திசைகாட்டும் கருவிகள்

இந்தி எதிர்ப்பு
மாநாடு!
ஈரோடு எங்கும்
கொடிக்காடு!

அகங்காரம்
அறுத்தெரிந்த அண்ணா
அலங்கார வண்டியில்
அமர்ந்திருக்க…

தம்பிக்குப் பின்னால்
தடியூன்றி
தள்ளாடித் தள்ளாடி
தாடிக்கிழவன்
நடந்து வர…

ஊர் மெச்சிய
ஊர்வலம்
உற்சாகமாய்
அரங்கேறிற்று!

வழி நெடுகிலும்
குழுமியிருந்த கூட்டம்…
அய்யாவின்
பனித்துளி நிகர்த்த
பாசம் பார்த்து
கண்ணீர்த்துளிகள்
உதிர்த்தன

கரைபுரண்ட
களிப்போடு!
எனக்கு வயது
எழுபதைத் தாண்டிற்று!

என் முதுமை
என் முதுகில் தட்டி…
பெட்டிச் சாவியைப்
பிள்ளையிடம்
கொடு என்று
வேண்டிற்று!

மாநாட்டு மேடைதனில்
களங்கமற்ற
அய்யா பேச்சு – அவரை
வணங்கிடச் சொன்னது
வந்திருந்தோரை!

அண்ணன் தம்பி உறவு
அறுபட்டுப் போயிற்று!
தந்தை தனயனாயினர்
தம்பியும் அண்ணனும்!

கூடுதலாய் கூடுதல்
குற்றமோ என்னவோ?
பிரிவு என்னும்
பேராயுதம்
பரிவு காட்ட மறுத்தது!

உரசல்களில்லா
உறவுகள் ஏது?
ஒரு கூட்டுப் பறவைகள்
இருவேறு திசைகளில்
மனமின்றி பறந்தன!

பேராசான் பிறந்தநாளில்
பிறந்தது
பேரறிஞரின்
தி.மு.க. எனும்
திராவிடக் குழந்தை!

இரட்டைக் குழல்
துப்பாக்கிகளாகின
இருவர் இயக்கமும்!

அறிவாசனின்
அடுக்குமொழி முழக்கம்
துடிப்பான களப்பணி
வெற்றிக் கனியாகி
விழுந்தது அவர் மடியில்!

ஆட்சி கிடைத்ததும்
ஆசானை மறந்துவிட
மனிதர்களால் முடியும்
மகான்களால் முடியுமா?

அன்னை கரங்களில்
பிள்ளை விழுவதுபோல்
அய்யா கரங்களைப்
பற்றி – அண்ணா
வணங்கிய காட்சி…
கோடிக் கண்களுக்கு
குதூகலம் தந்தன!

தமிழனின்
தனித்துவத்தை
தரணியில் உயர்த்திய
தந்தை சொன்னார்…
என் அந்தஸ்தை
கூட்டிட்டார் – என்
இளவல்
அண்ணா என்று!

கோட்டையில் – திராவிடக்
கொடி உயர்த்திய -அண்ணா
எட்டுத் திசைகளிலும்
கொட்டி முழங்கினார்!
நான் கண்டதும்
கொண்டதும்
அய்யா ஒருவரே என்று!

திராவிட இனத்தின்
திசைகாட்டும் கருவிகள்
அய்யா அண்ணா
புகழுக்கு அழிவேது?
இந்த இருவருக்கும் நிகர் ஏது?

கவிஞர். மணிவேந்தன்.
மாநில இளைஞர் அணித் துணைச் செயலாளர்
மதிமுக.
நன்றி :- சங்கொலி