வரலாற்றைப் படியுங்கள் சீமானே! -கி.தளபதிராஜ்

திராவிட முன்னேற்ற கழகம்!
“முன்னேற்றம்” என்பதற்கு பொருள் என்ன?
திருடர் முன்னேற்றம்! அதுதான் அதற்கு பொருள்.

திராவிடக் கொள்கை திராவிடக் கொள்கைங்கிறாங்களே. அது என்ன? திராவிடக் கொள்கை?
நாங்க வந்துதான் சுயமரியாதைத் திருமணம் நடத்திவச்சோம்!
நாங்க வந்துதான் விதவைத் திருமணம் நடத்திவச்சோம்! ன்றாங்க.

போங்கடா வெட்டிப்பயல்களா!

எங்க ஊர்ல பார்த்தா அண்ணன் செத்துப்போயிட்டான். அண்ணன் பொண்டாட்டி கைக்குழந்தையோட நிக்குது. தம்பி கட்டிக்கிட்டான். நீயா செஞ்சு வச்சே? காலம் காலமா இப்படித்தான் நடந்துகிட்டிருக்கு.

சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம் ன்றாங்க… 
எங்க ஊர்ல அய்யர் கிய்யரெல்லாம் கிடையாது. சும்மா வருவாய்ங்க மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு போயிருவான்க.

இதுக்கு ஒரு இயக்கமா? இதுக்கு ஒரு தத்துவமா?

நாங்கதான் ஜில்லாவ மாவட்டம் ஆக்கினோம்.

திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாதுங்குறான். அப்படியா?

-இணையதளத்தில் வெளியான சீமானின் பேச்சு.

சுமார் அய்ம்பது வருடங்களுக்கு முன்னால் வீட்டிற்குவீடு பெண்கள் பூ விழந்து பொட்டிழந்து வெள்ளை உடையில் நடைப்பினமாக வாழ்ந்துவந்த காட்சிகளை இப்போது பார்க்க முடிகிறதா? மொட்டையடித்து காவித்துணியில் முக்காடிட்டு “மொட்டைப்பாப்பாத்தி” என்று அழைக்கப்பட்ட பார்ப்பன வீட்டுப் பெண்களை இப்போது பார்க்க அரிதாகிப்போனது எப்படி?

சீமான் சொல்வது போன்று ஒன்றிரண்டு ஜாதிகளில் அண்ணன் இறந்துவிட்டால் அவருடைய மனைவியை தம்பி திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இருந்தது உண்மைதான். அது அறுத்துக்கட்டுதல் எனச்சொல்லப்பட்டது. 1870 களில் வெள்ளைக்கார ஆட்சி நடந்தபொழுது அரசுப்பணிகளில் ஜாதிவாரியாக பணி நியமனம் நடத்தப் போவதாக பரவலாக பேச்சு எழுந்தது. அந்தந்த ஜாதியைச் சேர்ந்தவர்களும் ஒன்றுகூடி ஜாதிச்சங்கங்களை கட்டமைத்தனர். பின்னாளில் அவர்கள் கடவுள் மற்றும் மன்னர்களின் பெயரைச்சொல்லி அவர்களின் வாரிசாக தம்மை அடையாளப்படுத்தி பெருமையடித்தனர். சில ஜாதிகள் தாங்கள் பார்ப்பனர்களுக்கு இணையான சத்திரியர்கள் என்று சொல்லிக்கொண்டன. பார்ப்பனர்களின் பழக்கவழக்கங்களை உள்வாங்க ஆரம்பித்தனர். விதவைத் திருமணங்கள் அந்த ஜாதிகளிலும் பெரும்பாலும் நின்று போனது. உயர்ஜாதி வகுப்பினர் மட்டும் விதவைகளுக்கு வெள்ளைச்சீலை அணியும் பழக்கத்தை தொடர்ந்து கடைபிடித்தனர். ஆனால் திராவிட இயக்கத்தின் இடைவிடாத பிரச்சாரத்தால் அந்த நிலை நீடிக்க வில்லை.  1921 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி இந்தியாவில் 30 வயதுக்குட்பட்ட விதவைப் பெண்கள் 26 லட்சத்து 32 ஆயிரம் பேர் இருந்துள்ளதாக கூறப்படுகிறது? இன்றைக்கு அப்படிப்பட்ட நிலை இருக்கிறதா என்பதை எண்ணிப்பார்க்கவேண்டும்.

25 வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சிவசங்கரி திரு.வீரமணி அவர்களை பேட்டியெடுக்க பெரியார் திடலுக்கு வந்தார். அவர் கணவரை இழந்தவர் என்ற போதிலும் நெற்றியில் பொட்டுடன் வந்திருந்தார். அப்போது வீரமணி அவர்களைப்பார்த்து, “அய்யா!, பெரியார் என்ற ஒருவர் பிறந்திருக்கா விட்டால் இன்றைக்கு ஒரு சக மனுஷியாக என்னால் நடமாட முடியாமல் போயிருக்கும்” என்று நன்றி உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார். அந்தப் பார்ப்பன அம்மையாருக்கு இருந்த நன்றியுணர்ச்சி கூட சீமான்களுக்கு இல்லாமல் போனது ஏன்?

 “தமிழ்நாடு” பெயர்மாற்றம்!

திராவிடர் இயக்கம்தான், ஜில்லாவை மாவட்டம் ஆக்கியது என்றால் அதற்கொரு கிண்டலா?

வந்தனோபச்சாரம், நமஸ்காரம், அக்கிராசனார், காரியதரிசி போன்ற சமஸ்கிருத உரையாடல்கள் தானாக ஒழிந்து விட்டதா? சென்னை ராஜதானியம் தமிழ்நாடு என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது திராவிட இயக்கத்தின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவின் சாதனையல்லவா? காளிமுத்து உயிரோடிருந்திருந்தால் காயடித்திருப்பார் சீமானை!

“சீர்திருத்த திருமணம் நடத்தி வச்சுட்டோம் ன்றாங்க. எங்க ஊர்ல அய்யர் கிய்யரெல்லாம் கிடையாது. சும்மா வருவாய்ங்க மோளத்தைத் தட்டுவாய்ங்க. கல்யாணத்தை நடத்தி வச்சுட்டு போயிருவான்க” என்கிறார் சீமான்!

தாழ்த்தப்பட்ட மற்றும் நாடார் சமூகம் போன்ற மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக நிகழ்ச்சிகளில் தீண்டாமை கருதி பார்ப்பனர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என்பதே உண்மை. பிற்காலத்தில் வாய்ப்பு வசதிகள் பெருகியதும் அந்த சமூகத்தினர் பார்ப்பனர்களை கலந்து கொள்ளுமாறு வேண்டினர். பார்ப்பனர்களும் பொருளீட்டும் ஆசையில் அவர்கள் வீட்டு திருமணங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தனர். அப்படி நடைபெறும் புரோகிதத் திருமணங்களில் திருமணம் முடியும்வரை மணமகனின் தீட்டு தங்களை தீண்டாமல் இருக்க எச்சரிகையாக மணமகனுக்கு ஒரு தற்காலிக பூனூலை மாட்டிவிட்டு புரோகிதர் திருமணத்தை முடிப்பார். இந்த சூட்சமங்கள் சீமானுக்குத் தெரியுமா?

சுயமரியாதை திருமணச் சட்டம்!

1934 ல் தந்தை பெரியார் அவர்களால் திருச்சியிலே நடத்திவைக்கப்பட்ட சிதம்பரம் – ரங்கம்மாள் திருமணம் 20 ஆண்டுகள் கழித்து அவர்கள் இரண்டு ஆண், இரண்டு பெண்மக்களை பெற்ற நிலையில்

“இத் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று சொல்லப்படுகிறது. இது சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்கிற ஏழு அடி எடுத்து வைத்தல், ஓமம் வளர்த்தல் போன்ற எந்தச்சடங்கும் நடத்தப்பெறாமல் நடைபெற்றுள்ளது.  எனவே இது இந்து சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல. இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படியான பிள்ளையாகவே கருத முடியாது. இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டியாள் பிள்ளையாகவே கருதப்படுவார்கள் !” என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 26.8.1953 அன்று ஜஸ்டீஸ் ராஜகோபாலன், ஜஸ்டீஸ் சத்திய நாராயணராவ் ஆகிய இரண்டு பார்ப்பன நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்தது. (ஆதாரம்: திராவிடர்கழக தலைவர் வீரமணி எழுதிய “சுயமரியாதைத் திருமணம்” தத்துவமும்-வரலாறும்) என்கிற வரலாறெல்லாம் இந்த கத்துக்குட்டிகளுக்கு தெரியுமா?

பின்னர் தந்தை பெரியார் அவர்களும், திராவிட இயக்கமும் தொடர்ந்து போராடியதன் விளைவு 1967 ல் அண்ணா ஆட்சிக்கட்டிலில் ஏறியதும் 1967 ல் சுயமரியாதை திருமண செல்லுபடி சட்டத்தை நிறைவேற்றியது திராவிட இயக்கத்தின் சாதனையல்லவா?

மலம் எடுப்பதிலே கூட தீண்டாமை!

”திராவிட இயக்கம் இல்லேன்னா நாங்க எல்லாம் படிச்சே இருக்க முடியாது -அப்படியா?” என்கிறார்.

கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் எடுக்கப்பட்ட இந்திய சென்சஸ் சென்னை தொகுப்பில் சமூக அந்தஸ்து வரிசையில், பார்ப்பனர், சத்திரியர், வைசியர், வரிசைகளுக்கு கீழே சர் சூத்திரர்கள், நல்ல சூத்திரர்கள் 31 சதவீதம் என்று குறிப்பிடப்பட்டிருந்ததும், 1935 ல் தமிழ்நாட்டில் பேருந்துகளில் பஞ்சமருக்கு இடமில்லை என்று எழுதியதோடு பயணச்சீட்டுகளிலும் அப்படியே அச்சிட்டிருந்தார்கள் என்பதும், இராமநாதபுரம் மாவட்டத்தின் ஆட்சிக்குழு தலைவராக அப்போது இருந்த சவுந்தர பாண்டியனார்தான் அதை ஒழித்தார் என்ற வரலாறு தெரியுமா?

1935ல் கும்பகோணம் நகராட்சியில் அக்கிரஹாரத்துக்கு கக்கூஸ் சுத்தம் செய்ய தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்கக்கூடாது.அதற்குப்பதிலாக சூத்திரர்களை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மலம் எடுப்பதிலே கூட தீண்டத்தகாதவர்கள் அக்கிரஹாரத்துக்குள் நுழையக்கூடாது என தீர்மானம் போட்ட கொடுமையை சீமான் அறிவாரா?

1927ல் மன்னார்குடி தேசிய உயர்நிலைப்பள்ளிக்கு வந்த காந்தியாரிடம் அப்பள்ளி தலைமையாசிரியர். “ஒரு தாழ்த்தப்பட்ட மாணவவனைக்கூட இந்தப்பள்ளியில் சேர்க்கவில்லை” என்று இறுமாப்போடு கூறியதையும், 1930 வரை கோவை சிங்காநல்லூரில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்து பிள்ளைகளை ஆரம்பப் பள்ளிகளிலே சேர்க்க மறுத்தார்கள் என்பதையும் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் மருத்துவப்படிப்பு படிக்கக் கூடாது என்பதற்காக மருத்துவம் பயில சமஸ்கிருதம் தெரிந்திருக்கவேண்டும் என்று வைத்திருந்ததையும் வரலாறு நமக்குப் பாடமாக சொல்லிக் கொண்டிருக்கிறது.

திருத்தங்கல் பகுதி நாடார் சமூகத்தினர் கோவிலுக்குள் நுழையக்கூடாது என்று 1878ஆம் ஆண்டு திருவில்லிபுத்தூர் மாவட்ட முன்சீப்பே தீர்ப்பு வழங்கியதும், 1895 ம் ஆண்டுகளில் நெல்லை மாவட்டம் கழுகுமலை கிராமப்பகுதிகளில் நாடார் சமூகத்தினர் தேரடித் தெருக்கள் வழியே மத ஊர்வலம் போக தடைபோடப்பட்டது என்பதும், அதை எதிர்த்து அந்தப்பகுதி நாடார்கள் அனைவரும் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்து விட்டார்கள் என்கிற செய்திகளை உங்கள் முன்னோர்கள் உங்களுக்கு சொல்லித்தரவில்லையா?

1952 ல் திருவான்மியூரில் நடைபெற்ற சலவைத்தொழிலாளர் மாநாட்டில் பேசிய அன்றைய முதலமைச்சர் ராஜகோபாலாச்சாரியார் அவரவர், அவரவர் குலத்தொழிலைத்தான் செய்யவேண்டும், படிக்கக்கூடாது என்று பகிரங்கமாகவே பேசிய காலகட்டங்களையாவது சீமான் அறிவாரா? இவற்றையெல்லாம் முறியடித்து தமிழகத்தில் சமூக நீதிக்கு வழிவகுத்தது திராவிடர் இயக்கத்தின் சாதனையல்லவா?

திராவிட இயக்கத்தின் சாதனைகளை பட்டியலிட்டு மாளாது. வரலாறு தெரியாமல் சீமான்கள் வாய் புளித்ததோ? மாங்காய் புளித்ததோ என்று உளறிகொட்டுவதை இத்தோடு நிறுத்த வேண்டும்!