நூல்களின் ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழித்துக்கட்ட வேண்டும்

சென்னை, மே 19-

நூல்களால் ஏற்பட்ட ஆதிக்கத்தை சுப.வீ. போன்றவர்களின் நூல்களாலேயே ஒழிக்க வேண்டும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி.

திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் அவர்களின் 5 நூல்கள் வெளியீட்டு விழா சென்னை காமராசர் அரங்கில் 15.5.2012 அன்று மாலை நடைபெற்றது. அவ்விழாவில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றுகையில் குறிப் பிட்டதாவது:

மிகுந்த எழுச்சியோடு தேவையான நேரத்தில், தேவைப்படும் கருத்துகளை சுவையான தகவல் களஞ்சியங்களாகவும், சுயமரியாதைச் சூரணங் களாகவும் சிறப்பாக யாத்து யாருடைய கரங்க ளாலே அது வெளியிடப்பட்டால் திராவிடத்தால் எழுந்தோம் என்பது இதோ உண்மையாகிறது என்ற பெருமைக்கு நாம் ஆளானோம் என்ற முறையிலே, அத்தகைய  ஒப்பற்ற தலைவருடைய தலைமையிலே வெளியிடக்கூடிய நூல்  வெளியீட்டு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்து 5 நூல்களையும் வெளியிட்ட, டெசோ அமைப்பினுடைய தலை வரும் பல்வேறு இன எதிரிகளுடைய தாக்குதல் களை தன்மீது விழுகின்ற பூச்சரங்கள் என்று கருத்தக்கூடிய தந்தை பெரியாரிடத்தில் பயின்ற, அண்ணாவிடத்தில் கண்ணியத்தைக் கற்ற – 89,90 என்று வயது வளர்ந்து கொண்டே இருப்பதைப் போல், அவருடைய உழைப்பும் வளர்ந்து கொண்டே இருக்கிறது என்ற பெருமைக்குரிய எங்கள் இனத் தலைவர் அசுர குலத்தினுடைய தலைவர் (கைதட் டல்), இராவணனின் பேரன், என்றென்றைக்கும் இந்த இனம் வாழும், வளம்பெறும் – பழைய இராமாயணத்தில் இராமன் வெற்றி பெற்றான்.

புதிய இராமாயணத்தில் இராவணன் மீண்டும் எழுவான் என்ற வரலாற்றை படைக்க இருக்கிற எங்கள் குலத் தலைவர் கலைஞர் அவர்களே!

இந்த அற்புதமான நிகழ்ச்சியிலே 5 நூல்களை சரியான நேரத்திலே இந்த சமுதாயத்திற்கு தந்திருக்கக்கூடிய பீரங்கி வயிற்றிலே பிறந்த வெடி குண்டான சுயமரியாதை வீரர் அன்பிற்குரிய அருமை சகோதரர் மானமிகு சுப.வீ. அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே நூல்களைப் பெற்றுக் கொண்ட மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணை அமைச்சரும், ஆழ்வார் பாசுரங்களையெல்லாம் பகுத்தறிவு மேடையில் பயன்படுத்தி அவைகளை யெல்லாம் பகுத்தறிவுக் கணைகளாக மாற்றிக் கொண்டிருக்கும் எங்கள் அன்பிற்குரிய அமைச்சர் அருமை ஜெகத்ரட்சகன் அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே எதிர்பாராமல் வந்து கலந்துகொண்டாலும், எங்கள் எதிர்பார்ப்பை எப்போதும் நிறைவேற்றிக்கொண்டிருக்கக்கூடிய இனமானக் கவிஞராக, இருக்கக்கூடிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களே! இந்த நிகழ்ச்சியிலே அற்புதமான ஆய்வுரையை குறளைப்பற்றி நிகழ்த்திய அருமை மேனாள் துணை வேந்தர், கல்வி அறிஞர் அவ்வையார்  அவர்களே!

