Monthly Archives: November 2012

திராவிடர் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல்லா?

“பார்ப்பன கிரிக்கெட் வீரர் ராகுல், “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கிறார்.எனவே திராவிடர் என்ற சொல் பார்ப்பனரையே குறிக்கும்”என்று தோழர் மணியரசன் கூறியுள்ளார்!

தாழ்த்தப்பட்ட குடும்பங்களில் இன்றளவும் பெண்குழந்தைகளுக்கு “பாப்பாத்தி” என்றும் ஆண் குழந்தைகளுக்கு “அய்யர்” என்றும் பெயர் சூட்டியுள்ளதை
பார்த்திருக்கிறோம். அவர்ககைளை எல்லாம் மணியரசன் ஆரியர் என்று கூறுவாரா?

“திராவிட்” என்பதும் “திராவிடர்” என்பதும் ஒன்றா? “சைதாப்பேட்டை”யை ஆங்கிலத்தில் “சைதாபேட்” என்று கூறுவது போல் “திராவிடம்””திராவிட்” என்பது
இடத்தை குறிக்கும்.

இந்திய தேசிய கீதப் பாடலில் வரும் பஞ்சாப,சிந்து ,மராட்ட,திராவிட போன்ற வரிகள் எதைக் குறிக்கிறது? இடத்தையா? இனத்தையா?

“திராவிட” என்ற சொல் இடம் பெற்றிருக்கும் திமுக,அதிமுக,மதிமுக,தேமுதிக ஆகிய அணைத்து அரசியல் கட்சிகளிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆகலாம்.
திராவிட என்பது இடத்தை குறிக்கும் சொல்.திராவிடர் கழகத்தில் ஒருநாளும் பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாது. காரணம் “திராவிடர்” என்பது
இனத்தை குறிக்கும்.

தென்னிந்தியாவில் பிறந்ததால் ராகுல் “திராவிட்” என்று பெயர் வைத்திருக்கலாம். எந்த பார்ப்பானாவது “திராவிடர்” என்று தன்னைசொல்லிக்கொண்டதுண்டா?

மனோன்மனீயம் சுந்தரனாரை பார்த்து விவேகானந்தர் “நீங்கள் என்ன கோத்திரம்?” என்று கேட்டாராம்.அதற்கு மனோன்மனீயம் சுந்தரனார் அளித்த பதில்
“தன்மானம் மிக்க தென்னாட்டு திராவிடன்”.என்பதே!

(“மனோன்மனீயம்சுந்தரனார் வாழ்க்கைவரலாறு” நூலிலிருந்து)

 

இந்துக்கள்,திராவிடர்கள்,இஸ்லாமியர்கள் மற்றும் முகமதியர்கள் இந்தியாவில் வாழ்கின்றனர்.திராவிடர் நாகரீகம் கலந்த பின்னர்தான்,இந்து நாகரீகத்தில்
வளர்ச்சி ஏற்பட்டது என்கிறார் தாகூர்.

(நோபல் பரிசு ஏற்புரையில் தாகூர் கூறியது).

 

மறைமலை அடிகள்தான் தனித்தமிழ் இயக்கத்தை கட்டினார் என்று கூறும் மணியரசன், திராவிடர் இயக்கங்கள் தமிழர் அடையாளத்தை அழிக்கவே
பயன்பட்டதாக கூறுகிறார். 1956 க்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர்கள், ஆரியர்கள் உட்பட அனைவரும் தமிழர்களே என்று குறிப்பிடுகிறார்.

தனித்தமிழ் இயக்கத் தந்தை என்று அவரால் கூறப்படும் மறைமலைஅடிகள் தந்தை பெரியார் அவர்களைப்பற்றி குறிப்பிட்டிருப்பதைப் பாருங்கள். “சாதி, சமயப்
பூச்சுகளை ஒழித்து எவ்வுயிரும் என்னுயிர் போல் எண்ணியிரங்கித் திருவருள் நெறி நின்று ஒழுகுதலாகிய பழந்தமிழ்க் கொள்கையே சைவ நன்மக்கட்குரிய
உண்மைக் கொள்கையாய் இருந்தும் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு சொற்பொழிவாலும், நூல்களாலும் யான் அதனை விளக்கும் காலையில் அதனைஎதிர்த்தும் எனைப் பகைத்தும் எனக்குத் தீது செய்தவர்கள் சைவறிர் கற்றவர்களே. அன்று எனக்கு உதவியாய் நிற்றதற்கு எவருமில்லை.பின்னர் பெரியார்
திரு.ஈ.வெ.ராமசாமி அவர்கள் யான் விளக்கிய கொள்கையையே மேலுந்தட்பமாக எடுத்து விளக்கிப் பேசவும் எழுதவும், துவங்கிய காலந்தொட்டு, ஆரிய சேர்க்கையால் தமிழ்மொழிக்கும், தமிழர் கோட்பாட்டிற்கும், தமிழரது வாழ்க்கைக்கும் நேர்ந்த குறைபாட்டை தமிழர் உணர்வராயினர். அவரிற் கற்றவரும் என் மேற்கொண்ட சீற்றந்தவிர்வராயினர்”.என்றார்.

இப்படி தாகூரும்,மனோன்மனீயம் சுந்தரனாரும்,மறைமலை அடிகளும் சுட்டிக்கட்டிய திராவிடர் என்ற இனத்தையே முழு புசனிக்காயை சோற்றில் மறைப்பது போல் திராவிடர் என்ற சொல்லே பார்ப்பனர்களைக் குறிப்பது என்று கூறி, வரலாற்றையே திரிக்க பார்க்கிறார் மணியரசன்!.

தமிழ்தேசியத்தின் அசல் அக்மார்க் முத்திரை உரிமம் பெற்றிருக்கும் அவர் தற்போது “நெடுமாறனின் “தமிழர் தேசிய இயக்கமும்”,சீமானின் “நாம் தமிழர்
கட்சியும்” தமிழ்த்தேசிய இயக்கங்கள் இல்லை!” என்கிறார்

தமிழ்த் தேசப் பொதுவுடைமை கட்சி முகநூல் “திராவிட” என்றால் இடத்தின் பெயர் எனச் சொல்லுகின்ற நீங்கள், இதே இடத்தில் வசிக்கும் பார்ப்பானை என்னவென்று அழைப்பீர்கள்? என்று கேட்கிறது.

