமிட அமைதி!. படுக்கையை விட்டு திடீரென எழுந்து ஆக்ரோஷமாக பேசுகிறார் காமராசர். “யார் இருக்கான்னேன்? இனி எந்த நாதி இருக்குன்னேன்? தமிழனுக்காக குரல் கொடுத்த அந்தக்குரலும் போய்விட்டதே!” என்று சொல்லி குலுங்கி குலுங்கி அழுதிருக்கிறார்.