இட ஒதுக்கீடு குறித்து சில அரைவேக்காடுகளுக்கு…

இட ஒதுக்கீடு. சில கேள்வி பதில்கள்.

1) கேள்வி: நகர்ப்புறங்களில், ஃப்ளாட் கலாச்சாரத்தில் ஜாதிப் பாகுபாடே இல்லையாமே?

பதில்: பதில்: கிராமங்களில் வீதிகளில் ஜாதி இருக்கிறதென்றால் நகர்ப்புறங்களில் ஃப்ளாட்டுகே ஜாதி இருக்கிறது. அடயார் டைம்ஸ், திருவான்மியூர் டைம்ஸ், ராயப்பேட்டா மணிக்கூண்டு டைம்ஸ் ஆகிய பத்திரிக்கைகளில் கொட்டிக் கிடக்கும் ‘Non-Brahmins excuse’ போட்ட விளம்பரங்களைப் பார்த்ததில்லையா நீங்கள்? அல்லது மேட்ரிமோனியல் தளங்களில், ‘சாதி பிரச்சினையில்லை. SC, ST தவிர்த்து’ போன்ற விளம்பரங்களைப் பார்த்ததில்லையா? பெரிய வணிக நிறுவனங்களின் மேலாளர்கள் நேர்முகத் தேர்வுக்கு வந்தவர்களின் முதுகைத் தடவி நூல் இருக்கிறதா எனத் தேடும் பாங்கைப் பற்றி கதை கதையாகச் சொல்வார்களே நம்மாட்கள். கேட்டதில்லையா நீங்கள்? IITயில் தலித்மாணவர்களை ரிசர்வேஷன் என மேல்சாதி மாணவர்களும், ஆசிரியர்கள் கிண்டலடிப்பதால் இதுவரை 18க்கும் மேலான IIT மாணவர்கள் தற்கொலையே செய்திருக்கிறார்கள்! paypal நிறுவனத்தில் மெத்தபடித்த நகர்ப்புற மேதாவிகள் சாதிப்பேர் வைத்து விழா எடுத்தார்களே, கேள்விப்படவில்லையா நீங்கள்!!!

2) கேள்வி: பணக்கார கல்வி நிலையங்களில் படிக்கும் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களிடம் இருந்து இட ஒதுக்கீடு உரிமையை பறிக்க வேண்டும் என்று சில மூன்றாம் தர பத்திரிக்கையாளர்கள் கிளம்பியிருக்கிறார்களே?

பதில்: சாதிப் பாகுபாடு என்பது நம் நாட்டின் கலாச்சாரம் மட்டுமல்ல. அது மக்களின் மரபணுவில் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக பதிவுசெய்யப்பட்ட ஒன்று. அதை ஒரு தலைமுறை கல்வி கற்றவுடன் நீக்கிவிட முடியாது. ஆன்டிபயாடிக் மருந்தை எப்படி ஒரே ஒரு வேளை விட்டுவிட்டுச் சாப்பிட்டாலும் மீண்டும் கிருமி பற்றிவிடுமோ அப்படித்தான் இட ஒதுக்கீடு எனும் மருந்தும். ஒரே தலைமுறையில் சரியாகிவிடும் என நினைத்து நீக்கினால், கிருமிக்கு கொண்டாட்டமாகிவிடும். நம் நாட்டில் கடைசி பிற்படுத்தப்பட்டவன், கடைசி தலித் படித்து முன்னேறும் வரை இட ஒதுக்கீடு அவசியம். அப்படி நான் போராடித்தான் ஆவேன் என ஏதேனும் போலித் தமிழ்தேசிய பார்ப்பன அடிமை யாரேனும் கூக்குரலிட்டால் பணக்கார கோவில்களில் 100% இட ஒதுக்கீடு வைத்திருக்கும் பார்ப்பனர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் எதிராகப் போராடச் சொல்லுங்கள். கொஞ்சமேனும் வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு எதிராக வழக்கு போட்டு அச்சட்டத்தை நிறைவேற்ற விடாமல் தடுக்கும் பார்ப்பனர்களிடம் போய் பேசச் சொல்லுங்களேன்! மாட்டார்கள். மாட்டவே மாட்டார்கள்! முதலாளியை எதிர்த்துப் பேச வருமா இந்த போலித் தமிழ்தேசிய பத்திரிக்கையாளர்களுக்கு! தமிழன் தான் இளிச்சவாயன். ஒரு தலைமுறை படித்தவுடனேயே உரிமைகளை இழக்க வேண்டுமாம்! (தோழர் கிளிமூக்கு அரக்கன் சொன்னதைப் போல பத்திரிக்கையாளர்களில் முதல் தரம் மூன்றாம் தரமெல்லாம் இல்லை. வியாபார தரம் மட்டும் தான். சிலர் நடிகையின் தொப்புளை விற்பார்கள். சிலர் தன்னையும், இனத்தையும் விற்பார்கள். வகை தான் வேறு வேறு!)

3) கேள்வி: இட ஒதுக்கீடு சாதியை வலுவடைய வைக்கிறதா?

இட ஒதுக்கீடு சாதியம் வகுத்திருக்கும் பாகுபாடுகளுக்கான மருந்து. பிற்படுத்தப்பட்டவர்களுக்கு கொஞ்சமாகவும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு அதிகமாகவும் அந்த மருந்து நோய்க்கேற்ப தரப்படுகிறது. ஆனால் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும் “அவனுக்கு அதிகம் தருகிறார்கள் பார்” என பிற்படுத்தப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராகத் தூண்டி விடுவதால் சில இடங்களில் இட ஒதுக்கீடு சாதிப்பற்றை வலுவடைய வைப்பதாக தவறாகப் பார்க்கப்படுகிறது. இந்த தூண்டிவிடும் பார்ப்பனர்களையும், போலித் தமிழ்தேசிய பார்ப்பன அடிமைகளையும் ஏதேனும் மருந்து கொண்டு காலி செய்தால் இட ஒதுக்கீடு சாதிப் பாகுபாட்டு அழிப்பு என்ற தன் வேலையை மட்டும் மிகச் சரியாகச் செய்யத் துவங்கிவிடும். அந்த வேலையில் தான் நாம் இறங்க வேண்டுமேயொழிய, இட ஒதுக்கீட்டிற்கு எதிரான வேலைகளில் அல்ல!

-டான் அசோக்