அரசு நடவடிக்கை எடுக்குமா?-கி.தளபதிராஜ்

சென்னை அடுக்குமாடி கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் வரும் செய்திகள் நெஞ்சை உலுக்குவதாக இருக்கிறது.

கட்டிடம் இடிந்தது தொடர்பாக தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி ரெகுபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்துள்ளது. பல்வேறு நோக்கில் அந்த குழு விசாரணையைத் தொடரலாம். அதே சமயம் அந்த கட்டிடத்திற்கு போடப்பட்ட பூமி பூஜை பற்றியும் விசாரணை மேற்கொள்ளவேண்டும். கட்டிடம் நேர்த்தியாக அமையவேண்டும் என்பதில் இப்படிப்பட்ட பூமி பூஜைகள் கட்டிடப்பொறியாளர் முதல் உரிமையாளர் வரைக்கும் மனதளவில் முக்கிய பங்கு வகிக்கிறது. பூஜையை அதிக செலவில் சிறப்பாக செய்துவிட்டோம் என்கிற அசாத்திய துணிச்சலில் கட்டுமானப்பணியில் உரியவர்கள் கோட்டைவிட்டிருக்கலாம். அப்படியிருக்கும் பட்சத்தில் அவர்களை ஏமாற்றிய மேற்படி கடவுளர் மீது நம்பிக்கை துரோக வழக்கு தொடரவேண்டும். அதற்கு காரணமான குருக்கள் மீதும் சட்டம் பாயவேண்டும்.

மறைந்த நாவலர் சோமசுந்தரபாரதியார் ஒருநாள் ஒரு புரோகிதத் திருமணத்திற்கு சென்றிருந்தார். திருமண நிகழ்வு நடைபெற்றுகொண்டிருந்தது. தாலிகட்டும் நேரம் நெருங்குகையில் திருமணத்தை நடத்திகொண்டிருந்த குருக்கள் சொல்லும் மந்திரம் நாவலர் காதில் தவறாக விழ குருக்களை நெருங்கி மீண்டும் அந்தமந்திரத்தை சொல்லுமாறு வேண்டினார் நாவலர். இரண்டு ஸ்லோகங்கள் சொன்னதுதான் தாமதம். நிறுத்து நிறுத்து என்று சப்தமிட்டார். காரணம் குருக்கள் சொன்னது கருமாதி வீட்டில் சொல்லப்படும் மந்திரம். நாவலர் தமிழ், சமஸ்கிருதம் இரண்டிலுமே புலமை பெற்றவர் என்பதால் அவர் மந்திரத்தின் பொருளை உணர்ந்து நிறுத்தச்சொன்னார்.இந்தத் தகவலை பலரும் சொல்ல கேட்டிருக்கிறோம்.

இதை சொல்வதற்கு காரணம் மேற்கண்ட கட்டிடத்திற்கு பூமிபூஜை போடப்பட்டபோது மந்திரங்கள் தவறாக உச்சரிக்கப்பட்டிருக்கலாம். எனவே அந்த நேரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரங்கள் ஏதேனும் இருப்பின் மந்திரங்கள் சரியாக சொல்லப்பட்டிருக்கிறதா என்பதை சரிபார்க்கவேண்டும். தேவைப்பட்டால் சங்கராச்சாரி போன்றவர்கள் தலைமையில் கூட ஒரு குழு போடலாம். மந்திரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட குருக்களுக்கு சரியான தண்டனை வழங்க வேண்டும். மந்திரங்கள் சரியாக இருந்தால் கடவுளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க தயங்கக்கூடாது. அரசு ஆவண செய்யுமா?