ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

பார்ப்பனியத்தின் மேலான திராவிடத்தின் தற்காப்புத் தாக்குதல் ஆரம்பித்து நூறு வருடங்கள் ஆகியுள்ள சூழ்நிலையில், திராவிடத்தின் துணைகொண்டு சமூகநீதி சட்டங்களால் மேல்தட்டுக்கு குடியேறிவிட்ட தமிழர்கள் சிலருக்கு, ஒருவிதமான சலிப்பு சமீபகாலமாக ஏற்பட்டிருக்கிறது. “ஏன், இன்னும் பார்ப்பனர்களையே தாக்குகிறீர்கள்?” என்ற கேள்வி அந்த சலிப்படைந்துவிட்ட மக்களுக்கு அடிக்கடி எழுகிறது. எந்த கொள்கையையும் அடுத்த தலைமுறையிடம் கடத்தும் போது அக்கொள்கைக்கான சமகால தேவையையும் உணர்த்தினாலேயொழிய அக்கொள்கையை ஏற்கும் பக்குவம் அத்தலைமுறையினருக்கு ஏற்படாது. ஆகவே சலிப்படைந்திருக்கும் சிலரின் கேள்விகளை நியாயமான கேள்விகளாகவே கொண்டு இக்கட்டுரையைத் தொடர்வோம்.

“ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?” என்ற கேள்விக்கு பார்ப்பனர்களே துக்ளக், தினமலர், விகடன், குமுதம் வாயிலாக மறைமுகமாக பதில் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் அதைப் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு அப்பாவிகளாக இருக்கும் தமிழர்களுக்கும் புரியவேண்டி, பெங்களூருவில் பார்ப்பனர்கள் உருவாக்கியிருப்பதுதான் “ஷங்கரா அக்கிரஹாரம்”! இந்த அக்கிரஹாரம் எனப்படும் குடியிருப்புப் பகுதி, “ஸநாதன தர்மா பரிக்ஷனா ட்ரஸ்ட்” என்ற நிறுவனத்தால் பெங்களூரூவில் உருவாக்கப்பட்டு வருகிறது. பார்ப்பனர்கள் மட்டுமே இப்பகுதியில் இடமோ, வீடோ வாங்க முடியும். பார்ப்பனர்களுக்கு மட்டுமே விற்பார்கள்! நவீன இந்தியாவில் அழிந்துவிட்ட, வேதகாலத்தில் நிலவிய அக்கிரகார சம்பிரதாயத்தை (அதாவது பார்ப்பனர்கள் மட்டுமே உள்ளே இருக்க முடியும், நடமாட முடியும்) மீண்டும் உயிரூட்டும் முயற்சி என இந்நிறுவனம் தனது விளம்பரங்களில் அறிவித்துள்ளது.

அடுத்து ஸ்ரீரங்கத்தில் முளைத்திருக்கிறது, ‘பிராமணாள் ஹோட்டல்’. “இதிலென்ன பிரச்சினை? அவன் ஒட்டலுக்கு அவன் இஷ்டப்படி பெயர் வைத்தால் உங்களுக்கு என்ன?”, என்றெல்லாம் வழக்கம் போல நம்மிடையே இருக்கும் சிந்தனாவாதிகள் சிலர் கேட்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே ஐயங்கார் பேக்கரி, செட்டியார் மெஸ், கோனார் கடை எல்லாம் இருக்கிறதே, ஆனால் ஏன் பிராமணாள் ஹோட்டலை மட்டும் எதிர்க்க வேண்டும்? என்ற கேள்வியும் கூடவே எழுகிறது! நியாயமான சந்தேகம் தான். ஆனால் ‘சாதி’க்கும் வர்ண பேதத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசத்தை உணர வேண்டும். பிராமணாள் ஓட்டல் என பெயரிட்டால் மற்ற ஓட்டலெல்லாம் சூத்திராள் ஓட்டல் என்றல்லவா அர்த்தம்? சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? சூத்திரன் என்றால் பன்றி போல் உழைப்பதற்காக கடவுளால் உருவாக்கப்பட்ட ஒரு ஜந்து, ஒழுக்கமில்லாத அன்னைக்குப் பிறந்தவன்! இப்படித்தானே வேதங்கள் கூறுகிறது! ஒரு தெரு இருக்கிறது, அந்த தெருவில் ஒருவன் மட்டும் தன் வீட்டின் முன், “இது நல்லவன் வசிக்கும் வீடு” என எழுதி மாட்டுகிறான் என்றால் என்ன பொருள்? மற்ற வீட்டில் வசிப்பவன் எல்லாம் திருடன் என்பதுதானே!! அதைத்தான் இந்த ‘பிராமணாள் ஓட்டல்’ செய்கிறது. இதைக் கேட்கும் நமக்கு நரம்பு புடைக்க கோபம் வரவேண்டாம், கொஞ்சமேனும் ரோசமாவது வரவேண்டாமா? இதற்கும் தினமலர் வக்காலத்து வாங்குகிறது. ஆனால் அதைப் படிக்கும் திராவிடத் தமிழர்களுக்கு அறிவு வேண்டாமா?