அமெரிக்காவில் வசித்தாலும் அய்யம்பேட்டையில் வசித்தாலும் பார்ப்பனரை பார்ப்பனர் என்றே அழைக்க முடியும்.பெரியார் வலியுறுத்தியதுதான்
தனித்தமிழ்நாடு!. திருக்குறள் மாநாடு கூட்டியவர் அவர்!. பார்ப்பனர்களிடம் இருந்து விடுதலை பெறவே திராவிடர் என்ற சொல் பயன்படுத்தப்பட்து.ஆனால்
சுயவிளம்பரம் தேடிக்கொள்ள ஏதோ தங்களை பெரிய புரட்சிவாதிகளாக காட்டிக்கொள்ள பார்ப்பனக் கைக்கூலிகளாக மாறி திராவிடர் என்ற சொல்லையே சிலர் விமர்சிக்கின்றனர். பெரியார் தனித்தமிழ்நாடு கேட்டார். பெரியாரையே விமர்சிக்கும் தோழர்கள் என்ன செய்து கிழித்தார்கள்?எந்த தமிழ் தேசிய
இயக்கங்கள் தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றன?

திராவிடர்கள் என்பது பார்ப்பனர்களைக் குறிக்கும் சொல் என்று நிகழ்ச்சியின் எந்த இடத்திலேயும் மண்யரசன் அவர்கள் சொல்லவில்லை.உங்கள் செய்தி
உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறது என்று ஒருவர் கூறுகிறார்.

திராவிடர்கள் என்ற சொல் பார்ப்பனர்களை குறிக்கக்கூடியது என்கிற “மிகப்பெரீய்…ய ஆராய்ச்சி” கட்டுரை மணியரசனின் தமிழர் கண்ணோட்டம் இதழிலேயே இடம்பெற்றுள்ளது.

பல ஆண்டு காலமாக நம்மை அடிமைப்படுத்தி சுரண்டி வாழ்ந்த பார்ப்பனர்களும் தங்களை தமிழர்கள் என்றே கூறுகின்றனர்.அதை மணியரசனும் ஏற்றுக்கொள்கிறார். பார்ப்பனர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று சொல்வதில்லை.நமக்கு தேவை பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடுதலை! .அவர்களை தனிமைப்படுத்தி நம் இனத்தை காப்பாற்றவே திராவிடர் என்ற அடையாள சொல் பயன்படுத்தப்பட்டது.

தமிழர்கள் மட்டும் திராவிடர்களா? அல்லது கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்களா என்று கேட்பதின் நோக்கம் புரியவில்லை!
எந்த கன்னடனும், மலையாளியும் தெலுங்கனும் திராவிடர்கள் என்று சொல்லிக்கொள்வதில்லை. தமிழினத்தில் பார்ப்பனர் ஊடுருவலை தடுக்கவே திராவிடர் என்ற அடையாளச்சொல்.

“தமிழர்” என்ற ழகர ஒலிச் சொல்லை, சரியாக ஒலிக்கத் தெரியாமல் “த்ரமிள” என்றும் பின்னர் “திராவிடன்” என்றும் ஆரியன் எழுதியதையும், பேசியதையும்
ஆதாரமாகக் கொண்டு, தம்மையே “திராவிடன்” என அழைத்துக் கொள்வது தான் அறிவு நாணயமான செயலா? எனக்கேட்கும் தோழர்களே  “தேயம் என்பது
தான் தேசம் ஆனது “என்று எந்தப்பாவாணர் கூறியதாக நீங்கள் குறிப்பிடுகிறீர்களோ அதே பாவாணர் தான் மேற்படி தமிழர்-திரமிளர் -திராவிடர் செய்தியும்
குறிப்பிட்டிருக்கிறார்.

நாங்கள்தான் உண்மையான தமிழ்த்தேசிய வாதிகள் என்று கிளம்பியிருக்கும் தோழர்களே உங்கள் பிரச்சனை என்ன? உங்கள் இடைவிடாத கடுமையான தொடர்
போராட்டத்தின் விளைவால் அமையப்போகும் “தமிழ்தேசியத்தை” எந்த திராவிடர் இயக்கமாவது அல்லது தோழர்களாவது தடுக்கும் வேளையில்
ஈடுபடுகிறார்களா? “தமிழ்த்தேசியம் கூடாது” திராவிடநாடுதான் வேண்டும் என்று எந்த தோழராவது மல்லுக்கு நிற்கின்றனரா?

அல்லது திராவிட இயக்கங்களை எதிர்த்து தமிழ்நாட்டில் அரசியல் பண்ண  முடியவில்லையே என்கிற ஆதங்கம் தான் உங்களை இப்படி பேசவைக்கிறதா?

காலில் விழுவது திராவிட மரபா?

ஒருவருடைய காலில் விழுந்து வணங்குவது அல்லது ஒருவருடைய காலைத் தொட்டு வணங்குவது என்பது வடஇந்தியாவைவிடத் தென்னாட்டில்தான் இன்று அதிகம் வழக்காற்றில் காணப்படுகிறது. இதனை வைணவ சமயம் சரணாகதி என்று குறிப்பிடுகிறது. சரண் புகுதல் என்று கவிஞர்கள் இதனைப் பாடி வைத்துள்ளனர். பாரதி தேடி உன்னைச் சரண் புகுந்தேன் தேசமுத்து மாரி என்று முத்துமாரியைப் பாடுகையில் குறிப்பிடுகிறார்.

வைணவத்தில் எல்லாப் பொறுப்புகளையும் நீயே கதி என்று பெருமாளிடம் காலில் விழுந்து ஒப்படைத்துவிட்டால் பெருமாள் பார்த்துப்பார் என்று குறிப்பிடுவார்கள்.

