அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..

அன்புள்ள மக்களுக்கும், திருட்டு நடுநிலையாளர்களுக்கும்..

மின்சார டெபாசிட் பணத்தை எவனும் எக்காலத்திலும் மின்சார வாரியத்திடம் திருப்பிக் கேட்கப்போவதில்லை. அதேநேரம் எந்த வீட்டுக்காரனும் மின்கட்டணம் கட்டவே கட்டாமல் மின்சார வாரியத்தை ஏய்க்கவும் முடியாது. ஏனெனில் மின்சார விற்பனை என்பது மின்சாரவாரியத்திடம் மட்டுமே உள்ள (monopoly) ஏகபோக வியாபாரம். ஏற்கனவே மின்கட்டணத்தை பலமடங்கு உயர்த்தி அந்த சுமையையே மக்கள் சுமக்கத் திணறிக்கொண்டிருக்கும் நிலையில் வைப்புத் தொகையையும் (deposit) உத்தராகண்ட் வெள்ளம் போல கண்டபடி ஏற்றி ஒரு பட்டப்பகல் கொள்ளையை செவ்வனே நிறைவேற்றியிருக்கிறது தமிழக அரசு. தமிழகத்திலே உள்ள 7 கோடி பேரும் இதனால் எக்கச்சக்கமான பணத்தை இழந்திருக்கிறார்கள். மீண்டும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தவும் ஆலோசனை நடக்கிறது.

இந்நிலையில் மலிவு விலை இட்லிக்கும், மலிவு விலை காய்கறிக்கும் வரவேற்பளித்து புகழாரம் சூட்டிக்கொண்டிருக்கிறார்கள் ‘திருட்டு’ நடுநிலையாளர்களும், ஊடகங்களும். சுருக்கமாய் சொல்லவேண்டுமானால் விசயம் இதுதான். 7 கோடி பேரிடமும் ஆளுக்கு ஒரு பாட்டில் ரத்தம் உறிஞ்சிவிட்டு அந்த 7 கோடி பேரிலேயே ஒரு 7 ஆயிரம் பேருக்கு அந்த ரத்தத்தில் ஒருபகுதியையே மலிவு விலை உணவாகப் புகட்டிக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. மலிவு விலை இட்லி என்பதும், மலிவு விலை காய்கறி என்பதும் தமிழகத்தில் மிகச்சிலருக்கு மட்டுமே சென்று சேரும் உருப்படாத மினியேச்சர் திட்டங்கள் என்பதையும் நாம் மறக்கக் கூடாது. (அதிலேயும் தமிழகம் முழுவதும் பயனளித்துக் கொண்டிருந்த உழவர் சந்தை திட்டத்தை அழித்து, சுருக்கி கடையாக மாற்றி வெகுசிலர் மட்டுமே பயன்படும்படி கெடுத்தது தான் மிச்சம்) இப்படி ஒரு திட்டமிட்ட திருட்டு, திட்டமிட்ட திசைதிருப்புதல், திட்டமிட்ட ஏமாற்றுவேலை நடந்துகொண்டிருக்கிறது.

மக்கள் நல அரசாக இருக்கவேண்டிய தமிழக அரசு ஒரு கேவலமான தனியார் நிறுவனத்தைப் போல என்னென்ன ஏமாற்று திட்டங்கள் போட்டு மக்களை உறிஞ்சலாம் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் அக்கறைகொண்டு அதற்கேற்ப திட்டங்களை வகுத்து மக்களின் தலையில் ஒரேடியாக சுமையேற்றாமல் ஆட்சி நடத்த திறமையின்றி இலாப சதவிகிதத்தைக் கூட்டுவதை மட்டுமே ஆட்சித் திறமை என நினைத்து செயல்படுவதற்கு முதல்வர் எதற்கு? ஒரு தனியார் கம்பனி க்ளெர்க் செய்துவிடுவாரே?

ஆனால் எவனுக்காவது இதைப் பற்றிப் பேச தமிழகத்திலே துணிவு இருக்கிறதா என்றால் எவனுக்குமே இல்லை. எவன் பேசினாலும் அவன் மேல் வழக்கு பாயும், இல்லையென்றால் அரசு விளம்பரம் பாயாது! சரி முகநூலிலேயாவது எதாவது நடுநிலையாளனோ, மதிமுககாரனோ, நாம்தமிழர்காரனோ, கரகாட்டக்காரனோ, வில்லுபாட்டுக்காரனோ பொதுமக்கள் பிரச்சினையைப் பேசுகிறானா என்றால் இல்லை. எல்லோரும் கோபாலபுரம் நோக்கித்தான் மண்டியிட்டு அமர்ந்திருக்கிறான்.

இப்படி வெட்கக்கேடான கேவலத்தில் தான் இந்தியாவின் பிரதான பிரச்சினை போல திமுக என்ற ராஜ்யசபா வேட்பாளர் காங்கிரஸ், பாமக, புதியதமிழகம் போன்ற வாக்காளர்களிடம் வாக்கு கேட்டதை தலைப்புச் செய்தியாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்! மேலுள்ள செய்தியை தமிழர்களுக்கே உரிய வழக்கம் போல ‘யார்’ சொல்லியிருக்கிறார்கள் எனப் பார்க்காமல் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை கொஞ்சம் யோசியுங்கள். கொஞ்சமாவது யோசியுங்கள்!

-மனம் வெதும்பி, அழுது புலம்பி இக்கருத்தை அனுப்பியவர்:
டாக்டர் கோவிந்தோ ராமஸ்வாமி, பத்தாவது ஃபெயில்.