‘கொள்கையை நிறைவேற்றும் வழியை பெரியார் கற்றுத்துந்துள்ளார்’ என்று சொல்லியுள்ளீர்களே…. அது என்ன? என்று கேட்கிறார்கள் சிலர்.

உலகில் வெற்றியடைந்த புரட்சிகரமான போராட்ட வரலாறை படித்துப் பார்த்தால், அதை பெரியாரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால், எளிதாக அறிந்துகொள்ளலாம் கொள்கையை நிறைவேற்றும் வழியினை!

அது என்ன வழி?

மக்களை மாற்றத்திற்கு தயார்படுத்துவதே அந்த வழி!

கொள்கையை தொடர்ந்து…. தொடர்ந்து என்றால் இடையறாது தொடர்ந்து பிரச்சாரம் செய்வது, அதை விட முக்கியமாக, அந்த கொள்கை வழி வாழ்ந்து முன்னுதாரணமாக இருப்பது ஆகிய வழிகளின் மூலமாக மக்களை மாற்றத்திற்கு தயார் படுத்துவதே பெரியாரின் வழி!

இதுவே வெற்றிகரமான வழி! நிரூபிக்கப்பட்ட வெற்றிகரமான வழி!

பெரியார் காலத்தில் தயார்படுத்தப்பட்ட மக்கள் மூலமாக பெறப்பட்ட வெற்றிதான் பிற்காலத்தில் தேர்தல் அரசியலில் ஈடுபட்ட திராவிட இயக்கங்களின் தேர்தல் வெற்றிகள்!

இந்த உண்மையை அறிந்த அறிஞர் அண்ணா, உடனடியாக தேர்தலில் போட்டியிடாமல், காலம் கனியும்வரை காத்திருந்தார்.

தேர்தல் வெற்றியை நோக்கி மட்டுமே இயக்கங்களின் செயல்பாடுகள் மாறத் தொடங்க…. மக்களை தயார் படுத்தும் பணி தொய்வுற்று… இறுதியில் நின்றே விட்டது!

இதன் மோசமான விளைவுகளை தற்போது தேர்தல் அரசியலில் ஈடுபடும் திராவிட இயக்கங்களுக்கு எதிராக ஏற்படுத்தியுள்ளது!

மக்களுக்கு நலன் பயக்கும் பெரியாரின் கொள்கைகளை கொண்டுள்ள திராவிட இயக்கங்கள், கொள்கை ரீதியான பிரச்சாரங்களை அதிக அளவில் தொடர்ந்து செய்வதன் மூலமாக, மக்களை கொள்கை ரீதியாக மாற்றும் தொடர் பணியை செய்வதன் மூலமாக, வெற்றியை தொடர்ந்து பெற முடியும்!

பெற்ற வெற்றியின் மூலமாக மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்த முடியும்!

எதிரி எப்போது தவறு செய்வான்? அந்த தவறை சுட்டிக்காட்டி வெற்றி பெறலாம்! என்று எதிரியின் தவறுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் வழியல்ல பெரியாரின் வழி!

பெரியாரின் வழியை பின்பற்றினால் கொள்கை கூட்டணியே வலுவான கூட்டணியாக அமையும்!

– திராவிடப் புரட்சி