அக்கிரகாரத்தில் பெரியார்!?

தமிழ் மையம் நடத்திய ’சங்கம் 4’ சொற்பொழிவில் `அக்ரகாரத்தில் பெரியார்’ என்ற தலைப்பிலான பி.ஏ.கிருஷ்ணன் உரை குறித்து (பத்ரி ஷேஷாத்ரி எழுத்திலிருந்து) குறிப்பிடத்தக்க ஒரு செய்தி – ‘பெரியார் வன்முறையாளர் அல்ல‘ என்பதை இப்போதுதான் முதலில் பார்ப்பனர்கள் ஒப்புக்கொண்டுள்ளார்கள்.

தவிர,

  • பி.ஏ.கிருஷ்ணனின் உரையில் “1967 ல் தி.மு.க.ஆட்சியைப் பிடிக்கும் வரை பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லை” என்று கூறியிருப்பது முழுப்பூசணியை சோற்றில் மறைக்கும் செயல். இதற்குப் பெயர்தான் பார்ப்பனப் புளுகு – அவாளுக்கே உரிய சிண்டு முடியும் பிறவிப் புத்தி.
  • பெரியாருக்கு அரசியல் செல்வாக்கு இல்லையென்றால் இரண்டு முறை அவரைத்தேடி வந்த முதலமைச்சர் பதவியை அவர் நிராகரித்திருப்பாரா?
  • வைக்கம் போராட்டத்தில் வெற்றிபெற்று அனைவருக்கும் கோவில் சாலை திறக்கப்பட்டிருக்குமா?
  • பெரியாரின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தால் தமிழ்ப் பண்பாட்டுக்கு எதிரான இந்தி நுழைவு தடுக்கப்பட்டிருக்குமா? ரயில் நிலையப் பெயர்ப் பலகையில் மூன்றாமிடத்தில் இருந்த தமிழ் முதல் இடத்திற்கு வந்திருக்குமா?
  • பெரியாரின் குலக்கல்வித் திட்ட எதிர்ப்புப் போராட்டத்திற்கு அஞ்சி ராஜாஜி பதவி விலகியிருப்பாரா?
  • 1951 ல் சமூக நீதிக்காக, இட ஒடுக்கீடுக்காக முதல் முறையாக இந்திய அரசியல் சட்டம் திருத்தப்பட்டிருக்குமா?
  • ரயில்வே உணவகங்கள் மற்றும் பார்ப்பனர்கள் நடத்திய உணவகங்களில் பிராமணாள் பெயர் பலகை ஒழிந்திருக்குமா?
  • காமராஜர் தமிழக முதலமைச்சர் ஆகியிருப்பாரா?
  • ராஜாஜி மூடிய பள்ளிகளை மட்டுமல்லாமல், மேலும் 10 அயிரம் பள்ளிகளை காமராஜர் திறந்திருப்பாரா?
  • ராஜாஜி தம் செல்வாக்கை பெரியாரால் இழந்திருந்த நிலையில் அண்ணாவுடன் சேர்ந்து கூட்டணி அமைத்திருப்பாரா?

– இப்படி ஆயிரம் வெற்றிகள் பெரியாரின் அரசியல் செல்வாக்கால் நிகழ்ந்துள்ளன; பட்டியல் வேண்டுமானால் கடந்த 75 ஆண்டுகால குடி அரசு, விடுதலை இதழ்களைப் படியுங்கள் பார்ப்பனர்களே.

பெரியார் வாழ்ந்தபோது அவரது போராட்டத்தை, வெற்றியை, அரசியல் செல்வாக்கை தமது பத்திரிகைகளில் பார்ப்பனர்கள் பதிவு செய்யவில்லை என்பதே உண்மை. ஆனால், பெரியார் வெற்றியின் பயனை இன்றைய தமிழகம் அனுபவிப்பதால் அது அடுத்தடுத்த தலைமுறைக்குச் சென்றுவிட்டது. அதனைப் பொறுக்கமுடியாத பார்ப்பனக் கூட்டம் இப்படி ஒப்பாரி வைக்கிறது. ’எதிரியை வீழ்த்தவேண்டுமானால் அதனைக் கண்டு கொள்ளாமல் கமுக்கமாக இரு’ என்ற தந்திரத்தை (conspiracy of silence) பார்ப்பனீயம் கடைப்பிடித்து வந்திருக்கிறது என்பது அண்ணல் அம்பேத்கரின் கூற்று. இதைத்தான் பெரியாரின் போராட்டக் காலத்தில் பார்ப்பனர்கள் கடைப்பிடித்தார்கள். ஆனால், அதனை முறியடித்தவர் பெரியார். பார்ப்பனப் பத்திரிகைகளைக் கண்டித்துப் பேசியும் எழுதியும் மட்டுமல்லாமல், ஒவ்வொரு நாளும் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றிச் சுற்றி பார்ப்பனீயத்தைத் தோலுரித்தார். அந்தத் தாக்கம்தான் இன்றும்  துக்ளக்குகளும், தினமலர்களும், தினமணிகளும் பதறுகிறார்கள். பார்ப்பனீயம் என்ன செய்தும் பெரியாரின் பிரச்சாரத்தை, போராட்டத்தை ஒடுக்கமுடியவில்லை. இவர்களது conspiracy of silence பெரியாரிடம் செல்லுபடியாகவில்லை. ஆகியிருந்தால் இன்று பெரியாரை பற்றிப் பேசவேண்டிய தேவையே அவர்களுக்கு இருந்திருக்காதே!

தவிரவும், தி.மு.க.வினர் யார்? பெரியாரின் கொள்கையைக் கொண்டே உருவான கட்சியினர்தானே. அவர்கள் பெரியாரின் கொள்கைக்கு மாறாக வேறு கொள்கையை உருவாக்கிக் கொள்ளாமல் அவரது கொள்கைக்கு அரசியல் வடிவம் அளித்ததே பெரியாரின் அரசியல் செல்வாக்கின் வெற்றிதானே! மறுக்கமுடியுமா? ராஜாஜியைக் கூட வைத்துக்கொண்டே வெற்றிபெற்ற அண்ணா, பெரியாரிடம் வந்து தன் ஆட்சியையே காணிக்கை ஆக்கினாரே! அதற்குப் பெயர் என்ன? பெரியாரின் அரசியல் செல்வாக்கு இல்லையா?

பெரியாருக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன பங்காளிச் சண்டையா? என்னைவிட எவனும் மேலானவன் என்று சொல்லிக் கொள்ளக்கூடாது என்கிற மனித சமத்துவம்தான் பெரியார் பேசியது; இன்று அவரது தொண்டர்கள் பேசுவது. பெரியார் பற்றிய பி.ஏ.கிருஷ்ணன் புரிதல்களை பெரியார் தொண்டர்கள் பெரியாரின் கொள்கை வழியே புரிந்துகொள்கிறோம்.

 எழுதிவைக்கப்பட்டுள்ள முழுமையான உரை பின்னர் வெளிவரும் என்று குறிப்பிட்டுள்ளார் பத்ரி. நாமும் எதிர்பார்க்கிறோம். பார்ப்பனர்கள் பெரியாரை எப்படிப் பார்த்தனர் என்பதைப் பதிவு செய்வது சரியே! அதில் வரலாற்றுத் தவறுகளும், திரிபுவாதங்களும் இருப்பின் அவற்றுக்குரிய பதில் பின்னர் அளிக்கப்படும்.