புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை!

அங்கே தொட்டு இங்கே தொட்டு இறுதியில் அடிமடியில் கை வைத்த கதையாய், மாந்த நேயர் தந்தை பெரியாரின் முகப்பொலிவை சிறுபான்மையினரை நசுக்கிய நரமாமிசக்கார நரேந்திரமோ(ச)டியுடன் ஒப்பிட்டுப் பேசுகிறார் தன்னை ஒரு அரசியல்வாதியாக எண்ணிக்கொள்ளும் ஒரு திரைப்பட வேடதாரி.

திரைப்படங்களில் ரசிகர்களால் பார்க்க, சகிக்க முடியாத ஒரு காலகட்டம் வரும்வரை நடித்து பயமுறுத்தி, இன்னமும் திரைப்படத்தில் நல்லவர்கள் உண்மையிலும் அப்படித்தான் என்று நம்பும் அப்பாவி மக்களை நம்பி அரசியல்வா(வியா)தியாக மாறியிருக்கும் புரட்டுக்கலைஞர் விஜய்காந்த் அவர்களே, உங்கள் கையில் ஒலி பெருக்கியை (மைக்) கொடுத்திருக்கிறார்கள்.

தேர்தலில் வாக்கைப் பெறுவதற்காக நீங்கள் எதைவேண்டுமென்றாலும் வார்த்தைகளாக வாந்தி எடுங்கள், அது உங்கள் அரசியலை நம்புகின்ற மக்களை பொறுத்தது, நீங்கள் சொல்வதைக் கேட்கும் அரசியல் நாகரிகமற்ற பண்பாடற்ற உங்கள் கூட்டாஞ்சோறு அணியினரை, திருப்திப்படுத்த எதை வேண்டுமென்றாலும் ஊர் ஊருக்குப்போய் உளறிக் கொட்டுங்கள்.

ஆனால் தமிழ்நாட்டின் தன்னலமற்ற தந்தையைப்பற்றி, பெண்ணுரிமைப் போராளியைப்பற்றி ஒப்பீட்டளவில் கூட எவரையும் இணையாகக் கூறுவது, எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியாது.

“தொண்டு செய்து பழுத்த பழம்,
தூயதாடி மார்பில் விழும்’’
என்று அய்யாவை அனுபவித்துப் பாடினார் புரட்சிக்கவி.

அந்தத்தூய வெண்தாடியை, எந்த மதத்தின் இழி நிலையில் இருந்து, இந்த இனத்தை மீட்க வேண்டும் என்று வாழ்நாளெல்லாம் போராடினாரோ, அந்த இந்து சித்தாந்தத்தில் ஊறிப்போன வெறிபிடித்த ஒருவரை தன்னை இந்து தேசியவாதி என்று பெருமை பீற்றிக்கொள்ளும் ஒரு கடைந்தெடுத்த ஆர்.எஸ்.எஸ் அடிவருடியின் முகத்தின் அடிமயிருடனா ஒப்பிடுவது.

மக்களோடும் ஆண்டவனோடும் மட்டும் தான் கூட்டணி என்று தேர்தலுக்கு முன்வரை கூறிவிட்டு இப்பொழுது மக்கள் எதையும் மறப்பார்கள் என்று எண்ணி ஏற்கெனவே ஆண்டவரோடு கூட்டணி அமைப்பதற்கு பேரம் நடத்தி, பேரம் படிகின்றவரை மோடியின் படத்தைக்கூட காட்டவில்லை. பேரம் படிந்த பிறகு அதுவரை பிரச்சார ஊர்தியில் காட்டாத மோடியின் கொடியைக் கட்டியவர், படத்தைக் காட்டியவர். அடடா என்ன அரசியல் நாகரிகம்!

பேரத்தில் மிக அதிகமாக பெற்றுவிட்ட பிறகு கொடுத்தவனை புகழ்ந்து தள்ளுவது, இப்படி ஒரு அடிமை தங்களுக்கு இதுவரை வாய்த்ததில்லை என்று மோடிக்கூட்டமே வியக்குமளவிற்கு சரணாகதியானால் என்னை மிஞ்ச ஆள் இல்லை என்பதுபோல் கடைசியில் மோடியின் தாடியை அழகோ அழகு என்று வர்ணிக்க வந்துவிட்டார்.

உடம்பிற்கு எந்த நோயிமில்லாமல் மிகவும் ஆரோக்கியமாய், ஆட்டுப்பாலும் வேர்க்கடலையும் சாப்பிட்டு வெள்ளைக்காரன் ஆட்சியில் பாதுகாப்போடு இருந்தவரை சுதந்திரம் பெற்ற இந்தியாவில் இறந்தவராய் ஆக்கிய இந்து மதவெறியனின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகிப்போன காந்தியாரின் மரணத்தால் பரவிய கலவரத்தை தன் வானொலி உரையின்மூலம் தடுத்து நிறுத்தியவர் எம் தந்தை பெரியார். அவர் மட்டும் கொன்றவன் ஒரு பார்ப்பான் என்று சொல்லி கண் ஜாடை காட்டியிருந்தால் போதும் அன்று அவருக்குப் பின்னால் இருந்த வலிமை மிகுந்த திராவிட இயக்க பட்டாளத்தின் பிடியில் இறுகிப்போய் அக்கிரகாரங்கள் உருத்தெரியாமல் அழிந்து போயிருக்கும். ஆனால் அந்த மனிதநேயர் அதைச் செய்யவில்லை; தன்னை ஒரு அழிப்பு வேலை செய்பவனாக சொல்லிக்கொண்ட அந்தப்பெருமகன் அழிக்க நினைத்தது ஜாதியின் இழிவை – மதத்தின் பெயரால் உழைக்கும் மனிதன் நான்காம் தரமாக நடத்தப்படுவதை – ஆண்டவனின் பெயரால் ஒரு இனத்தை சூத்திரன் பஞ்சமன் என்று அவமானப்படுத்துவதை – இவற்றை வீறுகொண்டு, ஆனால் பகுத்தறிவு கொண்டு அழிக்க நினைத்த அழிவுக்காரர் தந்தை பெரியார்.