அதேபோல் பார்ப்பனர்களிடையே இறைவன் ஊர்வலத்தின்முன் வேதம் ஓதிக் கொண்டு வருபவர்களையோ, அல்லது நாலாயிரத் திவ்யபிரபந்தம் பாடிக்கொண்டு வருகின்றவர்களையோ அவர்கள் வருகையில் சாலையாக இருந்தாலும் விழுந்து நமஸ்கரித்தல் என்பதைச் செய்கிறார்கள்.

அதேபோலச் சமயத் தலைவர்கள் அதாவது ஆச்சாரியாரியர் என்று அழைக்கப்படும் சங்கராச்சாரியார் அல்லது ஜீயர்கள் என்று அழைக்கப்படும் திருவரங்கம் ஜீயர், அகோபிலம் ஜீயர் என்று அழைக்கப்படுகின்ற ஜீயர்கள் வருகின்றபோது சாஷ்டாங்கமாக அதாவது அடிபட்ட மரம் வீழ்ந்தது போல எண்சாண் உடம்பும் தரையில் பட விழுந்து வணங்குகிறார்கள். இதனைத் தெலுங்கில் படிமுக்கு என்று கூறுகிறார்கள்.

இவ்வாறு வணங்குவதை மாதா, பிதா, குரு, தெய்வம் என்று நால்வருக்கு உரியதாக வகுத்து வைத்திருக்கிறார்கள். அதனால் பெற்றோர்களைக் காலில் விழுந்து வணங்குவது, பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியரை வணங்குவது, தெய்வத்தை அவ்வாறு வணங்குவது என்ற வழக்கம் இருந்து வந்துள்ளது.

நாளடைவில் இப்பழக்கம் பெரியவர்களை விழுந்து வணங்குவது என்று ஆகியிருக்கிறது. முன்பெல்லாம் மனினுடைய சராசரி ஆயுட்காலம் அறுபது வயதுக்குக் குறைவாகவே இருந்தது. எனவே அறுபது வயது அடைந்தவர்கள் அதனை மணிவிழா என்றோ, சஷ்டியப்த பூர்த்தி என்றோ கொண்டாடுகையில், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் கூட அறுபது வயது கொண்டாடியவர்களை வணங்க வேண்டும் என்ற மூடநம்பிக்கையின் பயனாய் காலில் விழுந்து வணங்குவதோடு, வெள்ளிப்பூ, பொற்பூ என்று பொன்னால், வெள்ளியால் ஆன சிறிய பூக்களைப் பாதத்தில் போட்டு அவர்களை வணங்கினார்கள்.

இப்போது பெரிய மனிதர்கள், ஆச்சாரியார்கள் என்பவர்கள், தண்டனை பெறக்கூடிய குற்றம் செய்தவர்களாகக் கருதப்பட்டு சிறைச்சாலை எட்டிப் பார்த்து அல்ல, சிறைச் சாலையில் வாசம் செய்துவிட்டு வந்தவர்களை விழுந்து வணங்குகிறார்கள்.

ஒரு மனிதன் மற்றொரு மனிதன் அல்ல மனித ஜென்மத்தின் கால்களில் விழுவது என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதில்லை. நம்மைப் போலவே பத்து மாதம் தாயின் கருவறையில் இருந்து வந்தவர்கள்தானே? எனவே உயர்ந்த பண்பாடு உள்ள மனிதர்களுக்கு மரியாதை செலத்துவது, கைகளைக் குவித்து வணக்கம் செய்வது, வாழ்த்துவது ஆகியன அவர்கள் பண்பால், அறிவுத் திறத்தால், அறவாழ்க்கையினால் உயர்ந்தவர்களாய் இருந்தால் அவர்களுக்கு அவற்றைச் செய்வதில் தவறில்லை.

ஆனால் அதை விடுத்து அவர்கள் காலில் விழுந்து வணங்குவது அவர்கள் அரச பதவியில், உயர் பதவியில் இருக்கிறார்கள் என்றால் அவர்களைக் காலில் விழுந்து வணங்குவது அது கண்டு அவர்களும் மகிழ்வது அறிவீனம் அல்லவா எனும் கேள்வி எங்கும் கேட்கப்படுகிற கேள்வி.

காலில் விழுந்து வணங்குவது உயர்வானதா என்றால் உயர்வானது, அதனைச் செய்பவர் தவறு செய்பவர், இழிந்தவர் என்றே கருதப்படும் நிலை உள்ளதற்குக் கிராமப் புறங்களில் பஞ்சாயத்துக்கள், தவறு செய்தவர்களை விசாரிக்கின்றபோது அவர்கள் தவறு செய்தவர்களாயின் மன்னிக்கும்படி வாயினால் மட்டும் கூறி வேண்டினால், அவர்களை மன்னிக்க அவர்கள் ஊரார் காலில் விழுந்து வணங்கி வேண்டிக் கேட்கவேண்டும். அதேபோல் திருட்டு முதலியவை செய்தவர்கள் காலில் விழுந்து கதறினால் மன்னிக்கப் பெறலாம். தன்னைக் காதலித்துக் கைவிட்ட ஆடவனின் காலில் விழுந்து கெஞ்கினால் மனம் இறங்குவது உண்டு.

எனவே இந்த அடிப்படையில் பார்த்தாலும் காலில் விழுவது என்பதைத தமிழ்ச் சமுதாயம் ஏற்பதில்லை. தமிழ்ச் சமுதாயம் மட்டும்தானா உலகில் வேறு நாடுகளில் நிலைமை எப்படி?

கிரேக்கத்தில் நடந்த கதை இது. அலெக்சாண்டரின் காலைத் தொட்டு அரிஸ்டாட்டில் அவர் அரசராக விளங்கியபோது, வணங்கினார் என்று வரலாற்றில் ஒரு தகவல் கூறப்படுகிறது.

அறிஞராயும், தத்துவ ஞானியுமான அரிஸ்டாட்டில் அலெக்சாந்தர் அரசர் என்பதால் அவரை வணங்கியபோது, மற்றவர்கள் இதனை ஒரு குறையாக எண்ணி, இவ்வளவு பெரிய மாமனிதரான நீங்கள் போய் அரசரான அவர் காலில் விழலாமா? இது சரியா? முறையா? என்று கேட்டபோது, அரிஸ்டாட்டில் கூறியதாகக் கூறப்படும் பதில் இதுகுறித்து நம்மைச் சிந்திக்க வைக்கிறது. நான் என்ன செய்வது? அலெக்சாந்தர் என்னுடைய மாணவன்தான்.

