மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

அற்புதம் அம்மாளின் நேர்காணல் தி இந்துவில் வந்திருக்கிறது. திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க ஆகிய இயக்கங்கள் குறித்த அவரது கருத்துகளை வேதனையோடு பகிர்ந்துள்ளார்.

“ராஜீவ் கொலை வழக்கில் விடுதலை பெறுபவர்களை வைத்து கலைஞருக்கு எதிராக பேட்டி கொடுக்கவும், பிரச்சாரம் செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்படலாம், அவர்களை அரசியலுக்கு பயன்படுத்த முயற்சிக்கலாம்” என்று இரண்டு நாட்களுக்கு முன்பு நான் பதிந்த கருத்துகளை படித்து சிலர் வருத்தப்பட்டனர். அவர்கள் தற்போது அற்புதம் அம்மாளின் பேட்டியை படித்து ஓரளவிற்கு புரிந்துகொண்டிருப்பார்கள் என்று நம்புகிறேன்.

அற்புதம் அம்மாள் உள்ளிட்ட பலர் அறிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால்…

விடுதலை குறித்த செய்தி சுடச் சுட வந்து சேர்ந்தபோது, நான் நின்றுகொண்டிருந்த இடம் பெரியார் திடல். உடனடியாக தொலைக்காட்சியும் கணினியும் இருக்கும் அறையை நோக்கி நடக்கவில்லை ஓடினோம். அடுத்த சில நிமிடங்களில், அங்கிருந்தே விடுதலையை மகிழ்வோடு வரவேற்றும், தமிழக அரசை பாராட்டியும் முகநூலில் நிலைத்தகவலை பதிந்தோம். அங்கிருந்தவர்கள் அனைவரும் செய்தி அறிந்து மகிழ்ந்தனர். இந்த மகிழ்ச்சிக்கான காரணத்தை அற்புதம் அம்மாள் புரிந்துகொள்வார் என்று நம்புகிறேன்.

பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை ரத்து மற்றும் விடுதலை ஆகிய இரண்டு செய்திகளுக்கும் தி.க மற்றும் தி.மு.க தோழர்கள் மகிழ்ந்தனர், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர், கொண்டாடினர். இவ்விரு இயக்கத்தின் தலைமையின் எண்ணத்தை இயல்பாக வெளிக்காட்டினர் அதன் தொண்டர்கள். தலைமைக்கு எதிராக நடப்பவர்கள் அல்ல இவ்விரு இயக்கத்தின் தொண்டர்களும் என்பதை அற்புதம் அம்மாள் நன்றாக அறிந்தவரே.

இன்று மட்டுமல்ல, பேரறிவாளன் விடுதலை பெறவேண்டும் என்ற உணர்வை இவ்விரு இயக்கங்களின் தொண்டர்களும் ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து கொண்டிருப்பது என்பது தற்செயலான ஒன்றல்ல என்பதை அற்புதம் அம்மாள் புரிந்துகொள்ள முயலவேண்டும். அவ்வுணர்வு பட்டுப்போகாமல், இன்றளவும் தொடர்வது இவ்விரு இயக்கங்களின் தலைவர்களின் ஆதரவு இல்லாமல் என்று அற்புதம் அம்மாள் கருதினால் அது தவறு.