இந்த நிகழ்ச்சியிலே அற்புதமான கருத்து ஓட்டத்தை எந்த மேடையாக இருந்தாலும் கொள்கை வீச்சாகவே ஆக்கிக்கொண்டிருக்கக் கூடிய எங்கள் இன உணர்வின், மொழி உணர்வின் சின்னமாக திகழ்ந்து கொண்டிருக்கக் கூடிய  அருமைப் பேராசிரியர் அப்துல்காதர் அவர்களே! சிறப்பாக இந்த நூல்களை வெளியிட்ட வானவில் பதிப்பகத்தின் உரிமையாளர் அன்பு சகோதரர் புகழேந்தி அவர்களே! சுப.வீ. அவர்களுடைய இவ்வளவு பெரிய பொதுத்தொண்டுக்கு அடித்தளமாக இருந்து – எப்போதுமே அஸ்திவாரங்கள் புதைந்திருக்கும் அதன் மீதுதான் கட்டடங்கள் அமைந்திருக்கும் அத்தகைய சிறப்பிற்குரிய அவருடைய வாழ்விணை யர் அன்பிற்குரிய சகோதரியார் அவர்களே!

இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருக்கக்கூடிய சான்றோர் பெருமக்களே! தாய்மார்களே! கழகத் தோழர்களே! பகுத்தறிவாளர்களே! திராவிடத்தால் எழுந்தது உண்மை என்று காட்டக்கூடிய அருமை நண்பர்களே! உங்கள் எல்லோருக்கும் அன்பான வணக்கம்.

சுப.வீ  நூல்கள் வெளிட்டு விழா

திராவிடத்தால் எழுந்தோம் நூல் வெளியீட்டு விழா

இலக்கு தவறாத ஏவுகணை

பேராசிரியர் சுப.வீ. அவர்கள் அற்புதமானதொரு இலக்கிய சிந்தனையாளர்தான். ஆனால், நமது கவிப்பேரரசு  முன்னால் சொன் னதைப் போல் அவர் மாணவர் பருவத்திலிருந்து தெளிவான இலக்கோடு இயங்கியவர். இயங்கிக்கொண்டி ருப்பவர். இலக்கு + இயம் என்று சொல்லுகிற போது குறிக்கோளோடு இலக்கை நோக்கி செல்வதுதான்.

இந்த ஏவுகணை இருக்கிறதே இது என்றைக்கும் இலக்கைத் தாண்டியதே கிடையாது. இலக்கை விட்டதும் கிடையாது. அந்த அடிப்படையிலே அவரது 5 நூல்கள் இங்கே வந்திருக்கின்றன. இதை தனியாக ஓர் ஆய்வரங்கமாக நடத்த முடியாது. உங்களைப் போலவே கலைஞர் அவர்களுடைய உரையைக் கேட்க வேண்டும் என்று நாங்களும் மிகுந்த ஆவலோடு இருக்கின்றோம்.

அந்த நிலையிலே ஒன்றே ஒன்றை உங்களுக்கு சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், 5 நூல்கள்; ஒன்று குறளைப் பற்றிய ஆய்வு, ஒன்று தன்னுடைய வரலாறு. சூழல், பொதுவாழ்க்கையிலே எப்படி இருந்திருக்கிறார் என்பதைப் பற்றியது.

அதே போல இன்னொன்று. ஒரு புதினம் போல இருக்கக்கூடியது. மற்றொன்று ஏற்கெனவே பெரியாரின் தமிழ்த்தேசியம் பற்றி வந்து விரிவாக்கப்பட்ட நூல்; அதே போல திராவிடத்தால் எழுந்தோம் என்று சொல்லக்கூடிய – இன்றைய காலகட்டத்திற்கு மிக மிகத் தேவையான – பாவலர் அவர்கள் குறிப்பிட்டதைப் போல, தெளிவான அற்புதமான நூல் ஆகிய இந்த 5 நூல்களும் ஒரே இலக்கை நோக்கித்தான் பயணித்துக்கொண்டிருக் கின்றன.

அந்த இலக்கு பகுத்தறிவு இலக்கு. சுயமரி யாதை உலகத்தை நோக்கி மக்களை அழைத்துச் செல்கின்ற ஓர் அற்புதமான இலக்காகும்.