இப்போதோ அவர் அரசர். அது மட்டுமல்ல அவன் காலில் இந்தக் கிரேக்கநாட்டின் அரசு அல்லவா இருக்கிறது. எனவேதான் அவன் காலில் விழுந்து வணங்கினேன் என்று பதில் கூறினாராம்.

ஆக இங்கு மட்டுமல்ல அங்கும் கூடக் காலில் விழுகிற பண்பாட்டு நடவடிக்கை உலகின் பார்வையில் குறித்த செயல் என்றுதான் கருதப்படுகிறது. இதனை இங்கே நினைவு கூர்ந்தால் நன்றாக இருக்கும்.

சரி! இந்தக் காலில் விழுந்து வணங்கும் பழக்கம், மரபு, ஆரியப் பண்பாடா? திராவிடப் பழக்கமா? மரபா? என்று ஆராய்ந்தால் வரலாறு என்ன கூறுகிறது?

வரலாறு தெள்ளத் தெளிவாக இது ஆரியப் பண்பாடு என்று காட்டுகிறது. ஆரியர்கள் கைபர் கணவாய் வழியாக, மத்திய ஆசியாவிலிருந்து ஆடு, மாடு மேய்த்துக் கொண்டு வந்தவர்கள். அவர்கள் அவ்வாறு வருகையில் பாரசீகத்தில் நீண்ட நாட்கள் அதாவது பல்லாண்டுகள் தங்கினார்கள்.

அங்கே பாரசீக நாட்டின் மரபு, பண்பாடு அரசனுடைய காலில் விழுந்து வணங்குவது மட்டுமல்லாது, அரசனுக்கு மரியாதை காட்டுவதற்கான அரசனுடைய பாதங்களை அவருடைய அவையில் முத்தமிடுவது என்பது ஆகும். இந்தப் பழக்கம்தான் ஆரியர்களைத் தொற்றிக் கொண்டது.

எனவே, இந்தியாவில் வந்து குடியேறிய ஆரியர்களுடைய பழக்கம் தாள் பணிவது சரணாகதி ஆவது என்று ஆயிற்று.

இந்த வரலாற்றைச் சொல்லுகையில் மற்றுமொரு வரலாற்றுச் செய்தியையும் தொட்டுக் காண்பிபோம். இந்தக் காலில் விழுந்து வணங்குவது, காலை முத்தமிடுவது ஆகியனவெல்லாம் இசுலாமியர்களிடையே கிடையாது. இசுலாமிய சமயமும் அதனை ஏற்றுக் கொள்வது கிடையாது.

வடஇந்தியாவில் இசுலாமிய ஆட்சி ஏற்பட்டபோது அடிமை மரபு என்று சொல்லப்பட்ட மரபின் அரசராக விளங்கிய சியாசுத்தீன் பால்பன் என்ற இசுலாமிய மன்னர்தான் அரச பதவியில் தெய்வீக உரிமைக் கோட்பாடு என்பதனை நம்பி அதனை நுழைத்தவர்.

அரசருடைய அதிகாரத்தையும், அரச பதவிக்குச் செல்வாக்கையும் புகுத்த விரும்பினார். அவர் முழுமையான வல்லாட்சி அதாவது யாரும், எவரும் அரசரைக் கேள்வி என்று எதுவும் கேட்காமல், அரசருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும் என்று விரும்பினர். எனவே அதற்குரிய வழிகள் என்று பல வழிகளைச் சிந்தித்துச் செயல்படுத்தினார்.

அவர் பாரசீகத்தின் பண்பாடு ஆன அரசருடைய முன் விழுந்து படுத்து வணங்க வேண்டும் என்றும் கட்டளையையும், அரசருக்கு மரியாதை செலத்தும் வகையில் அரசருடைய அவையில் அதாவது பலரும் கூடியுள்ள, பலரும் பார்க்கின்ற அவையில் அரசரின் கால்களுக்கு முத்தமிடுதலையும் அறிமுகம் செய்தார்.

அந்தப் பழக்கம் இன்றும் நம் அரசியல்வாதிகளிடம் தொற்றிக் கொண்டு உள்ளது. எனவே மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர்கள், அவைத் தலைவர்கள் முதலமைச்சர் காலில் சாஷ்டாங்கமாக விழுந்தனர். அவ்வாறு விழுந்த புகைப்படங்களும் பத்திரிகைகளில் இடம்பெற்றன.

பெற்ற தாய், தந்தையர் காலில் விழுகின்றானோ இல்லையோ, அரசில் உயர்பதவி வகிக்கும் முதலமைச்சர் காலில் விழுந்தனர். இதில் வேடிக்கை பேரன், பேத்தி எடுத்தவர்கள் கூட, அவர்கள் காலில் மற்றவர்கள் விழும் நிலை எய்தியவர்கள் கூடச் சம்பந்தம் இல்லாத -_ ரத்த சம்பந்தம் இல்லாதவர்கள் காலில் விழுந்தனர்.

இங்கே நாம் காணும் வேடிக்கை இது. சபரிமலைக்கு மாலை போட்டவர்கள் வயதாகாதவர்கள் என்றாலும்கூட அவர்கள் காலில் சாமி, சாமி என்று விழுவதைக் கார்த்திகை மாதம் பிறந்ததுவிட்டால் காணலாம்.

பாக்யராஜ் திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி. பாக்யராஜ் நடித்த ஒரு கை ஓசை திரைப்படத்தில் பாக்யராஜ் மஞ்சள் வேட்டி அணிந்து சாமியாடியாகி விடுவார். அவரைப் பெற்ற தகப்பன், மகன் சாமியாடியானதால் காலில் விழுவார்.

அப்போது பாக்யராஜ் மனத்தில் இளம் வயது நினைவுகள் பின்புலத்தில் ஓடும். அப்போது சிறுவனாக இருக்கையில் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு தந்தை அடிக்கத் துரத்தியது நினைவுக்கு வரும். அன்று தன்னை அடிக்கத் துரத்திய தந்தை இன்று காலில் விழுவதை எண்ணி பாக்கியராஜ் மகிழ்வார்.

