நீதிமன்ற நீதிக்கும் நீதி சொல்வார்

மரியாதைக்குரிய அய்யா நீதிபதி சந்துரு அவர்களுக்கு!

ஆசிரியர் பயிற்சியில் பட்டயம் பெற்றதை மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது. கல்வித்தகுதி பெற்ற அணைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது.
உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுகொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில் தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ விழையும் சட்டத்தின் நோக்கம் சமவாய்ப்பு அளிப்பதற்கே. சலுகைகளுக்கு அல்ல. எனவேதான் மதிப்பெண்ணை குறைக்க அவர்கள் போட்ட ரிட் மனுக்களும் உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியாயின.

என்று இந்து தமிழ் நாளிதழில் கட்டுரை தீட்டியிருக்கிறீர்கள்!

ஆசிரியர் தொழிலுக்கென்றே அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், மற்றும் கல்விஇயல் கல்லூரிகளில் பயின்று அதற்கான தேர்வில் வெற்றிபெற்று அவர்கள் வாங்கும் பட்டயத்தை “அதை” மட்டுமே வைத்து வேலை அளிப்பது முறையற்றது என்று எப்படி உங்களால் சொல்ல முடிந்தது?.

கல்வித்தகுதி பெற்ற அனைவருக்கும் போதிக்கும் திறன் இருக்கும் என்று நம்ப முடியாது என்று சொல்கிறீர்கள். வழக்கறிஞர் பட்டம் பெற்றவர்களெல்லாம் வழக்குறைக்கும் திறன் பெற்றவர்கள் என நம்ப முடியாது என்று கருதி அன்றைக்கு அரசு அப்படி ஒரு தேர்வை நடத்தியிருக்குமானால் உங்களைப்போன்ற திறமையான பல நீதியரசர்களை நாடு இழந்திருக்குமே?

உள்கட்டமைப்பு வசதியின்றி மாட்டுக்கொட்டகைகளில் நடத்தப்படும் பயிற்சிப்பள்ளிகளில், தேர்ச்சி பெற்றோரின் உண்மை அறிவை சோதிக்கவே தகுதித்தேர்வு என்றால் அப்படிப்பட்ட குறைபாடுகளோடு பயிற்சிப்பள்ளிகள் இயங்குவது யார் குற்றம்? அரசின் பொறுப்பற்ற தன்மைக்கு ஆசிரியர்கள் பலிகடா ஆகவேண்டும் என்பது எந்தவிதத்தில் நியாயம்?

மாற்றுத்திறனாளிகளுக்கும், பட்டியல் இனத்தவர்களுக்கும் தகுதி மதிப்பெண்ணை தளர்த்துவது “சலுகை” என்று எழுதுகிறீர்கள்.இடஒதுக்கீட்டு அடிப்படையில் பல்வேறு துறைகளிலும் பணி நியமணம் செய்யப்படும்போது உயர்சாதியினர் வாங்கிய மதிப்பெண்ணுக்கும் பட்டியல் இனத்தவர் பெற்ற மதிப்பெண்ணுக்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். இதனால் “தகுதித்திறமை போச்சே” என்று ஆண்டாண்டு காலமாய் அனுபவித்த கூட்டம் அலறியபோது, “எந்தத் தாழ்த்தப்பட்டவன் ஊசிபோட்டு மருந்து வேலைசெய்யாமல் போனது? எந்த பிற்படுத்தப்பட்ட எஞ்சினீயர் பாலம் கட்டி உடைந்து போனது” என்று நறுக்குத்தெறித்தாற்போல் கேட்டவர்தான் கல்விவள்ளல் காமராசர்!.

நீங்கள் சொல்லும் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றுவிட்டால் மட்டும் போதிக்கும் திறன் ஆசிரியர்களுக்கு வந்துவிடும் என்று எந்த அடிப்படையில் நம்புகிறீர்கள்? இரண்டாண்டுகாலம் ஆசிரியர் தொழிலுக்கென பல்வேறு பயிற்சிகளைக்கொடுத்து அதற்கென அரசால் நடத்தப்படும் தேர்வையும் தாண்டி இந்தத் தகுதித்தேர்வால் என்ன சாதித்துவிட முடியும்? படிப்பறிவு மட்டுமின்றி அர்ப்பனிப்பு உணர்வோடு பணியாற்றும் ஆசிரியர்களே இன்றைய தேவை என்பதை காலம் நமக்கு சொல்லிகொண்டிருக்கிறது. .இவற்றையெல்லாம் இந்த தகுதித்தேர்வு கனித்து விடுமா?

நடைபெற்ற தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்ததற்கு ஆசிரியர்கள் மட்டுமே காரணமல்ல. கேள்வித்தாள்களே முக்கிய காரணம். அவர்கள் படித்த அவர்கள் வகுப்பெடுக்கக்கூடிய பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு கேள்விகள் இருந்ததாக பெரும்பாலோர் குற்றம்சாட்டியுள்ளனர். முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்வித்தாளின் தரம் சந்திசிரித்து நீதிமன்றம்வரை சென்றது தாங்கள் அறியாததா?

உயர்நீதிமன்றத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்கில் சமூகநீதிக்கு எதிராக நீங்கள் அளித்த தீர்ப்பே இன்று வரை தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சரியான நீதி கிடைக்க தடையாக இருக்கிறது என்று நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது.

பெரியார்.எங்கள் அய்யா இன்று இல்லை.தேவைப்படும்போது பெரியார் தொண்டர்கள் நாங்கள் கருத்து சொல்வதிலும் தவறில்லை என்றே கருதுகிறோம்.

-கி.தளபதிராஜ், மயிலாடுதுறை.