நூல்களால் ஏற்பட்ட தொல்லைகள்

மிக அழகாக சொன்னார் அப்துல்காதர் அவர்கள். இந்த நூலை எடுத்தேன் வைக்க முடிய வில்லையென்று. இந்த நூல் ஒவ்வொருவருடைய கையிலும் இருக்க வேண்டும். நீங்கள் அத்தனை நூல்களையும் வாங்க வேண்டும் என்பதல்ல. படிக்க வேண்டும். படித்து மற்றவர்களுக்கும் பரப்ப வேண் டும். அதுதான் இந்த நூலரங்க வெளியீட்டிலே மிக முக்கியமானது. நூல்களால் ஏற்பட்ட தொல் லையை நூல்களை வைத்தே நாம் ஒழிக்க வேண்டும் (கைதட்டல்).

ஏனென்றால், அந்த நூல்கள்தான் நாம் கால் களிலேயும், அதற்குக் கீழேயும் பிறந்தவர்கள் என்று சொன்னவை. நாங்கள் கால்களிலேயே பிறந்தவர்கள் என்று சொன்னீர்கள். எங்கள் மூளைக்கு ஒப்புமை யாருக்கும் கிடையாது என்று சொல்லக்கூடிய ஆதாரங்களைத்தான் இங்கே அற்புதமாக படைத்துக் காட்டியிருக்கிறார் அன்பு சகோதரர் சுப.வீ.அவர்கள் காரணம் அவர் சமதர்ம விலாசிலே பிறந்தவர்.

சமதர்ம விலாஸ்

காரைக்குடி இராம.சுப்பையா முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர். சுயமரியாதை இயக்கக் காலத்திலேயே இருந்தவர். இங்கே சொன்னார்கள். அவருடைய இல்லத்திற்கு பெயரே – அந்தக் காலத்தில். 1930களிலே எங்களை போன்றவர்கள் பிறக்காத காலத்திலேயே அந்த இல்லத்திற்கு பெயர் சமதர்ம விலாஸ். அப்படிப்பட்ட அந்த நிலையிலே சமதர்ம விலாசிலே இருந்து, சுயமரியாதைக் குடும்பத்திலேயிருந்து சுயமரியாதை தாலாட்டைப் பெற்ற ஒருவர், அவருடைய எழுத்துகள் எல்லாம் சாதாரணமாக அல்ல, தீப்பொறிகளாக குப்பை களை சுட்டெரிப்பதற்கு அதே நேரத்தில் மிகப்பெரிய அளவுக்கு எழுச்சியை ஏற்படுத்துவதற்கு பயன் படுத்தக்கூடியதாக இருக்கிறது.

இனத்திற்கு ஏற்பட்டுள்ள சோதனைகள்

இன்றைய காலகட்டத்திலே நம் இனத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய ஒரு சோதனை சாதாரணமான சோதனை அல்ல. அது ஏடுகளாக இருந்தாலும் சரி, ஊடகங்களாக இருந்தாலும் சரி அல்லது புத்தகங்களாக இருந்தாலும், மற்றவைகளாக இருந்தாலும் எதுவாக இருந்தாலும் சரி.

நாம் கவனத்தோடு, இந்த இனம் மீண்டும் எழுந் தோம் என்று சொல்லக்கூடிய அந்த உறுதியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்கு முதலிலே நமக்குத் தெரிய வேண்டிய செய்தி ஒன்றுண்டு; அதுதான் இந்த நூல், அதற்குத்தான் கோடிட்டு காட்டுகின்ற வழிகாட்டியாக இந்த நூல் இருக் கின்றது.

எதிரிகள் யார்? நண்பர்கள் யார்?

நம்முடைய எதிரிகள் யார்? நண்பர்கள் யார்? யாரை நம்புவது? யாரை எதிர்க்க வேண்டும்? இதை நாம் தெளிவாக அடை யாளம் கண்டு கொள்ளாவிட்டால் நம்முடைய இனம் மீண்டும் மீண்டும் விழும். தவத்திரு குன்றக்குடி அடிகளார் சொன்னதை நான் பல மேடைகளிலே, எனக்கு மிகவும் பிடித்த கருத்தியல் என்ற அடிப்படையிலே நான் சொல்லுவதுண்டு. தமிழனைப் பற்றி எனக்கிருக்கிற கவலை யெல்லாம் அவன் விழுகிறானே என்பதைப் பற்றி அல்ல.

