மண்ணுருண்டை மாளவியா ! -கி.தளபதிராஜ்

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மதன்மோகன் மாளவியாவிற்கு பாரதரத்னா  விருது வழங்கப்போவதாக அறிவித்துள்ளது. மாளவியாவை சீர்திருத்தவாதி போன்று ஊடகங்கள் சித்தரிக்க முயன்றாலும், ஆர்.எஸ்.எஸ் வகையறாக்கள் மாளவியாவை தூக்கிப்பிடிப்பதைப் பார்த்தாலே அவர் எப்படிப்பட்டவர் என்பதை நம்மால் ஓரளவு உணர முடியும்.
இந்து மகாசபையின் தலைவராக இருந்த மாளவியா சாஸ்திரங்களை தூக்கிப்பிடித்த சனாதனவாதி.
தென்னாட்டு பார்ப்பனர்கள் தங்கள் சரக்கு தமிழ்நாட்டில் போனியாகாத போதெல்லாம் வடநாட்டுப்பார்ப்பனர்களை வரவழைத்து வித்தை காண்பிப்பது வழக்கம். அப்படி அழைக்கப்பட்டவர்களில் ஒருவர்தான் இந்த மாளவியா என்பதும், தமிழ்நாட்டிற்கு வந்து பலமுறை மூக்குடைபட்டு திரும்பியவர் என்பதையும்  வரலாறு தெரிந்தவர்கள் அறிவார்கள்.
1929ல் “சாஸ்திரம் அறிந்தவன் நான். நமக்கு சாதிகள் இருக்க வேண்டியது அவசியம்” என்று பேசிய மாளவியாவை எதிர்த்து “கிறிஸ்துவனையோ, மகமதியனையோ இந்துவாக்கினால் அவனை எந்த ஜாதியில் சேர்ப்பீர்கள்?” என்று கேட்க, அதற்கு “சாஸ்திரத்தைப் பார்த்துத்தான் பதில் சொல்ல வேண்டும்” என்று நழுவியவர் மாளவியா. “உங்கள் இந்து யூனிவர்சிட்டியில் ஈழவர்களை சேர்த்துக் கொள்வீர்களா?” என்ற கேள்விக்கு, “நீங்கள் புலையர்களை கல்லூரிகளில் சேர்ப்பீர்களா?”  என ஆத்திரம் பொங்க கேட்டார் மாளவியா.கூட்டத்தினர் எழுந்து ஏகோபித்த குரலில் “நாங்கள் சேர்த்துகொள்வோம். அதில் எங்களுக்கு ஆட்சேபனை எதுவுமில்லை” என்று சொல்ல மாளவியா மூர்ச்சையாகிப் போனதாக அன்றைய குடியரசு எழுதியது.
தொடர்ந்து சாதியமமைப்பை ஆதரித்து பேசிவந்த மாளவியாவை கண்டித்து மீண்டும் தலையங்கம் எழுதியது குடியரசு பத்திரிக்கை.
“இந்து சாதிய அமைப்பில்,எல்லா சாதியினருக்கும் ஒரே மாதிரியான சத்தியம் இருக்க முடியாது.மற்றொருவன் சமைத்ததை பாவம் என்றும், மற்றொருவன் தொட்ட தண்ணீரை குடிப்பது தோஷம் என்றும், மற்றொருவன் பார்க்க சாப்பிடுவது நரகம் சித்திக்க கூடியது என்றும் பண்டித மாளவியா போன்ற ‘உத்தமபிராமணர் ‘ களுக்கு தோன்றலாம். ஆனால் இப்படி நினைப்பதே ஆணவமென்றும், அறிவீனம் என்றும் அந்த வழக்கத்தை ஒழித்தாலொழிய, நாடு ஒற்றுமையும், சமத்துவமும் அடையாதென்றும், அதை ஒழிக்க சத்தியாகிரகம் செய்ய வேண்டுமென்றும் உண்மையான சமூக சீர்திருத்தக்காரர்களுக்கு தோன்றலாம்.”என்று குறிப்பிட்டிருந்தது.
தாழ்த்தப்பட்டோருக்கான தனி வாக்காளர் தொகுதியை மாளவியா எதிர்த்தபோது, பார்ப்பனீயத்தை காப்பாற்ற மாளவியாவிற்கு எவ்வளவு அக்கறை உண்டோ அதுபோலவே பார்ப்பனீயத்தை ஒழித்து மனிதத்தன்மையைப் பெற அம்பேத்கருக்கும், இரட்டைமலை சீனிசாசனுக்கும் உரிமை உண்டு என்று சொன்னார் அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.பால்ய விவாக தடைசட்டம் வந்தபோது திலகரோடு சேர்ந்து அதை எதிர்த்தவர் மாளவியா.
பம்பாய் கல்பதேவியில், 1932ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி நடந்த நிகழ்ச்சியொன்றில் சமபந்தி போஜனம், கலப்பு மணம் இவைகளைப் பொறுத்தவரையில் ஜாதிக்கட்டுப்பாடுகளை ஒழிக்கும் விஷயத்தை நான் ஒப்புகொள்ள முடியாது என்று பேசினார் மாளவியா.
“தீண்டாமை ஒழிய வேண்டுமானால் முதலில் ஜாதி வித்தியாசம் ஒழிந்தாக வேண்டும். ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமானால் ஜாதிக்கட்டுப்பாடும், வருணாசிரமதருமங்களும் குழிவெட்டிப் புதைக்கப்பட வேண்டும். இவற்றை நிறைவேற்ற நாட்டில் கலப்புத் திருமணங்கள் நடைபெறவேண்டும்.
ஒவ்வொரு ஜாதிகளும் தமக்கு மேற்பட்ட ஜாதிகளுடனும், கீழ்ப்பட்ட ஜாதிகளுடனும் கலந்து ஒன்றாக வேண்டும். பஞ்சமர் முதல் பார்ப்பனர் வரையுள்ள எல்லா வகுப்புகளும் கலந்து ஒன்றாகும் வரை ஜாதிகள் ஒழியாது. தீண்டாடையும் ஒழியாது.
இன்று இக்காரியங்களுக்கு தடையாக இருப்பது இந்து மதமும், அதில் உள்ள வேத, புராண, இதிகாச, சாஸ்திரங்களும் அதை படித்துவிட்டு சொந்த புத்தியில்லாமல் இருக்கும் மாளவியா போன்ற மண்ணுருண்டைகளுமே ஆகும்.” என்று மாளவியாவின் பேச்சிற்கு பதிலடி கொடுத்தார் குத்தூசி குருசாமி.
பார்ப்பனர்கள் கடல் தாண்டி பயணம் செய்ய சாஸ்திரத்தில் இடமில்லை என்பதால்,  இங்கிலாந்து சென்றபோது  அதனால் ஏற்படக்கூடிய தோஷத்தைக் கழிக்கவேண்டி ஒரு கூஜாவில் கங்கை நீரையும், கொஞ்சம் களிமண்ணையும் எடுத்துச் சென்ற வைதீகப் பார்ப்பனர்தான் இந்த மாளவியா. இந்த இழி செயலைக் கண்டித்து “மண்ணுருண்டை மாளவியா” என அப்போதே குத்தூசி குருசாமியால் விமர்சிக்கப்பட்ட ஒருவருக்குத்தான் தற்போது காவிக்  கூட்டம் பாரதரத்னா வழங்கப்போவதாக அறிவித்திருக்கிறது.