பெரியாரின் மீது சேறள்ளி வீச இன்னுமொரு கை..

1968 ஆம் ஆண்டு சத்தியவாணி முத்துவின் மகளும் அப்போதைய மேயர் வேலூர் நாராயணன் மகனும் திருமணம் செய்துக்கொள்ள விரும்ப, வேலூர் நாராயணன் சத்தியவாணியின் சாதியை சொல்லி தன் மகனிடம் விமர்சித்த சூழலில், நாராயணன் பிறந்தநாள் விழாவில் பேச அழைக்கப்பட்ட பெரியார் அச்சம்பவத்தை மனதில் கொண்டு காட்டமாக அவ்விழாவில் பேசினார்.பெரியாரின் கடைசி பேட்டியிலும் கூட நிரப்பப்படமால் இருக்கும் காவலர் பணி முழுமைக்கும் தலித் மக்களைக் கொண்டு நிரப்பப்படவேண்டுமெனக் கூறுகிறார்.
#

சற்றுத்தாமதமாகவே கார்ட்டுனிஸ்ட் பாலா வரைந்திருந்திருக்கும் இந்த கார்ட்டூனைப் பார்க்கநேர்ந்தது. பெரியார் மீது பெங்களூர் குணா,லிட்டில் ஆனந்த், ரவிக்குமார், சில தமிழ்த்தேசியவாதிகள் உள்ளிட்ட சிலர் சேறள்ளி பூசுவதில் இப்போது இன்னொரு கையாக பாலா சேர்ந்திருக்கிறார். இடைநிலைச்சாதிகளும், முற்போக்கு காரர்களும் பெரியாரின் முதுகுகில் கத்தி வைத்து மிரட்டியதால் பெரியார் பார்ப்பனர்களை தலைத்தெறிக்க ஓடச்செய்தார் என்பதாக இருக்கிறது இந்தப்படம். கொஞ்சமும் அறிவுநேர்மையின்றி வரையப்பட்டிருப்பதாகவே நான் கருதுகிறேன். இன்னும் விளக்கமாக சொல்வதென்றால் பெரியாரை தலித் விரோதியாக கட்டமைக்கமுயல்கிற ரவிக்குமாரின் கரத்தை வலுப்படுத்தும்
விதமாகவே இது வரையப்பட்டிருக்கிறது. பார்ப்பனிய காலச்சுவடு [ரவிக்குமார் ஆசிரியர் குழுவிலிருந்த போது] பெரியாரின் 125 ஆண்டு நினைவாக கொண்டுவந்த இதழில் பெரியாரின் மீது ரவிக்குமார் சகட்டுமேனிக்கு சேறள்ளி பூசியிருப்பார். அவரை ஒரு தலித் விரோதியாகவும் பொம்பளை பொறுக்கியாகவும் காட்டமுயன்றிருப்பார். அதை பெரியாரிஸ்ட்கள் தக்க பதிலளித்து முறியடித்தனர். ஆனாலும் தளராது அந்த பணியில் இன்றும் பலரும் செயலாற்றி வருபவர்களுடன் பாலாவும் இணைந்திருப்பதைத்தான் இந்த படம் நமக்கு தெரிவிக்கிறது. இன்னும் எத்துனை பேர் அப்பணியில் இறங்கினாலும் பெரியாரிஸ்ட்டுகள் அவர்களுக்கு தக்க பதிலளிப்பார்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது.

– விஷ்ணுபுரம் சரவணன்