நேற்று விழுந்த இடத்திலேயே இன்றைக்கும் விழுகிறானே அதுதான் எனக்குக் கவலை என்று சொல்வார். விழுந்துதான் தொலைந்தான் ஒரு புது இடத்தில் விழுந்து தொலைக்கக் கூடாதா? நேற்று விழுந்த இடத்திலே முந்தாநாள் விழுந்த இடத்திலேயே விழுகிறானே – ஏதோ அழகர் ஆற்றுக்கு வந்து திரும்பத் திரும்ப போகிறார் அல்லவா? அதுபோல நடந்து கொண்டிருந்தால் அதற்குப் பொருள் என்ன?

எனவேதான் தமிழர்கள் இந்தக் கால கட்டத் திலே தங்களுடைய எதிரிகளை அடையாளம் காண வேண்டும். அதற்காக இன எதிரிகள் மிகவும் சாமர்த்தியமாக என்ன செய்தார்கள் என்றால், நமக்குள்ளே பிரித்துக்கொள்ள வேண்டும்.

அதற்குத் தானே வர்ணாஸ்ரம தர்மம். அதுதானே மனுதர்மம். குறளைப் பற்றி ஏன் அவர்கள் சிந்தித்தார்கள்? வள்ளுவர் செய் திருக்குறளை மறுவற நன்குணர்ந் தோர் உள்ளுவரோ மனுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி? எனவேதான் வள்ளுவர் குறளே, ஆரிய கலாச் சாரத்தை ஆரிய பண்பாட்டை அது நுழைந்து கொண்டிருந்த போது தடுப்பதற்காக உருவாக்கப் பட்ட அந்த படை யெடுப்பை தடுப்பதற்காக ஏவப் பட்ட ஏவுகணை.

திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்ல வைத்து விட்டனவே

குறள் என்பது வெறும் இலக்கியமல்ல. நம்முடைய பார்வையிலே ஆரியத்தால் விழுந்து கொண்டு இருந்த சமுதாயத்தை விழாதே என்று எச்சரித்தது. அதையும் தாண்டி விழுந்ததால் தான் இன்றைக்கு வர்ணாஸ்ரம தர்மத்தில் சிக்கிச் சீரழிந்து கொண்டிருக்கிறோம். அந்த வகையில் இன்றைக்கு நம்முடைய இனத்தைப் பிடித்தே திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்ல  வைத்துவிட்டார்கள் என்றால், நம்முடைய எதிரிகள் என்னென்ன செய்வார்கள் என்பதை அற்புதமாக இந்தப் புத்தகத்தில் எடுத்துக்காட்டி யிருக்கிறார் நம் முடைய சுவ.வீ. அவர்கள்.

பெரியாரின் போர் முறை பற்றி அண்ணா

ஏனென்றால் நேரடியாக அவர்கள் வர மாட்டார்கள். அண்ணா அருமையாக சொன்னார். பெரியாரின் போர் முறை இருக்கிறதே – அது கண்ணுக்கு தெரிந்த எதிரிகளை மட்டுமல்ல; மூல பலம் எங்கிருக்கிறதோ அங்கே சென்று அதை முறியடிப்பதுதான் பெரியாரின் போர்முறை என்று அறிஞர் அண்ணா சொன்னார்.

அதன் அடிப்படை என்ன? அதைப் புரிந்துகொண்டால் நிச்சயமாக நம்முடைய இனம் எழுந்து நிற்கும். நிற்பது மட்டுமல்ல வெல்லும். அந்த உணர்வுக்கு வருகிற போது, இந்த நூலிலே முன்னுரையிலே மிக அழகாக ஒரு செய்தியை சுட்டிக்காட்டுகிறார் சுப.வீ.