ஆனால் நீ சொல்லும் நரேந்திர மோடி யார்?

கோத்ரா ரயில் பெட்டி எரிப்பில் எரிந்த பிணங்களை வைத்து மூன்று நாள்கள் ஊர்வலமாக எடுத்துச்சென்று மதங்களை மறந்து, தாயாய் – பிள்ளையாய் பழகியவர்களை, சகோதர – சகோதரிகளாய் உறவாடியவர்களை எதிரிகளாக்கி , காண்கின்ற இடமெல்லாம் அச்சத்தோடு அலறுகின்ற குரல்களும், நாசியைத் துளைக்கின்ற எரியும் பிணவாடையுமாய் இஸ்லாமியர்களை தன் இந்துத்துவா படைகொண்டு நரவேட்டையாடிய நரேந்திரமோடியுடனா ஒப்பிடுவது மயிரளவில்கூட!

அவ்வளவு பெரிய பிணக்காடாக ஆக்கிய பிறகும்கூட அந்தச் செயலுக்காக வருத்தப்படுகிறேன். ஆனால் குற்ற உணர்வு எனக்கில்லை என்றவருடனா ஒப்பிடுவது மயிரழகில்கூட!

பாலைப் போன்ற கள்ளும் இருந்தாலும், இரண்டும் தன்மையில் வெவ்வேறு என்பது எல்லோரையும்விட ‘உமக்குத்தானே’ நன்கு தெரிந்திருக்கவேண்டும்.

ஈரோட்டில் பிளேக் நோய் வந்து மக்கள் நூற்றுக்கணக்கில் செத்து விழுந்தபோது, பிணங்களின் பக்கத்தில் சென்றாலே நோய் தனக்கு வந்துவிடும் என்று யாரும் நெருங்காதபோதுகூட, அந்தப் பிணங்களைத் தோளில் சுமந்து கொண்டுபோய் அடக்கம் செய்த அந்த மாந்த நேயர் எங்கே!
கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக்கிழித்து கண் திறவாத சிசுக்களைக்கூட எரியும் நெருப்பில் வீசுவதற்கு துணைபோன மரண வியாபாரி மோடி எங்கே!

ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள் என்று அனைவரும் அக்கறையால் சொல்லும்போதுகூட, ‘‘இந்த மக்களை சூத்திரனாக, பார்ப்பானின் வைப்பாட்டி மக்களாக ஆக்கி வைத்து, இந்து மத இழிவிலே விட்டுவிட்டு நான் சுகவாழ்வு வாழமாட்டேன்’’ என்றும்,
‘‘எவன் ஏளனமாய் பார்த்தால் எனக்கென்ன என மான, அவமானம் பாராது உணர்வற்ற நிலையில் கசியும் சிறுநீர் நிரம்பும் மூத்திரவாளியை சுமந்துகொண்டு அடிவயிற்றில் ஏற்படும் பெருவலியை கூட அம்மா அம்மா என்று முனகிக் கொண்டே, தான் கொண்ட அக்கறையால் இந்த இனத்தின் இழிவு நீங்க தன்னுயிரை ஈந்த தன்மான, இனமான மீட்பரை கண்ட கழிசடைகளோடு ஒப்பிட்டுப்பேசி சாக்கடையைச் சந்தனமாகப் பூசிக்கொள்ளும் உன்மத்தம் பிடித்த உளறல் வாயரே, உமக்கு வேண்டுமென்றால் இது போகிற போக்கில் சொல்வதாகக் கூட இருக்கலாம். கொடுத்தவர்களை மகிழ்விக்கும் ஒரு கூத்தாடியின் சொல்லாகக்கூட அது இருக்கலாம். ஆனால் எங்களைப் போன்ற பெரியார் தொண்டர்களை அது சீண்டுவதாக இருக்கிறது. எனவே தான் சொல்கிறோம், புரட்டுக் கலைஞரே நிறுத்தும் உம் உளறலை.

ஒருவேளை காலையில் எழுந்ததும், தெளிந்ததும் நீங்கள் கேட்கலாம், ‘‘நான் அப்படியா பேசினேன்’’ என்று…
அய்யாவை அன்று பாடிய புரட்சிக்கவிஞர் இன்று இருந்திருந்தால் கவிபாடும் தன் தூரிகையால்… உம்மைக் கண்டந்துண்டமாக ஆக்கி இருப்பார்.

– திராவிடக் குடிமகன்