அம்பாஸிடர்! -கி.தளபதிராஜ்

அம்பாஸிடர் கார் உற்பத்தியை கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்னர் அந்த நிறுவனம் நிறுத்தியதைத் தொடர்ந்து பல்வேறு பதிவுகள் பத்திரிக்கைகளில்! அகலா நினைவாய் அப்படியொரு அம்பாஸிடர் பயணம் என் வாழ்விலும் நடந்தது. மீண்டும் அந்த நினைவுகள் நிழலாடுகிறது.

மயிலாடுதுறையிலிருந்து சென்னையை நோக்கிய முதல் பயணம் அது. 1973 டிசம்பர் 24 ! அப்போது எனக்கு வயது ஒன்பது. தந்தை பெரியார் அவர்கள் உடல்நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை மோசமடையவே தலைமைக்கழகத்திலிருந்து வந்த அழைப்பால் முதல்நாள் இரவே வேலூருக்குப் பயணமானார் கவிஞர்(கலி.பூங்குன்றன்). மறுநாள் விடியற்காலை வீட்டிற்கு வந்த தந்தியைப் பார்த்து வீடே அதிர்ந்து போனது. அறிவுலக ஆசான் தந்தை பெரியார் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்து ஆளாத்துயரத்தில் ஆழ்த்திய செய்தியை சொன்னது அந்த தந்தி. அப்பா வாசலில் சோகமாய் அமர்வதும் இடையிடையே நண்பர்களுடன் ஏதோ கலந்தாலோசிப்பதுமாக பரபரப்பாக இருந்தார்.

அப்பாவின் நண்பர் நெல்லுமண்டி கணேசன் அவர்களின் அம்பாஸிடர் கார் சரியாக 7 மணிக்கு எங்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது. அவசரஅவசரமாக அப்பா அந்தக்காரில் ஏறி அமர்கிறார். நான் அவரையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறேன். திடீரென காரிலிருந்து இறங்கியவர் ஒரு ரூபாய் சலவை நோட்டை என் பையில் தினித்துவிட்டு மீண்டும் காரில் ஏறி புறப்பட்டுவிட்டார். புறப்பட்ட காரையே வெறித்தவனாய் கார் சென்ற திசைநோக்கி சாலையில் கண் பதித்து வீட்டு வாசலிலேயே அமர்ந்திருக்கிறேன். பத்து பதினைந்து நிமிடங்கள் கடந்திருக்கும். மீண்டும் அதே கார்! வீட்டு வாசலில்!. என்ன நினைத்தாரோ? அப்பா என்னையும் அந்தக்காரில் அள்ளிக்கொண்டு சென்னையை நோக்கிப் புறப்பட்டார்.

பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் மிதந்தது பெரியாரின் இறுதிப்பயணம் ! ஏராளமான பெரியவர்களும், தாய்மார்களும் துக்கம் தாளாது துவண்டனர். எனது அத்தை சுசீலா அங்கே நடுரோட்டில் தலையில் அடித்துகொண்டு அழுது புறண்ட காட்சி இப்போதும் என் மணக்கண்ணில் வந்து போகிறது.

அன்றையதினம் நடந்த மற்றொரு நிகழ்ச்சி!
தந்தை பெரியார் அவர்கள் உடல்நலக்குறைவால் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை அறிந்த ஒரு பார்ப்பன ஆசிரியர் “ராமசாமி நாய்க்கன் இறந்தால் உங்களுக்கு சாக்லேட் உண்டுடா” என மயிலாடுதுறையில் தனது வகுப்பறையில் சொல்ல அங்கு பயின்ற நமது இயக்க குடும்ப மாணவர்கள் அதை அப்படியே கழகத்தோழர்களிடம் சொல்லியிருந்தனர். பெரியார் அவர்கள் இறந்த செய்தி கிடைத்ததும் நமது தோழர்களுக்கு அந்தப் பார்ப்பன ஆசிரியரின் ஞாபகம் வந்துவிட்டது.

கழகத் தோழர்கள் நாகராஜ்,ரெங்கராஜ்,குண்டு கலியபெருமாள், கண்ணன், தியாகராஜன் மற்றும் சிலர் அவர் வீட்டுக் கதவைத்தட்டி, அவரை வெளியே அழைத்து “பெரியார் மறைந்து விட்டார். இனிப்பு எங்கே? இனிப்பு எங்கே?” எனக் கேட்டு அவரை நைய புடைத்து விட்டனர். அந்த பார்ப்பனர் அப்படி தான் சொல்லவே இல்லை என்று மறுத்ததையும், தன் வீட்டுக்குள் ஓடி ஒளிந்ததையும் இரண்டு தினங்கள் கழித்து நாங்கள் ஊருக்கு திரும்பியதும் எங்கள் வீட்டுவாசலில் அமர்ந்து கழகத்தோழர்கள் அப்பாவிடம் சொல்லிச் சொல்லி சிரித்துக்கொண்டிருந்தது காதில் விழுந்தது. அந்தத்தோழர்களில் சிலர் பெரிய அரசு அதிகாரிகளாக பணியாற்றி தற்போது ஓய்வும் பெற்றுவிட்டனர் என்பதை நினைக்கையில் உடல் சிலிர்க்கிறது.

என்ன தோழர்களே! எனது அம்பாஸிடர் பயணம் எப்படி?