இன்று அதுபோல் அரசியலில் பலருக்கும் தன்னிடம் பதவி, பரிசை, ஆள் அம்பு, சேனை இருக்கையில் காலில் விழுவது மகிழ்ச்சி ஏற்படுத்துகிறது போலும்.

உண்மையான துறவு உடையவர்கள் அவ்வாறு தம் காலில் விழுபவர்கள் தம் காலில் விழவில்லை, இறைவன் தம்மிடம் உறைவதாக எண்ணிக் கருதுகிறார்களாம்.

எது எப்படியோ, திராவிடன் எவருடைய காலிலும் விழமாட்டான்.

– முனைவர் பேரா.ந.க.மங்களமுருகேசன்

2G: வானத்திற்கும் பூமிக்கும் குதித்த PG-க்களே….

– சிவசங்கர் (குன்னம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்)

2010 ஆம் ஆண்டு… சிஏஜி அறிக்கை வெளியாகியிருந்த நேரம். இணையத்தில் பொழுதுபோக்கிற்கு உலவுகிற முகமற்ற விமர்சகர்கள் முதல் இந்தியாவின் உயர்ந்த அமைப்பு என்று சொல்லிக் கொள்ளக் கூடிய உச்ச நீதிமன்றம் வரை வானத்திற்கும் பூமிக்கும் குதித்த குதி….

அந்த அறிக்கை முறைப்படி வெளியிடப்பட்டதா ? திருட்டுத் தனமாக வெளியிடப்பட்டது ஏன் ? அதில் சொல்லப்பட்டிருக்கிறக் கணக்கிற்கு அடிப்படை என்ன ? சொல்லப்பட்ட அளவிற்கு விலை வைத்தால் மக்கள் தலையில் சுமை ஏறாதா ?

இது போன்ற கேள்விகளை சிந்திக்க யாருக்கும் நேரம் இல்லை. ஊடகங்களுக்கு டி.ஆர்.பி ரேட்டிங் மட்டுமே குறி. அதிகாரிகளுக்கும், நீதியாளர்களுக்கும் ஊடகங்களை கண்டு பயம். குற்றம் சுமத்திய சில உத்தமர்களுக்கு ஊடக வெளிச்ச வெறி.

அன்று பதில் சொன்ன எங்களை போன்றவர்களை கண்டால் ஏளனம், அம்மணமாக அலைகிறவன் ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன் என்பது போல.

அம்மணக் கும்பல் ஆவலாக எதிபார்த்த 2G ஏலம் வந்தது. பல பகுதிகளுக்கு ஏலம் எடுக்கவே யாரும் துணியவில்லை.

ஏற்கனவே இவர்கள் சொன்ன குற்றம், அண்ணன் ஆ.ராசா காலத்தில் வசூலான தொகை 10,400 கோடி. இழப்பு 1,76,000 கோடி என்றார்கள்.

இப்போது 9,400 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இது ஒரு முறை மட்டுமே வசூலாகிறத் தொகை.

கவனத்தில் கொள்ள வேண்டிய செய்தி : அண்ணன் ராசா காலத்தில் வந்த தொகை, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அரசுக்கு வந்து கொண்டே இருக்கும் வருவாய், வருமானப் பகிர்வு என்ற அடிப்படையில்.

தகத்தகாய சூரியன்

மக்களின் வரவேற்பில் ஆ.ராசா

இப்போது சொல்லுங்கள்… ஒரு முறை வருகிற வருமானம் 9400 கோடி லாபமா ? ஆண்டு தோறும் வரக்கூடிய 10,400 கோடியா ? ( இணைப்பு அதிகரிக்க, அதிகரிக்க இந்தத் தொகையும் அதிகரிக்கும் )

ஏலத்திற்கு பிறகு நாடெங்கும் சி.ஏ.ஜி வினோத் ராய் இதற்கு பதிலளிக்க வேண்டுமென்ற குரல் வலுக்க ஆரம்பித்துவிட்ட்து. அம்மணக் குமபலை காணவில்லை.

ஓய்வு பெற்ற சி.ஏ.ஜி டி.என்.சதுர்வேதி சொல்கிறார், “ அந்த அறிக்கை, அந்த நேரத்தில் பரிசோதித்து அளித்த அறிக்கை. அதற்கு இந்த நேரத்தில் , சி.ஏ.ஜி பொறுப்பேற்க முடியாது “. அடப் பாவீகளா…

நீங்கள் குற்றம் சுமத்துவீர்கள், குற்றவாளி என்பீர்கள், வருடக் கணக்கில் சிறையில் அடைப்பீர்கள், ஆனால் ஆதாரம் கேட்டால் தடுமாறுவீர்கள். பொறுப்பேற்க அவசியம் இல்லை என்பீர்கள். இது என்ன மனுநீதியா ? உனக்கு ஓர் சட்டம், எங்களுக்கு ஓர் சட்டமா ?

# இது சதுர்வேதி குரல் அல்ல, சதுர்வேதத்தின் குரல், சதிவேதத்தின் குரல். உணர்வீர்களா PG- க்களே ?

நன்றி: முகநூல்

நவம்பர் 13

இன்று
இருபதாம் நூற்றாண்டின்
நரகாசுரனுக்கு
தமிழ் மண்ணின்
தேவிகள்
பெரியார்
எனப் பெயர் சூட்டிய
நாள்.

அறியாராய் இருந்த
தமிழர்களை,
ஆரியம்
சிறியாராய் அவமதித்த
திராவிடர்களை,

எதுவும் தெரியாராய் ஆக்கிட
சூழ்ச்சி புரிவோரின் ஆணவத்தைச்
சுட்டெரித்திடப்
பகுத்தறிவுப் பாடம் சொல்லிய
சூரியனுக்குப்
`பெரியார்’ எனப் பட்டம்
சூட்டியது சரிதானே என்று
உலகம் சொல்கிறதே
இன்று….!