எக்ஸ்ரே போன்ற நூல்கள்

திராவிட இயக்கத்தின் அடிப்படை கோட்பாடு கள் என்று, தமிழின, மொழி உணர்வு, சமூகநீதி, பகுத்தறிவு, ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இந்த மூன்றுமே பார்ப்பனியத்துக்கு நேர் எதிராக அமைந்தன. இதில் ரொம்பத் தெளிவாக, அவர் எந்த சமரசமோ மற்றதோ செய்து கொள்ளவில்லை. மிக ஆழமான செய்திகளை இன்றைக்கு இருக்கிற சூழல் என்ன என்பதை மிக அப்பட்டமாக, எக்ஸ்ரே கருவியைப் போன்று, அந்தக் கருவி எப்படி சமுதாயத்தை படம்பிடித்து காட்ட முடியுமோ அப்போதுதான் நோயுற்றவர்களுக்கு சிகிச்சையை சரியாக செய்ய முடியும் என்ற உணர்வோடு இங்கே சொல்கிறார்கள்.

எனவே திராவிட இயக்கத்தை வீழ்த்தாமல் பார்ப்பனியம் மீண்டும் இம்மண்ணில் தலைவிரித்து ஆட முடியாது என்பதில் பார்ப்பனர்கள் உறுதியாக உள்ளனர். அதனால், திராவிட இயக்க எதிர்ப்புப் போரை அவர்கள் தொடர்ந்து நடத்திக் கொண்டுள் ளனர். இதுதான் எதார்த்தமான இன்றைய நிலை. அடுத்து சொல்கிறார். அவர்களின் இந்த அநீதிப் போருக்கு இங்கே திராவிடர்கள் பலரே பலியாகி இருப்பதுதான் தாள முடியாத வேதனை. காலம் காலமாக இராமாயண காலம் தொட்டு விபீஷணனால்தான் அவன் வெற்றி பெறுகிறான்.

பிரகலாதனால்தான் அவன் வெற்றி பெறுகிறான். இது காலம் காலமாக, அதனால்தான் விபீச ணனைப் பற்றி சொல்லும் போது சிரஞ்சீவின்னு சொன்னான். சிரஞ்சீவின்னா என்ன அர்த்தம்? நிரந்தரமா இருப்பான் என்று அர்த்தம். நிரந்தரம் என்றால் விபீசணர்களின் உருவம் மாறும். ஆனால், தத்துவம் ஒன்றாகத்தான் இருக்கும். அன்று முதல் இன்று வரையிலே.

பலன் பெற்றவர்களே பழி கூறுகிறார்களே

திராவிட இயக்கத்தினாலே பயன்பெற்று, திராவிட இயக்கத்தினாலேயே படித்து, வகுப்புரிமை யினாலேயே உயர்ந்து, வகுப்புரிமையினாலே பலன் பெற்று, திராவிட இயக்கத்தால் மானம் பெற்று உயர்ந்தவன்.

திராவிடர் இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறான் என்று சொன்னால், யார் பலன் பெற்றானோ அவனையே கேட்க வைத்தான் பாருங்கள். இதுதான் அவாள் டெக்னிக்லே மிக முக்கியமானது. புரிந்துகொள்ள வேண்டும்.

இதைத்தான் சொன்னார்கள். இப்படி பலியாகி இருப்பதுதான் தாங்க முடியாத வேதனை. அவர்கள் எதிர் நின்று எதிர்ப்பதில்லை. வாலியை எதிர்நின்றா வீழ்த்தினர்? இராமன் என்ற கடவுள் அவதாரமே எதிர்நின்று வீழ்த்தவில்லையே.

இராஜகோபாலாச்சாரியர் எழுதிய சக்கரவர்த்தி திருமகன் என்ற நூலில்கூட இந்த இடம் ரொம்ப சிக்கலானது. அதனாலே நான் வக்காலத்து வாங்க விரும்பலன்னு சொல்லிவிட்டு, விளக்கம் சொல்ல விரும்பாமலே விட்டுட்டாரு. அவர்கள் எதிர் நின்று எதிர்ப்பதில்லை. நம் விரலைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் சதி வேலைகளில்தான் அவர்கள் ஈடுபடுகிறார்கள்.