பேசநா இரண்டுடையாய் போற்றி!

ராஜீவ் கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டவர்கள் விடுதலை குறித்து கருணாநிதி இரட்டை வேடம் போடுகிறார், கபட நாடகம் ஆடுகிறார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

கீழ்கண்டவற்றையும் பலர் படித்து தெரிந்துகொள்ளவேண்டும், தெரிந்து அதை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவேண்டும்.

“ ராஜீவ் காந்தி கொலைவழக்கு குறித்து சி.பி.ஐ விசாரித்தபோது, எனது தலைமையிலான தமிழக அரசு அதற்கு முழு ஒத்துழைப்பையும் நல்கியது. நளினி உட்பட இன்னும் சிலருக்கு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் மரணதண்டனை வழங்கப்பட்டது. இதை சென்னை உய்ரநீதிமன்றமும் உறுதிபடுத்தியது. உச்சநீதிமன்றமும் 1999 ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரணதண்டனையை உறுதி செய்தது. உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு ஒன்பது வருடங்கள் ஆகியும், மரணதண்டனை நிறைவேற்றப்படவில்லை. மாறாக, நளினிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை ஆயுள் தண்டனையாக ஆக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு நளினியை காப்பாற்றியது படுகொலை செய்யப்பட்ட ராஜீவ் காந்தியின் மனைவியும், காங்கிரஸ் கட்சியின் தலைவியுமான சோனியா காந்தி. மேற்படி நளினியை, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாரத பிரதமரின் மகள் ப்ரியங்கா சிறையில் சென்று பார்கிறார். இப்படி போய் பார்க்கலாமா? அது அடுக்குமா? இப்போது நளினி ஏதோ உரிமைக்காக போராடுவதுபோல் தன்னை விடுதலை செய்யவேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் மனு போடுகிறார். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும் நடக்காதது எல்லாம் இந்தியாவில் நடக்கிறது! இது சோனியா மற்றும் பிரியங்கா ஆகியோருடைய சொந்த பிரச்சனை அல்ல. அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. இது ஒரு நாட்டு பிரச்சனை. ஒரு முன்னாள் பாரத பிரதமர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்த நாட்டின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவால். யாருடைய தனிப்பட்ட உரிமையும் இதில் இல்லை. இப்போது தமிழகத்தில் எனது தலைமையிலான ஆட்சி நடைபெற்றுகொண்டிருந்தால், தடை செய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாக பேசியிருப்பவர்களை நிச்சயமாக கைது செய்திருப்பேன்.

தற்போது பொடா சட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது என்ற அசட்டு தைரியத்தில் சிலர் பகிரங்கமாக தேச விரோத கருத்துக்களை பேச ஆரம்பித்துவிட்டனர். POTA இல்லாவிட்டாலும், தற்போதுள்ள சட்டவிரோதமான நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் நடவடிக்கை எடுக்க மைனாரிட்டி தி.மு.க அரசின் முதலமைச்சருக்கு மனமில்லை. எப்போதெல்லாம் கருணாநிதி ஆட்சிக்கு வருகிறாரோ, அப்போதெல்லாம் விடுதலைபுலிகள் அமைப்புக்கு ஆதரவான பேச்சுக்கள் தமிழ்நாட்டில் பகிரங்கமாகவே நடைபெறுகின்றன.”

23.10.2008 அன்று நமது எம்ஜியாரில் வெளிடப்பட்ட ஜெயலலிதாவின் அறிக்கையின் ஒரு பகுதியான மேலுள்ளவற்றை படிக்கும்போது….

பேராசைப் பெருந்தகையே போற்றி!
பேசநா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர்தம் தலைவா போற்றி!
வஞ்சக வேந்தே போற்றி!
கொடுமைக் குணாளா போற்றி!
கோழையே போற்றி போற்றி!
பயங்கொள்ளிப் பரமா போற்றி!
படுமோசம் புரிவாய், போற்றி!

சிரித்திடு நரியே போற்றி!
ஒட்டு வித்தை கற்றோய், போற்றி!
உயர் அநீதி உணர்வோய், போற்றி!
எமதுஇனம் கெடுத்தோய், போற்றி!
ஈடில்லாக் கேடே போற்றி!
இரைஇதோ போற்றி! போற்றி!
ஏத்தினேன் போற்றி! போற்றி!

என்ற அறிஞர் அண்ணாவின் ஆரியமாயை பாடல்தான் நினைவுக்கு வருகிறது!

– திராவிடப் புரட்சி