     – சம்பூகன்

மதுவிலக்கு: ராஜாஜி கிண்டலும், கலைஞரின் பதிலும்

தேர்தலில் தோல்வியடைந்த ராஜகோபாலாச்சாரியார் கலைஞரை நிந்தித்து கல்கியில் எழுதிய கவிதையும், அதற்கு கலைஞர் கவிதையாலேயே கிழித்தெறிந்த பதிலும்.

ராஜாஜியின் கவிதை

“சாராய சகாப்தம்’

ஆகஸ்ட் பதினைந்தொரு விழாவல்ல
ஆகஸ்ட் முப்பதே தமிழ்நாட்டு விழா
தாழ்ந்தவர் உயர்ந்தார் மதுவிலக்கு வந்ததும்;
வீழ்ந்தவர்கள் முன்போல் வாட
ஆழ்ந்த அறிஞர் அண்ணாவை மறந்து விட்டு
வள்ளுவர் வாக்கைக் காற்றிலே பறக்கவிட்டு
வரம் பெற்றுப் பதவி யடைந்த கருணையார்
கள்ளும் சாரயமும் தந்தார்
அரங்கேற்றினார் கடைகளை ஆயிரக் கணக்கில்
போற்றுக முதல்வர் பணியை!
சோற்றுத் திண்டாட்டம் – ஏழை மனைகளில்
சாராயக் கடைகளில் பெரும் கொண்டாட்டம்!
போற்றுக தமிழ் நாட்டு முதல்வரை!
சாராயக் கடைகளை அரங்கேற்றினார்
வரம்பெற்ற கருணைச் செல்வர்!

-ஆச்சாரியார்

************************************
ஆச்சாரியாருக்கு கலைஞரின் பதில் கவிதை:

கிழ பிராமணா! உன் வாக்குப் பலித்தது

`சாராய சகாப்த மென்று ஓர் கவிதை
சக்ரவர்த்தி ராஜாஜி மாமுனிவர்
தாராளமாய்க் `கல்கி ஏட்டில் தீட்டியதால்
யார் யாரோ சுதந்தராக்கள் மகிழ்கின்றார்.
`பார் பாராய்க் குடித்தவர்கள் பர்மிட் வாங்கி
நேர்மாறாய்ப் பேசுகின்றார் புத்தர்போல!
இதயத்தில் நோய் என்றும்
இரு யூனிட் வேண்டுமென்றும்
இதோ `டாக்டர் சர்டிபிகேட் பாருமென்றும்
இங்கிருக்கும் சுதந்தராக்கள் குடித்த கதைஊர் அறியும்
பணக்காரர் பகல் வேடக்காரரெல்லாம்
மணக்கும்மது வாங்குவதற்கு பர்மிட் வேண்டும்
பகட்டுக்கு ஒருநீதி – பாவம் ஏழைக்கு ஒருநீதி
பஞ்சாங்க சாத்திரத்தின் புதுநீதி
வாடுகின்ற ஏழைக்குடிகாரன்
வார்னீஷைக் குடித்து செத்த போதும்தனம்
மேவுகின்ற சீமான்கள் – போதை
மோதுகின்ற `விஸ்கி, ரம் அடித்தபோதும்
நவ்ரோஜி வீதியில்தான்
நாற்றம் துளைக்கலையோ?
நாடுதான் பார்க்கலையோ?
`ஆழ்ந்த அறிஞர் அண்ணா என்று
அன்பர் ராஜாஜி இன்றெழுதப் பார்த்து நான்
அயர்ந்தேதான் போனேன் அய்யா!
இன்னொருநாள்,
அண்ணாபற்றி அரசாங்கப் பாடநூல் வந்தபோது அற்பவயதில் செத்தவரெல்லாம்
அவதாரப் புருடர் தாமோ என எழுதி
அவர் மகிழ்ந்ததெல்லாம் மறந்தாபோகும்?
ஒரிசாவில் இவர்கட்சி ஆட்சியிலே
ஓடிற்றே மதுவின் வெள்ளம்! அப்போது
தரிசாகப் போனவது ஏன் இவரின் உள்ளம்?
வரம் பெற்ற கருணைச்செல்வா என – எனை
வாழ்த்துகின்றார்! வணங்குகின்றேன்
வரம் தந்தார் இவரல்ல; நேசக்
கரம் தந்த நாட்டு மக்கள்!
வரம் பெற்றேன் – பெரியார் அண்ணா தந்த நெஞ்ச
உரம் பெற்றேன்.
இப்போதும் சொல்கின்றேன்,
கேட்டிடுக!
இந்தியா முழுமைக்கும் அறவே
மதுவிலக்கு கொண்டுவர
சட்டம் செய்தால்:
சிரம் தாழ்த்தி கரம் குவித்து
சிறப்பான செயல் என்று போற்றி நின்று
செயலாக்க முந்திடுவேன்
அதன் பிறகும்;
இதய நோய் என்று – சிலர்
இருட்டினிலே குடிப்பதையும்
இனி அனுமதிப்பதில்லை யென்று விதி செய்வேன்
முழுவிவரம் தேவை யெனில்
பட்டியல் பிறகு சொல்வேன்!

– டாக்டர் கலைஞர்

(17.9.1971 ஈரோடு தந்தை பெரியார் சிலை திறப்பு விழாவின் போது பாடிய கவிதை)

(தகவல்: ’முகநூல்’ அன்சாரி முஹம்மது)

லோக “பிராமணீய” பாலகங்காதர திலகர்!


(கி.தளபதிராஜ்)

இந்திய சுதந்திரப்போராட்ட தீவிரவாதி என்று அடையாளப்படுத்தப்படும் திலகர், இந்திய அரசியலை இந்துத்துவ மயமாக்கி, இந்தியாவில் இந்து சனாதன ஆட்சியை நிறுவியே தீரவேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட ஒரு இந்துமதத் தீவிரவாதி!

பால்யவிவாக தடுப்புமசோதா!

குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி, 1880 ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த பி.எம்.மலபார் என்பவர, ஆங்கிலேய அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அந்தக் கடிதம், பல்வேறு விவாதங்களைக் கடந்து, பல ஆண்டுகளுக்கு பின்னர் பிரிட்டீஷ் அரசால் குழந்தை திருமணத்தடுப்பு சட்ட மசோதாவாக கொண்டுவரப்பட்டது. இந்து சனாதனத்தில் ஊரித்திளைத்த திலகரோ, இது இந்து மதத்தினருக்கு விடப்பட்ட சவால் என்று கூறி துள்ளிக்குதித்தார்!. இந்துமத சம்பிரதாயங்களில் கை வைப்பதற்கு வெள்ளையனுக்கு எந்த அருகதையும் இல்லை என்றார்!.தனது “கேசரி” இதழில் பால்ய விவாகத்தை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார்!.இந்துக்களுக்கு எதிரான எந்த சட்டத்தையும் கொண்டுவர அனுமதிக்க மாட்டோம் என்று ஊர்தோறும் பேசித்திரிந்தார்!.

விநாயகர் அரசியல்!

விநாயகனை அரசியலாக்கி, மதவெறி அரசியலுக்கு அடித்தளம் அமைத்தவரும் இவர்தான். மகாத்மா புலே, சாகுமகாராஜ் ஆகியோர் மராட்டியத்தில் துவக்கிய “சத்ய சதக்” இயக்கம், பார்ப்பனரல்லாதாரிடத்தில் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது!. இந்துமதம் பார்ப்பனரல்லாதாரை தீண்டத்தகாதவர்களாக, சூத்திரர்களாக, வைத்திருப்பதை அவர்களுக்கு உணர்த்தியது!. விழிப்புற்று எழுந்த பார்ப்பனரல்லாதாரை மத போதையில் ஆழ்த்தி, அவர்களை தன் வயப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கினார் திலகர்!.

“சர்வஜன கணபதி விழா” என்ற பெயரில் விநாயகர் ஊர்வலங்களை நடத்தி, இஸ்லாமியர்களுக்கு எதிராக, இந்துமத வெறியூட்டி, பார்ப்பனரல்லாதாரை என்றென்றும் சூத்திரர்களாகவும்,பஞ்சமர்களாகவும் தங்கள் வாழ்க்கையைத் தொடர பல்வேறு யுத்திகளைக் கையாண்டார்.

விநாயகனின் வாகனம் எலி!

1897 ல் புனே, பம்பாய் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் “பிளேக்” எனும் கொடிய நோய் பரவி மக்கள் பெருமளவில் இறந்து போனார்கள். “பிளேக்” நோய்க்கு “எலி” முக்கிய காரணம் என்று கண்டறியப்பட்டது!. உதவி கலெக்டராக அப்போது பதவி வகித்துவந்த ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் ஆகியோர் கொண்ட குழு, “பிளேக்” மேலும் பரவாமல் தடுக்க தீவிரமாக செயல்பட்டது. அப்போது நோய்க்கு காரணமான எலிகளையும் ஒழிக்க முனைந்தது.

“விநாயகனின் வாகனமான எலியை ஒழிப்பதா?” என திமிறி எழுந்து தன் பஞ்சகச்சத்தை இறுக்கினார் திலகர்!. “எலிகளைக் கொல்லுவதன் மூலம் இந்துக்களின் மனதை பிரிட்டீஷ் அரசு புண்படுத்துகிறது” என்று அறிக்கை விடுத்தார்!.இதற்கெல்லாம் சற்றும் சளைக்காது, தன் கடமையிலிருந்து பின்வாங்காது செயல்பட்ட உதவிகலெக்டர் ராண்ட் டும், அயெர்ஸ்டும் “பிளேக்” நோயை முற்றிலுமாக ஒழித்து, பொதுமக்களிடத்தில் பெரும் செல்வாக்குப்பெற்றனர்.

 

கொலைவெறியை தூண்டிய திலகர்!

ஜேம்ஸ் என்கிற ஒரு பாதிரியார், ராண்ட்டுக்கும், மக்களுக்கும் இடையிலான இனக்கமான சூழலைப் பயன்படுத்தி, தீண்டப்படாத மக்களாக கருதப்பட்ட அவர்களிடம்,கல்வியின் அவசியத்தை எடுத்துக்கூறி அனைத்து மக்களும் கல்வி கற்பதற்கான ஏற்பாட்டினைச் செய்தார். ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் மீது ஏற்கனவே கோபம் கொண்டிருந்த பார்ப்பன இளைஞர்களுக்கு ஜேம்ஸ் பாதிரியாரின் செயல் மிகுந்த ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதை எதிர்த்ததோடு , பெண்களுக்கு கல்வி வழங்குவதை அறவே வெறுத்தவர் திலகர். “சூத்திரர்களும், பஞ்சமர்களும் கல்வியே கற்கக்கூடாது” என்று வெளிப்படையாகப் பேசியவர்!.

“வீரசிவாஜி இந்துமத நலனுக்காக, அப்சல்கானை கொன்றது சரிதான்” என்றும் “இந்துமதத்திற்கு எதிராக செயல்படுபவர்களை,சிவாஜி வழியில் நின்று கொன்றால் அது தேசபக்தியே யாகும்” என்றும் தனது “கேசரி” இதழில் எழுதி பார்ப்பன இளைஞர்களிடம் கொலைவெறியைத் தூண்டினார் திலகர்!.சனாதன வெறிபிடித்த பார்ப்பன இளைஞர்களான தாமோதரஹரியும், பாலகிருஷ்ணஹரியும், ராண்ட் மற்றும் அயெர்ஸ்ட் டை கொல்ல சதித்திட்டம் தீட்டினர்!.

விக்டோரியா மகாராணி பதவியேற்ற நாளின் வைரவிழா 1897ம் ஆண்டு வெகு சிறப்பாக நடைபெற்றது!. ராண்ட் டும், அயெர்ஸ்டும் அந்த விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில், அந்தப்பார்ப்பன காலிகளால், திட்டமிட்டபடி சரமாரியாக சுடப்பட்டனர். அயெர்ஸ்ட் அந்த இடத்திலேயே சரிந்தார்!. ராண்ட் உயிருக்குப் போராடிய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் இறந்துபோனார்!

