நீதி சொல்லும் சேதியா? -கி.தளபதிராஜ்


நீதிபதி சந்துரு அவர்கள் 30.10.2013ல் வெளியான இந்து தமிழ் நாளிதழில் “கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” எனும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.

அதில் கல்விக்கடனாக 70,000 கோடி ரூபாய் இதுவரை மத்திய அரசு கடன் அளித்துள்ளதாகவும், அதன் விளைவுகள் பத்து ஆண்டுகள் கழித்தே தெரியவரும் என்றும் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தமிழகத்தில் கடந்தவாரம் பேசியதைச் சுட்டிக்காட்டி, “கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும்”. என்று குறிப்பிட்டுள்ளார்.

கட்டணம் செலுத்தி கல்லூரி செல்ல இயலாத மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்குவது குற்றமா? கல்விக்கடன் வழங்குவதை கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்” என விமர்சிக்கிறார். கல்விக்கடன் வழங்குவதும், முதல் தலைமுறையாக பயிலும் பட்டதாரி மாணவர்களுக்கு அரசே கல்விக் கட்டணத்தை செலுத்தியதும் சமூக நீதியல்லவா? கடைத்தேங்காய் ஆனாலும், காசுகொடுத்து வாங்கியதானாலும் வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதால் விரயம் ஆகலாம். கல்விக்கடன் அப்படியா?

இப்படிப்பட்ட கல்விக்கடன்களால்தான் படிப்பறிவே இல்லாத பல்லாயிரக்கணக்கான ஏழைக் குடும்பங்களில் பிறந்த பிள்ளைகள் இன்று கல்லூரி வாயிலை மிதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

கடன் வாங்கியோரெல்லாம் சிறப்பான பட்டம் பெற்று தகுந்த வேலையில் அமர்ந்து பத்து ஆண்டுகள் கழித்து கடனைத் திருப்பித்தருவார்களா? என்று பொறுத்துத்தான் பார்க்கவேண்டும் என்று எழுதுகிறார். அப்படியென்ன அவர்கள் மீது வெறுப்பு? சமூக பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் அப்படிப் படித்து ஏதேனும் பட்டம் பெற்று விடுவார்களோ என்று அஞ்சுவதுபோலல்லவா தெரிகிறது?

சுயநிதிக்கல்லூரிகளில் சேரும் இலட்சக்கணக்காண மாணவர்களுக்கு கல்விக்கடன் அளிக்கப்படுகிறது. அதற்கான விதிமுறைகளை இந்தியன் வங்கிகள் சங்கமும், ரிசர்வ் வங்கியும் ஏற்படுத்தியுள்ளன. தேர்வில் குறிப்பிட்ட மதிப்பெண்கள் பெற்றுவந்தால்தான் வங்கிக்கடன் தொடரும் என்பதும், வங்கியில் வாராக்கடன் வைத்துள்ள நபர்களின் வாரிசுகளுக்கு கல்விக்கடன் வழங்கப்பட மாட்டாது என்பதும் பல வழக்குகளில் சோதனைக்கு உள்ளானது.

தந்தை வைத்த கடனுக்கு மகனை பலிகடா ஆக்கக்கூடாது என்றும், மதிப்பெண் அடிப்படையில் கடன் கொடுத்தால் அம்பேத்கர் போன்ற மேதைகள் உருவாகியிருக்க முடியாது என்றும், ரிசர்வ் வங்கியின் வழிமுறைகளுக்கு சட்ட அடிப்படை இல்லை என்றும் தீர்ப்புகள் வழங்கப்பட்டதாக வேதனையோடு குறிப்பிட்டிருக்கிறார்.

பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்கைக்கு குறைந்தபட்ச தகுதியும் குறைக்கப்பட்டு விருப்பப்படுவோர் எல்லாம் சேர்ந்து கொள்ளும் வகையில் அரசானைகள் பிறப்பிக்கப்பட்டதாக எழுதுகிறார்

கணிதமேதை இராமானுஜம் இன்டர்மீடியட் படிப்பில் தோல்வி அடைந்தவர். மதிப்பெண்னே ஒருவரது அறிவாற்றலையோ தகுதியையோ நிர்ணயிப்பதில்லை என்பதற்கு இவரும் ஒரு எடுத்துக்காட்டு. இன்டர்மீடியட்டில் தோல்வியுற்றதால் வீட்டிற்கு பயந்து வீட்டைவிட்டே வெளியேறினார். அவரது தந்தை 1905ம் ஆண்டு இந்து நாளிதழில் விளம்பரம் கொடுத்து இராமானுஜத்தை கண்டுபிடித்தார். அப்படிப்பட்டவரின் அறிவுத்திறனை கண்டுகொண்ட ஜி.எச்.ஹார்டி என்ற வெள்ளைக்காரர்தான் அவரை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் படிக்க ஏற்பாடுசெய்தார். அதனால்தான் நமக்கு ஒரு கனிதமேதை கிடைத்தார்.பல்வேறு அறிவியற் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் கூட பள்ளிப்படிப்பில் தோல்வியுற்றவர்தானே?

பொறியியல் படிப்புகளில் நடத்தப்படும் தேர்வுகளில், குறைந்த மதிப்பெண் பெற்று கல்லூரியில் சேர்ந்தவர்களுக்கென தனியாக தேர்வு நடத்தப்படுகிறதா? அல்லது வேறு ஏதேனும் சலுகை காட்டப்படுகிறதா?கல்லூரியில் சேர்ந்தபின் அனைவரும் ஒரே மாதிரியான தேர்வை எழுதித்தானே வெற்றி பெற்று வருகிறார்கள்? இதில் எந்த தகுதி திறமை குறைந்து போயிற்று.

விருப்பப்படுவோர் எல்லாம் சேர்ந்து கொள்ளும் வகையில் அரசானைகள் பிறப்பிக்கப்பட்டதாக அவர் குறிப்பிடும்போது “எதைகொடுத்தாலும் சூத்திரனுக்கு கல்வியைக் கொடுக்காதே” என்கிற வாசகம் தானே நினைவில் வந்து தொலைக்கிறது.

மாணவர்கள் வங்கிகளில் கடன்பெற்று கல்வி பயின்று தொழில்புரிந்து சம்பாதிக்கும் நிலையில் கல்விக்காக வங்கிகளிலிருந்து பெற்ற கடனை திருப்பிச்செலுத்தி, வரும் தலைமுறைக்கும் தொய்வின்றி இத்திட்டம் செயல்பட ஒத்துழைக்க வேண்டியது அவர்களது சமூக பொறுப்பு என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

கல்விக்கடன்கள் மனித ஆற்றலைப்பெருக்குமா?அல்லது வாராக் கடன்களுக்கு வழிவகுக்குமா சரித்திரம்தான் கூறவேண்டும் என்று எழுதும் நீதிபதி அவர்களே கல்விக்கடன் என்பது என்ன வியாபாரமா? மாணவர்களுக்கு கல்வி வழங்குவது நாட்டின் வளர்ச்சியல்லவா? சொத்தல்லவா?

பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டு வாராக்கடனில் இருக்கும் நிதியோடு ஒப்பிடுகையில் இந்தக் கல்விக்கடன் எம்மாத்திரம்? குஜராத்தில் நானோ கார் உற்பத்தி செலவில் 60 சதவீதத்தை இடம் மற்றும் மற்ற மற்றதன் வாயிலாக அந்த அரசே ஏற்றுகொள்வதாக ஒரு புள்ளிவிபரம் கூறுகிறது. இப்படி அரசின் நிதி எத்தனையோ வழிகளில் செலவிடப்படுகிறது.அதையெல்லாம் விடுத்து ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன்கள் அவர் கண்களை உறுத்துமானால் அது ஒரு போதும் நீதி சொல்லும் சேதியாக இருக்க முடியாது.