“நாங்கள் இந்துக்கள்” என ஆர்.எஸ்.எஸ்சிற்கும், பிஜேபிக்கும் குடைபிடித்தபடி பீற்றித்திரியும் எவனையும் பெங்களூரு ஷங்கரா அக்கிரகாரத்திற்குள் நுழைய அனுமதிக்க மாட்டார்கள். உடலில் நூல் நெளிந்து கிடந்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்! இந்து-சூத்திரன் கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் இங்கே வீடு வாங்க முடியாது! “இந்துமதத்தை மட்டும் ஏன் தாக்குகிறீர்கள்? அப்பாவிகளான பிராமணர்களை மட்டும் ஏன் தாக்குகிறீர்கள்?” என மதி இழந்து பொங்கும் சூத்திர இந்துக்கள் யாரும் இங்கே ஒரு ஓரமாக ‘கக்கூஸ்’ கூட கட்டிக்கொள்ள முடியாது!

சமீபத்திய சம்பவம் ஒன்றைப் பார்ப்போம். பாடகி சின்மயி இட ஒதுக்கீடு குறித்த தவறான, சாதிய ரீதியான கருத்துக்களை முன்வைக்கிறார். அதை சில இளைஞர்கள் எதிர்க்கிறார்கள். அடுத்து தமிழக மீனவர்கள் சுடப்படும் பிரச்சினை குறித்த விவாதத்தின் போது தான் ஒரு ‘சைவ பட்சிணி’ என்றும் மீன்களை கொல்வதில்லை என்றும் தேவையில்லாமல் திமிராகப் பேசுகிறார். அதையும் அந்த இளைஞர்கள் எதிர்க்கிறார்கள். எதிர்ப்பு ஒரு கட்டத்தில் கோபமாகி தரக்குறைவாகவும் சிலர் பேசிவிடுகிறார்கள். சின்மயியும் அவரது தாயாரும் அவர்களை ஆறுமாத காலமாக கண்காணித்து, ஃபோனில் அவர்களிடம் பேசி வலைவிரித்து ‘ஆதாரங்களை’ திரட்ட முற்படுகிறார்கள். இறுதியில் நேரடியாக கமிஷ்னரிடமே புகார் அளிக்கிறார்கள், (இவ்விடத்தில் நீங்களோ நானோ கமிஷனரிடம் நேரடியாக புகார் அளிக்க முடியுமா என்றும் சிந்தியுங்கள்!) உடனே கைது நடக்கிறது, குற்றவியல் வழக்குகள் பதியப்படுகின்றன. அந்த இளைஞர்களும் தத்தமது பணியிடங்களில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள். இதே சின்மயி மீது இப்போது சாதிய ரீதியிலான பேச்சுக்களுக்காக புகார் அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதே கமிஷனர் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாகச் சொல்லியிருக்கிறார்! விசாரணையே இல்லாமல், ஆதாரமே இல்லாமல் சில திராவிட இளைஞர்கள் கைது செய்யப்படலாம், ஆனால் ஆதாரங்களைக் காட்டியும் சின்மயி மீது நடவடிக்கை இல்லை! (இந்த இடத்தில் உங்களுக்கு சியோன் பள்ளியுயும், பத்மா சேஷாத்ரி பள்ளியும் நினைவுக்கு வரவேண்டும்) இணையத்தில் அந்த இளைஞர்களுக்கு நெருக்கமான, திராவிடத்திற்கு பார்ப்பனீயம் பரவாயில்லை என எழுதிய ‘புதிய தமிழ்தேசியவாதிகள்’, பார்ப்பனீயத்தின் கோர முகத்தை இப்போதேனும் புரிந்துகொண்டால் சரி!

