வரலாறு திரும்பும்! -கி.தளபதிராஜ்.

“மோடியும் லிபரல்களின் தோல்வியும்” என்கிற ஒரு கட்டுரையை
தமிழ் இந்து நாளிதழ் (23.5.14) வெளியிட்டிருக்கிறது. இந்தத்தேர்தலில் சுதந்திரப் போக்காளர்கள் (லிபரல்கள்) ஏன் தோற்றுப்போனார்கள்
என்பதற்காண காரணமாக

“இடதுசாரி அறிவுஜீவிகளும் அவர்களையொத்த சுதந்திரப் போக்காளர்களும் ஒரு கூட்டமைப்புபோலச் செயல்பட்டார்கள். மதச்சார்பின்மைதான் மிக மேன்மையானது என்பதுபோல நடந்துகொண்டார்கள். மூட நம்பிக்கைகளுக்கும் பழக்கவழக்கங்களுக்கும் எதிராக சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய வேண்டும் அல்லது புதிய சட்டங்களை இயற்ற வேண்டும் என்று முழங்கினார்கள்.

அறிவியல் விஞ்ஞானி, ராகுகாலம் கழிந்த பிறகு வருவதுகூட
விமர்சனத்துக்கு உள்ளாயிற்று.அடக்குமுறையாகவே மாறியது”

என்று சொல்லும் கட்டுரையாளர்

“பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த, மதநம்பிக்கையுள்ளவர்களின்
மனக்குறையை மோடி நன்கு புரிந்து கொண்டார்.மதச்சார்பின்மை வெறும் பொய்வேடம் என்பதை அம்பலப்படுத்தினார்.அதனால் அவர் வெற்றிபெற்றார்” என எழுதுகிறார்

மோடி பெரும்பான்மை சமுதாயமான இந்து சமுதாயத்தின் ஒட்டு மொத்த வாக்குகளை பெற்றிருக்கிறாரா? வெறும் 31 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றிருக்கிறார் மோடி. அதுவும் ஊழல் மற்றும் விலைவாசிப் பிரச்சனை காரணமாக காங்கிரஸ் மீது மக்களுக்கு ஏற்பட்ட வெறுப்பை அறுவடை செய்திருக்கிறார் மோடி என்பதே உண்மை.

நிலைமை இப்படியிருக்க இதை மதசார்பின்மை கொள்கைக்கு
எதிரான வெற்றியாக சித்தரிக்க முயல்வது ஆதிக்க சமூகத்தின்
ஆழ்மனதையே வெளிக்காட்டுகிறது.

“ஐரோப்பாவின் பல பகுதிகளில் இப்போது மதம் என்றாலே வெறுக்கிறார்கள். ஹாலந்து நாட்டில் மிகவும் அழகான பல தேவாலயங்கள் மக்களுடைய வருகை குறைந்ததால் தபால் அலுவலகங்களாக மாற்றப்பட்டுவிட்டன.”என புலம்புகிறார் கட்டுரையாளர். அவை மானுட சமூகத்திதின் அறிவு முதிர்ச்சியில் ஏற்பட்ட மாற்றங்கள்!

நாத்திகர்களாலோ, மதச்சார்பின்மை கொள்கையாளர்களாலோ எந்த வழிபாட்டுத்தலங்களுக்காவது வன்முறையால் கேடு விளைவிக்கப்பட்டிருக்கிறதா?. ஆர்.எஸ்.எஸ் வகையறாக்களால்
இந்தியாவில் உள்ள மசூதிகளுக்கும் தேவாலயங்களுக்கும் மோடி ஆட்சியில் தீங்கு ஏற்படாமல் காப்பாற்றப்படட்டும் முதலில்!

நம் நாட்டில் நடைபெறும் அறிவியல் மாநாடுகளே சிறிய கும்பமேளா
போலத்தான் திருவிழாக் கோலமாக இருக்குமாம்.
அசிங்கப்படுத்தப்படவேண்டிய செய்திகளையெல்லாம் அதிசயிக்கிறது கட்டுரை!.

நம்முடைய மதம் அறிவியலுக்கு எதிராக எப்போதும் இருந்ததில்லையாமே? அப்படியா? அரசமரத்தை சுற்றினால் அடிவயிறு பெறுக்கும் என்பது தான் அறிவியலா?
கழுதைகளுக்கு கல்யாணம் செய்தால் கனமழை என்பது
எந்த வகை அறிவு?

மதச்சார்பின்மைக்கு எதிரான வெற்றி என்றால் மோடி
முதலில் தமிழ்நாட்டில் அல்லவா வெற்றி பெற்றிருக்க வேண்டும்?
பெரும்பான்மை இடங்களில் பிஜேபி கூட்டணி டெப்பாசிட்டையே இழந்தது பெரியார் மண் என்பதால்தானே?

ஆச்சாரியார் குலக்கல்வித்திட்டத்தை கொண்டுவந்தபோது கிளர்ந்த எதிர்ப்பில்”ஆளை விடுங்கோ! உதவின்றபேர்ல உபத்திரம் பண்ணின்டு இருக்காதேள்!” னு அக்கிரஹாரமே கூடி ஆச்சாரியாரிடம் எச்சரித்ததெல்லாம் இந்துக்குழுமத்துக்கு மறந்து போயிடுத்தோ?

இராமனுக்கு விபீஷ்ணனும், அனுமனும் கிடைத்தது போல் இன்று உங்களுக்கு மோடி கிடைத்திருக்கலாம். ஆனால் தமிழ்நாட்டில் உங்கள் கனவு ஒரு போதும் பலிக்காது!