இன்றும், குற்றமற்றவர்கள் என்று சொல்லி விடுதலை செய்யவில்லை என்பதை நன்றாக உணர்ந்திருக்கும் அற்புதம் அம்மாள், ‘அறிவுக்கும் இயக்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தி.க அறிவித்தது’ என்று தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜீவ் கொலை நடந்த போது, அறிவு பெரியார் திடலில் இருந்தார் என்பதை அவரே சொல்லுகிறார். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கான சம்மனும் அதே திடலுக்கே அனுப்பப்பட்டது. தந்தை பெரியாரால் உருவாக்கபட்ட திராவிடர் கழகம், ஆர்.எஸ்.எஸ் போன்று தடை செய்யப்படாமல் இருக்க, அதன் தலைமை எந்த அளவிற்கு போராடியிருக்கும் என்பதை அற்புதம் அம்மாள் ஏனோ சிந்திக்க மறுக்கிறார். “விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று வைகோ அவர்கள் சொல்லியதாவது அவருக்கு நினைவிருக்கிறதா? என்பது தெரியவில்லை. அவருக்கு எப்படி மகன் முக்கியமோ, அப்படி தலைவர்களுக்கு இயக்கம் முக்கியம். கொலைப் பழியை ஓர் இயக்கம் சுமக்காமல் இருக்க செய்யவேண்டியவைகளை செய்வதே ஒரு இயக்கத்தின் தலைமையின் மிக முக்கியமான பணி என்பதை அற்புதம் அம்மாள் அறியாதவர் அல்ல.

ராஜீவ் கொலை நடந்த பிறகு, காவல்துறை யாரை நோக்கி திரும்பியது, யார் யார் விசாரணைக்கு அழைக்கபட்டார்கள், கைதானார்கள், சிறை சென்றார்கள், ஓடி ஒளிந்தார்கள், தலைமறைவாக வாழ்ந்தார்கள் என்பதையெல்லாம் அற்புதம் அம்மாள் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதில் எத்தனை பேர் அற்புதம் அம்மாளின் போற்றுதலுக்குரிய ஜெயலலிதா அம்மையாரின் கட்சியை சேர்ந்தவர்கள்? என்பதை அற்புதம் அம்மையாரின் மனசாட்சியே அவருக்கு எடுத்துச் சொல்லும்.

ஜெயலலிதா இதுநாள் வரை இவரது போராட்டத்தை அறியாதவரா? இவரது போராட்டத்தில் இருக்கும் நியாயத்தை உணர்ந்து ஒரு நாளாவது தூக்கு தண்டனையை ரத்து செய்யவேண்டும் என்று அறிக்கை விட்டதுண்டா? மாறாக, “ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை” என்றுதானே அறிக்கை விட்டார்.

இன்று சந்திக்க வாய்ப்பளித்த ஜெயலலிதாவை இதுநாள்வரை அற்புதம் அம்மாள் ஏன் சந்திக்க முயலவில்லை? அல்லது முயன்றும் சந்திக்க முடியவில்லையா? இந்த கேள்வியை அற்புதம் அம்மாளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

இன்றும் நிரபராதிகளை விடுதலை செய்யுங்கள் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்கள் கலைஞரும் ஆசிரியர் வீரமணியும் தானே…. ஜெயலலிதா அம்மையார் அல்லவே! ஜெயலலிதா அவர்களை நிரபராதிகள் என்று அவர் வாயால் சொல்லுவாரா? ஜெயலலிதாவை பொறுத்தவரை தண்டனை பெற்ற குற்றவாளிகளை விடுதலை செய்கிறார் என்பதை அற்புதம் அம்மாள் மறந்துவிடக்கூடாது.

ராஜீவ் கொலையை பயன்படுத்தி அரசியல் லாபம் அடைந்தவர்கள் நல்லவர்களாகவும், நட்டம் அடைந்தவர்கள் கெட்டவர்களாகவும் அற்புதம் அம்மையாரின் கண்களுக்கு தெரிந்தால் அதில் வியப்பில்லை.

“கனக்கும் பையை ஒரு தோளிலிருந்து இன்னொரு தோளுக்கு மாற்றுகிறார் அற்புதம் அம்மாள்” என்று முடிகிறது தி இந்துவின் கட்டுரை. ஆம். வலியோடு சுமந்த தோளை விட, இதுநாள் வரை சுகமாக இருந்த தோள் அவருக்கு வசதியாக இருக்கிறது.

மாற்றம் ஒன்றே மாறாதது! அற்புதம் அம்மாளும் அதற்கு விதிவிலக்கல்ல!

நன்றி: திராவிடப் புரட்சி