“அவர்கள் முன்புபோல் இல்லை, திருந்திவிட்டார்கள்” என அடிக்கடி புலம்பித் திரியும் சக தமிழர்களே, ஏன் பார்ப்பனர்கள் ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தை எதிர்த்து வழக்கு போட்டிருக்கிறார்கள் என சிந்தித்தீர்களா? திராவிடர்கள் அர்ச்சகரானால் இந்துக்கடவுள்கள் அழுக்குப்படுவார்கள் என்றெல்லவா நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள்! இங்கிருக்கும் ‘நல்லவர்களான’ பார்ப்பன சங்கங்கள் அவ்வழக்கை எதிர்த்து ஒரு தீர்மானமாவது போட்டார்களா? இட ஒதுக்கீடு என்பது பொதுமக்கள் அனைவருக்கும் எதிரானது என வாய்கிழிய பேசும் ‘பார்ப்பனர்கள்’, மதம் சம்பந்தப்பட்ட வேலைகளில் தங்களுக்கு இருக்கும் 100% இட ஒதுக்கீட்டை ஏன் இழக்க மறுக்கிறார்கள் என யோசித்திருக்கிறீர்களா? மாட்டீர்கள்! ஏனெனில் உங்கள் மூளைக்கு தினமலரும், துக்ளக்கும் அல்லவா தீனி போட்டுக்கொண்டிருக்கிறது!

பார்ப்பனர்களுக்காக வழக்காடும் என் இனிய திராவிடத்தமிழர்களே!! பார்ப்பனர்கள் அரிவாள் எடுத்து வெட்ட மாட்டார்கள், ஆட்களுடன் ஆட்டோவில் வந்து கல்லெறிய மாட்டார்கள், ஆசிட் அடிக்க மாட்டார்கள். அவர்களைப் பார்த்தால் சர்வ அமைதியும் முகத்தில் வழியும் சாதுக்கள் போலத்தான் தெரிவார்கள். ஆனால் அமைதியாய் தினமலரிலும், துக்ளக்கிலும், குமுதத்திலும் எழுதுவார்கள். அவர்களின் பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக பேசுவார்கள், எழுதுவார்கள். இட ஒதுக்கீடு என்ற, அவர்களுக்கு மட்டுமே பிரச்சினையாய் இருக்கும் ஒரு விஷயத்தை ஒட்டுமொத்த இந்திய வளர்ச்சிக்கே எதிரான பிரச்சினையாக எழுதி எழுதி திரிக்கிறார்களே அதைப்போல! உங்களுக்காக பேசுவது போல் பேசி, உங்களுக்கெதிராக உங்களையே பேச வைப்பார்கள். நீங்களும் பேசுவீர்கள், அவர்களுக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பீர்கள். சூப்பர் சிங்கர், ஜூனியர் சாம்பியன் என அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவாளே நீதிபதி, அவாளே வெற்றியாளர் என இருப்பதை பார்த்துக்கொண்டுதானே இருக்கிறீர்கள்! உங்களுக்கே தெரியாமல் உங்கள் குழந்தைகள் கைதட்டிகளாகவே காலம் கழிக்குமேயொழிய, மேலெழும்ப விடமாட்டார்கள். காலம்காலமாக திராவிடத் தமிழினம் ஒன்றுபட முடியாமல், ஒரே கொடையின் கீழ் இயங்க முடியாமல் இருப்பதற்கு பார்ப்பனீயத்தின் குணத்தை புரிந்துகொள்ளாமல் இருப்பதுதான் காரணம்! அக்கிரஹாரம், பிராமணாள் ஓட்டல், அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டத்துக்கு தடை, திராவிடர்களின் மேல் பொய்வழக்கு, இட ஒதுக்கீட்டுக்கு எதிரான பொய்ப்பரப்புரை என மீண்டும் 1900கள் திரும்பிக்கொண்டிருக்கிறது. இப்போது விழித்தெழவில்லையெனில், திராவிடர்களான நம் மீது சமாதியெழுப்பி விடுவார்கள் என்பதை அனைத்து திராவிடத்தமிழர்களும் புரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான நேரமிது!

– டான் அசோக்

One Response to ஏன் பார்ப்பனர்களை இன்னமும் விமர்சிக்க வேண்டியதிருக்கிறது?

  1. vaishnavi says:

    excellent article anna:):):)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *