ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து?

இன்றைக்கு ஒரு பத்திரிக்கையில், புது தில்லியிலிருந்து க.திருநாவுக்கரசு எனும் பெயரில் எழுதிய கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இங்கே அதே பெயரில் திராவிடர் இயக்கத்தைப் பற்றி எழுதும் ஒரு எழுத்தாளர் இருக்கும்போது, அதே பெயரில் எழுதுகிறோமே என்ற தார்மீக பொறுப்பு அந்த எழுத்தாளரிடமும் இல்லை, வெளியிடும் பத்திரிக்கையிடமும் இல்லை;

சரி, விஷயத்துக்கு வருவோம். இப்போது, தமிழ் நாட்டில் ஜெயலலிதா மீதான தனி நபர் வழிப்பாட்டுக்கு ஆரம்பப் புள்ளியே பெரியார் தானாம். அவர் இயக்கத்தை சர்வாதிகாரியாக இருந்து நடத்தினாராம், பொதுக் கூட்டங்களில், தனது கருத்தைக் கூறிவிட்டு, இதை ஏற்பவர்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்; முடியாதவர்கள் தள்ளி விடுங்கள் என்று கூறினாலும், இயக்கத்திற்குள், அதுபோல் ஒரு ஜனநாயக கோட்பாட்டை, பெரியார் என்றைக்கும் கடைப்பிடித்தது கிடையாதாம். இது தனி நபர் வழிபாடாம், இதைத் தான், கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எல்லோரும் அப்படியே கடைப்பிடித்தார்களாம், அண்ணா மட்டும் விதி விலக்காம்.

இதோடு நிற்கவில்லை; சீனாவில் மாவோ எப்படி வழிபடப்பட்டார் என்பது உலகறிந்த செயலாம். (காம்ரேடுகள் கவனத்திற்கு),

இந்த கருத்தெல்லாம், திராவிட இயக்கத்தின் வரலாறு தெரியாதவர்களுக்கு அதிர்ச்சியைத் தருமாம். ஆனால் இது உண்மையாம்?

இவ்வாறு, இந்த உண்மை விளம்பி, புது தில்லியிலிருந்து அபத்தத்தை ஒரு கட்டுரையாக வடித்துள்ளார்.
முதலில், பெரியாரை, யாரும் வழிபட வில்லை; அவர் வாழ்ந்த காலத்திலேயே, மேடையிலே அவரை யாராவது பாராட்டினால், உடனே, அவரை, நிறுத்தச் சொல்லுமாறு செய்கை செய்து, நிறுத்துபவர் பெரியார் என்பது அவரது பொதுக் கூட்ட சொற்பொழிவைக் கேட்டவர்களுக்கு நன்றாக தெரியும். புது தில்லிகாரருக்கு தெரியவில்லை என்றால், அதற்கு நாம் பொறுப்பல்ல.
பெரியவர்களைக் கண்டால், காலில் விழும் ஒரு முறையைக் கூட கடுமையாக கண்டித்தவர் பெரியார். மனிதனுக்கு மனிதன் மரியாதை செலுத்துவதற்கு இது முறையல்ல என சுட்டிக்காட்டியவர் பெரியார்.
பொதுக்கூட்டத்தில் தனது கருத்தை கூறுவதற்கு எல்லா உரிமையும் தனக்கு உண்டு என்பதில் எந்த அளவு உறுதியாக இருந்தாரோ, அந்த அளவு பேச்சைக் கேட்கும் மக்களுக்கு, தனது கருத்தை ஏற்றுக்கொள்ளவும், தள்ளிவிடவும், உரிமையுண்டு என வெளிப்படையாக கூறியவர் பெரியார்.
ஆனால், தனது இயக்கம், ஒரு சுயமரியாதை இயக்கம் மட்டுமல்ல; சமூக புரட்சி இயக்கம் என்ற நிலையில் இயக்கத்தில் சேரும்வரை ஒருவரது கருத்து எந்த நிலையில் இருந்தாலும், இயக்கத்தில் தன்னை ஒப்படைத்து விட்டபின்னர், அந்த இயக்கத்திற்கு கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்; தலைமை என்ன சொல்கிறதோ, அதற்கு கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். இது தனது இயக்கத்திற்கு மட்டுமல்ல, எந்த இயக்கத்திலும், இந்த கட்டுப்பாடு மிக முக்கியம் என்பதை, அண்ணா அவர்கள், திமுகவில் கோட்பாடாக, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று சொன்ன நிலையில், பெரியார் அவர்கள், இந்த கோட்பாட்டில், கட்டுப்பாடுதான் மிக முக்கியம் என சொன்னவர். இதில் என்ன தவறு இருக்கிறது.
ஆனால், இன்றைக்கு, ஜெயலலிதாவின் கட்சியில், தனி நபர் வழிபாடு, என்பது, இயக்க கட்டுப்பாடு என்ற நிலையை தாண்டி, அங்கே, செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை எந்த பெரியார் சிந்தனையாளரும் ஏற்றுக் கொள்ளவில்லை;
இயக்கத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதற்கும், தனக்கு பதவி வேண்டும் என்ற நிலையில், ஒருவரை வழிபடும் கூட்டத்திற்கும் முடிச்சு போடுவது, சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியும், பெரியாரைப் பற்றியும் எந்த புரிதலும் இல்லாமல் இருக்கும் ஒருவரின் பிதற்றல் என்று தான் நாம் கருத வேண்டியுள்ளது.
பெரியார் என்ற மகத்தான புரட்சியாளரை, புத்துலகின் தீர்க்கதரிசி என யுனெஸ்கோ பாராட்டிய ஒரு மனித நேயரை, கொச்சைப்படுத்தலாம் என புது தில்லி திருநாவுக்கரசுக்கு ஆசை இருக்கலாம்; எழுத உரிமையும் இருக்கலாம், ஆனால், இந்த மனிதரின் பிதற்றலை, சுயமரியாதையையும், பகுத்தறிவையும் பெரியாரால் புரிந்து கொண்ட எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை தில்லி திருநாவுக்கரசும், வெளியிட்ட பத்திரிக்கையும் புரிந்து கொள்ள வேண்டும்.