சமஸ்கிருதம் ஆரிய மொழி! உருது திராவிட மொழியா ?

கேள்வி எண்1
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இந்த மண்ணில் உள்ள சமஸ்கிருதம் ஆரிய மொழி
200 ஆண்டுகளுக்குள் வந்த உருது திராவிட மொழியா ?


விடை:
எத்தனைத் திரிப்புகள் ஒரு கேள்வியில்!
சமஸ்கிருதம் எந்த ஆண்டில் தோன்றியது.அதற்கு பல்லாயிரம் ஆண்டு வரலாறு உண்டா. கற்காலத்தில் இருந்து கல்லில் செதுக்கப்பட்ட எழுத்து வடிவம் வட்டு எழுத்து சதுர எழுத்து புள்ளி இல்லாத ஓலை எழுத்து என தமிழின் வரி வடிவ மாற்றங்கள் ஒவ்வொன்றுக்கும் கல்வெட்டு ஆதாரஙங்கள் உள்ளன. சமஸ்கிருதத்திற்கு இன்றுவரை எழுத்தே இல்லை. எந்தக் கல்வெட்டு ஆதாரமும் இல்லை.
சமஸ்கிருதம் முதலில் கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டது.பிறகு தேவநகரி வடிவில் எழுதப்பட்டு வருகிறது.
இரவல் எழுத்தில் வாழும் ஒரு மொழியை அதனினும் சிறந்த வரலாற்று மொழியை தாய்மொழியாகக்கொண்ட தமிழர்கள் ஏன் வழிபாட்டு மொழியாக ஏற்க வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி.

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியமே 5000ஆண்டுப்பழமையுடையது என்றால் அதற்கு முன்பு எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மொழி உருவாகி பேசப்பட்டு எழுதப் பெற்று இலக்கிய வடிவங்களை அடைந்து பின் இலக்கணம் பெற்றிருக்கும் என்பதை நினைக்கவே மலைப்பாக இருக்கிறதே.

உங்கள் வேதங்களில் மைத்ரியில் தொடங்கி மூன்று அல்லது நான்கு படித்த பெண்களைக்காட்டமுடியும்.
சங்கத் தமிழ் இலக்கியங்களிலோ இதுவரை கிடைத்திருக்கும் பெண் கவிஞர்கள் மட்டும் 44 பேர்.
ஆங்கிலத்தைப்போல எல்லா நாட்டிலும் பிற மொழிகளில் கிடைக்கும் அறிவு வளத்தை தனது மொழியில் எழுதி வைத்துக்கொண்டு என் மொழி அநாதி காலத்தில பிறந்தது. கடவுள்களால் பேசப்பட்டது என்று கதை விடுவதாலேயே உங்கள் மொழி எம்மொழியை விட உயர்ந்தது பழமையானது என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லமுடியாமல் உருது மொழியைக் கொண்டு வந்து பிணைப்பது என்ன நியாயம்?

உருது மொழியின் வளத்தை அறிந்தவர்கள் அதன் வயது இருநூறு தானா என்று விளக்கட்டும்.நாம் அந்த ஆராய்ச்சிக்குப் போகவேண்டாம்.
உருது திராவிடமொழி என்று யார் சொன்னது? எனக்குத் தெரியவில்லை.இந்தக்கேள்வியை பதிவிட்ட நண்பர்கள் அதற்கான ஆதாரங்களைக் கொடுத்தால் நாம் அதுபற்றி பதில் சொல்லமுடியும்.

ஆனால் ஒன்று : சமஸ்கிருதம் , அரபி, ஹீப்ரு மூன்றுமே மத்திய ஆசிய மக்களால் உருவாக்கப்பட்டவையே. ஹிந்து கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்களும் அந்த மண்ணில் இருந்து தொடங்கியவையே.
கிருஷ்ணன் பிறப்பும் கிருஸ்துவின் பிறப்பும் பற்றிய ஒரேமாதிரியான கதைகளே அதற்கு சான்றாக இருக்கின்றன.
வேதங்கள் எழுதப்படவில்லை.அவை காற்றிலே இருந்தன அவற்றை ரிஷிகள் ஞானக்கண்ணால் படித்தார்கள் என்பதைப்போல்தான் மகமது நபிகளுக்கு குரான் வசனங்கள் அருளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட எந்தக்கதையும் பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லை.

மேலும் சம்ஸ்கிருதத்தின் அருமை பெருமைகளை ஆராய்ந்து பதிவு செய்த ஓரியண்ட்டல் ஜோன்ஸ் ( கீழைநாட்டு மொழிகளுக்குத்தான் ஓரியண்டல் என்று பெயர் ) முதல் அனைத்து மொழி ஆய்வாளர்களும் சமஸ்கிருதத்தை ஆரியமொழிக் குடும்பத்தில் இந்தோ ஆரிய மொழியாகத்தான் வகைப்படுத்தினார்கள். ஆரிய ஜெர்மானிய மொழிக்கும் சமஸ்கிருதத்திற்கும் உள்ள உறவை போற்றி வளர்த்தவர் மேக்ஸ்முல்லர். அவர் பெயரால் இந்திய அரசின் உதவியோடு நிறுவப்பட்டமேக்ஸ்முல்லர் பவன் இன்றும் இயங்கிவருகிறது. சமஸ்கிருதத்திற்கு ஆரியத்தொடர்பு இல்லை. அது இந்தியாவின் பழங்குடி மக்களின் மொழி என்று அவர்கள் உறுதியாக மறுத்திருந்தால் இந்தியாவில் மேக்ஸ்முல்லர் பவன்கள் இருந்திருக்காது.
சென்ற நூற்றாண்டில் இந்தியாவில் எழுந்த சமஸ்கிருத எதிர்ப்பலையை எதிர்கொள்ளவும் நாங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்கள் இஸ்லாமியர்களதான் அன்னியர்கள் என்று திசைதிருப்பவும் மேலோட்டமாக வைக்கப்படும் ஒரு கருத்துதான் சமஸ்கிருதம் இந்தியமொழி என்ற வாதம். அதை பார்ப்பனர்களைவிட நம்மவர்கள்தான் நம்புகிறார்கள்.

எனவே நமது தாய் மொழியை நீசபாஷை என்றும் சமஸ்கிருதத்தை தேவபாஷை என்றும் சொல்பவர்கள் நமக்கு அந்நியர்கள்தான்.
அதில் எந்த சந்தேகமும் இல்லை.

– அ.அருள்மொழி, வழக்குரைஞர்