கொலைக்காரர்களைப்பற்றி காவல்துறைக்கு தகவல் கொடுக்க முயன்ற ஆரிட் என்ற இளைஞனையும், ஜேம்ஸ் பாதிரியாரையும், அந்தக்கும்பல் வேறொரு நாளில் தீயிட்டு கொளுத்தி கொன்றது!. இந்து சனாதனத்தை காப்பாற்ற கலெக்டர் ஆஷ்துரையை சுட்டுக்கொன்ற வாஞ்சிநாத அய்யர் எப்படி சுதந்திரப்போராட்ட தியாகியாக சித்தரிக்கப்படுகிறாரோ, அப்படியே தாமோதரனும் பாலகிருஷ்ணனும் வரலாற்றில் தியாகியாக்கப்பட்டு விட்டார்கள்!.

கலப்புமண சட்டம்!

வித்திலபாய் படேல் என்பவர் மத்திய சட்டசபையில் 1918 ம் ஆண்டு கலப்பு திருமண சட்ட மசோதாவை கொண்டு வந்தார். தமிழ்நாட்டில் நீதிக்கட்சியும், மராட்டியத்தில் அம்பேத்கரும், சட்ட மசோதாவை ஆதரித்து பேசினர். திலகரோ, “பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதாரை திருமணம் செய்துகொண்டால், பார்ப்பனத் தன்மையை இழந்துவிடுவார்கள்” என்றார்.”அனுலோமத் திருமணங்களை ஆதரித்தால்,பிரதிலோகத் திருமணங்களை தடுக்க முடியாது” என்றும் எச்சரித்தார்.

(சபிக்கப்பட்ட உறவுகளுக்கு மனு வைத்த பெயர் “சங்கரமம்”. ஆண் மேல் சாதியாய் இருந்து, கீழ்சாதிப்பெண்ணை மணந்தால் “அனுலோம சங்கரமம்”. பெண் மேல் சாதியாய் இருந்து கீழ்சாதி ஆணை மணந்தால் “பிரதிலோம சங்கரமம்”. இப்படி திருமணம் செய்துகொள்வோரை சண்டாளர்கள் என்று சொல்லி அவர்களுக்கு கடுமையான தண்டனையை விதித்தான் மனு என்று கூறப்படுகிறது).

சூத்திரனுக்கு ஏது அரசியல் உரிமை?

பார்ப்பனரல்லாதாருக்கு அரசியல் உரிமை கோரி தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாதார் இயக்கங்கள் கோரிக்கை வைத்து போராடிய நிலையில் சென்னை வந்த திலகர் பொதுக்கூட்டம் ஒன்றில், “செக்காட்டும் செட்டியும், செருப்பு தைப்பவனும், துணி துவைப்பவனும் சட்டசபைக்கு வர நினைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.சூத்திரர்கள் சட்டத்திற்கு கட்டுப்பட்டவர்களே தவிர சட்டத்தை இயற்றுபவர்கள் அல்ல” என்று திமிராக பேசினார்.

 

“கீதா ரகசியம்” என்ற உரைநூலை எழுதி, மக்கள் கீதையை படித்து இந்துமத உணர்வு பெறவேண்டும் என்று கூறிய திலகர், இஸ்லாமியர்களுக்கு எதிரான போக்கை தொடர்ந்து கடைபிடித்து, இந்திய அரசியலை, இந்துமதக் கோட்பாட்டுக்குள் அடக்க முயற்சித்தார்.ஆர்.எஸ்.எஸ் தளகர்த்தராக விளங்கிய சாவர்க்கரையே இவர்தான் தயார் செய்தார் என்று சொல்லப்படுகிறது!

மனித மலமும், புளியந்தழையும்!

– கி.தளபதிராஜ்

சுமார் 55 வருடங்களுக்கு முன்னர்  மயிலாடுதுறை கண்ணாரத்தெரு பகுதியில் “ராமவிலாஸ்” (பிராமனாள் கபே) என்கிற ஹோட்டல் இருந்தது.அப்போது திராவிடர் கழகத்தில் அண்ணா இருந்த நேரம்.அண்ணாதுரை வாலிபர் சங்கம் என்ற அமைப்பு தீவிரமாக இருந்தது.ஒருநாள் ராமவிலாஸ் ஹோட்டல் உரிமையாளருக்கும் அண்ணாதுரை வாலிப சங்கத்தைச்சேர்ந்த ஒரு இளைஞருக்கும் ஏதோ பேச்சு வார்த்தை முற்றி ரகளையில் முடிந்தது.

அண்ணாதுரை வாலிபர் சங்கத்தில் நாங்கள் குடியிருந்த கேணிக்கரை பகுதியில் வசித்துவந்த டைலர் சொக்கன் பிரபலமானவர்.சம்பவம் நடந்த அன்று இரவு டைலர் சொக்கன் தலைமையில் அண்ணாதுரை வாலிபர் சங்கத்தினர், மனித மலத்தில் புளியந்தழையை கரைத்து , ராமவிலாஸ் ஹோட்டல் வாசல் முழுவதும் ஊற்றிவிட்டனர்.வழக்கம்போல் காலையில் கடையை திறக்க வந்த அய்யருக்கு துர்நாற்றம் குடலை பிடுஙக ஆட்களை கூப்பிட்டு எவ்வளவோ சுத்தம் செய்து பார்த்தும் நாற்றம் போனபாடில்லை.வெறுத்துப்போய் கடைசியில் ஒருவாரத்திற்கு கடையை மூடிவிட்டார்!.இது எங்கள் பகுதி பெரியார் தொண்டர்கள் சொல்ல கேட்டது.

இப்போது சீரங்கத்தில் ஒரு பார்ப்பான் “பிராமனாள் கபே” என்று போர்டு போட்டுள்ளானாம். தங்களை இழிவு படுத்துவதாக கூறி பலர் அந்த பெயரை மாற்றக் கோரியும் சட்டம் பேசிக்கொண்டு திரிகிறானாம்.இதைப்படிக்கும் போது சுயமரியாதை உள்ள எவருக்கும் ஆத்திரம் பீறிட்டு எழுவது இயற்கைதான்.அதற்காக தெருவில் கிடக்கிறது என்பதற்காக தோழர்கள் யாரும் மனிதமலத்தையோ புளியந்தழையையோ எடுக்க வேண்டாம்!